பாகிஸ்தான் ஏதிலிகளை வடக்கில் தங்க வைப்பதா?

நீர்கொழும்புப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளை வடக்கு மாகாணத்தில், வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.


இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்றைய தினம் வவுனியா வுக்கு வருகை தந்து வெளிநாட்டு ஏதிலிகளைத் தங்க வைப்பதற்கான இடங்களைப் பார்வை யிட்டுள்ளதான செய்திகளும் வெளியாகியுள்ளன.

தன்நாட்டு மக்களை ஏதிலிகளாக வெளிநாடுகளுக்குத் துரத்திய ஒரு நாடு வெளிநாட்டு ஏதிலிகளைப் பொறுப்பெடுத்துப் பராமரிப்ப தென்பது பெற்ற தாயைப் பராமரிக்காத சிலர் வறுமை ஒழிப்புக்கு உதவுகின்ற கதையாகத் தான் இருக்கும்.

பரவாயில்லை அந்தரித்து அகதி என்று ஓடி வந்தவர்களை வாழ வைப்பது அடிப்படைத் தர்மம் என்ற வகையில் அந்தப் பணியை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் கடந்த ஆறு வருடங்களாக நீர் கொழும்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு ஏதிலிகளை வடக்கு மாகாணத்தில் தங்க வைப்பது பொருத்தமானதா என்ற விடயத்தை பல தடவைகள் சிந்தித்தாக வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்றுவிட,இலங்கை இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் இருந்தது என்பதற்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரு வரைக் கைது செய்தது என்றால், வடபுலத்தின் மீதான பாதுகாப்புப் படையினரின் எண்ணப்பாடு என்னவாக இருக்கிறதென்பது புரிதற்குரியது.

நிலைமை இதுவாக இருக்கையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தங்கவைப்பதென எடுக்கப்படுகின்ற தீர்மானம் எதற்கானது என்பதுதான் புரியாமல் உள்ளது.

வெளிநாட்டு ஏதிலிகளை நீர்கொழும்பில் தங்கவைப்பது பாதுகாப்பு இல்லை என்றால்,
வவுனியாவையும் யாழ்ப்பாணத்தையும் தவிர, தென்பகுதியில் பாதுகாப்பான இடங்கள் இல்லையா என்ற கேள்வியும் எழவே செய்யும்.

எனவே பாகிஸ்தான் ஏதிலிகளை வடக்கில் தங்கவைப்பதற்குள் ஏதேனும் வில்லங்க நோக்கம் இருக்குமா? என்பதை ஆழ்ந்து சிந்திப்பது வருமுன்னர்க்காக்கும் செயலாகும்.

தவிர, பாகிஸ்தான் ஏதிலிகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைக்க அங்கிலிக்கன் திருச்சபை முடிவு செய்துள்ளதான தகவல்களும் உண்டு.

அவ்வாறு முடிவு செய்யப்பட்டிருந்தால் அது மிகப்பெரும் தவறான முடிவாகும்.
ஏதிலிகளைப் பராமரிக்கின்ற பொறுப்பை அங்கிலிக்கன் திருச்சபை மனிதாபிமான அடிப் படையில் செய்யலாம்.

ஆனால் ஏதிலிகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைப்பது என்ற முடிவை அவர்கள் தன் னிச்சையாக எடுக்க முடியாது.

அவ்வாறு எடுத்து ஏதேனும் விபரீதங்கள் நடந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் அங்கிலிக்கன் திருச்சபை ஏற்றாக வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.