ஓட்டுக்குப் பணம் தர மாட்டேன்: கமல்ஹாசன்!!

சில கட்சிகள் ஓட்டுக்கு 5,000 ரூபாய், 6,000 ரூபாய் தருகிறது. ஆனால், நான் ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று (மே 5) பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடம் வாக்கு கேட்டு பேசிய கமல்ஹாசன், “அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களும் சொல்ல வேண்டும். அந்தப் பாதையில்தான் மக்கள் நீதி மய்யம் செயல்படும்” என்றார். தொடர்ந்து பேசுகையில், “மக்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்குச் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலைமையைத் திரும்பக் கொண்டுவர வேண்டும்.


அதற்குத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உங்கள் சேவகனாக மநீம வேட்பாளர் சக்திவேல் இருப்பார். அவர் வெற்றி பெற்று உங்களுக்காக வேலை செய்யவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். அவரிடம் நான் விளக்கம் கேட்பேன். சரியாகப் பதில் சொல்லவில்லை என்றால் அவரிடமிருந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வைப்பேன்” என்றார். ஒரு ரூபாய் கூட ஓட்டுக்குப் பணம் தர மாட்டேன் என்றும், ஒரு ரூபாய் கூட மக்கள் வரிப் பணத்தை எடுக்க மாட்டேன் என்றும் கூறிய கமல்ஹாசன், “மநீம பெரும்பான்மையுடன் வென்றால் எங்கள் கனவுகள், உங்கள் கனவுகளாக மாறும். அந்த நம்பிக்கையுடன்தான் நான் களமிறங்கினேன். என்னை நான்கு வயதில் இருந்து போற்றிப் பாதுகாத்து வரும் மக்களுக்கு என்னால் காசாக திருப்பிக்கொடுக்க முடியாது.


 ஓட்டுக்கு 6,000 ரூபாய், 5,000 ரூபாய் என்றெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், என்னால் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. அது உங்களுக்குப் பிரயோஜனமும் அற்றது. உங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் அதை விடப் பெரிதாக வேறொன்றும் இல்லை. அதற்கு என் வாழ்நாளை அர்ப்பணிப்பதுதான் நான் எடுத்த இம்முடிவு. இதை நான் பெரிய தியாகமாகச் செய்யவில்லை. அதற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.