தமிழின அழிப்பின் பத்தாவது வருட நினைவு குரல்!!
தமிழின அழிப்பின் பத்தாவது வருட நினைவு கூரலை உலகத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும்/ உக்கிரமாகவும் மட்டுமல்ல முதல் தடவையாக அதன் சரியான அர்த்தத்தில்/ அதன் அரசியல் பெறுமதியை உணர்ந்து / அதற்கேயுரிய அரசியல் உள்ளடக்கங்களுடன் நினைவு கூரத் தயாராக இருந்த போதே 'ஈஸ்டர் தாக்குதல்' நடத்தப்படுகிறது.
நடந்த இன அழிப்புக்கு நீதியை வேண்டியும் / தொடரும் இன அழிப்பை தடுத்து நிறுத்தவும் அனைத்துலக சமூகத்தை நோக்கி வலுவான கோரிக்கைகளுடன் நாம் இந்த நினைவு கூரலுக்கு தயாராகியிருந்தோம்.
அதில் முதன்மையானது பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் இராணுவமயமாக்கத்தை தடுத்து நிறுத்துதல்.
நில விடுவிப்பு /அரசியல் கைதிகள் விடுதலை/ வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உண்மை நிலை என்று இந்த பட்டியல் இன்னும் நீளமானது.
ஆனால் ஈஸ்டர் தாக்குதல் மூலம் இன அழிப்பு அரசு நினைவு கூரலையும் / அதன் பெறுமதியையும் கேள்விக்குட்படுத்தி விட்டது.
பயங்கரவாத தடைச் சட்டம் மீள புத்துயிர் பெற்றிருக்கிறது/ இராணுவ மயமாக்கல் விரிவாக்கம் பெற்றிருக்கிறது.
வருடா வருடம் நினைவு கூரலை முன் நின்று நடாத்தும் பல்கலை மாணவர்களுக்கு 'களி' கொடுத்திருக்கிறது இன அழிப்பு அரசு.
அனைத்துலக சமூகம் இன அழிப்பு அரசின் 'பர்தா' தடையை மட்டும் கண்டித்து தமது மனித உரிமையை நிலை நாட்டிவிட்டு ஓய்ந்து விட்டார்கள்.
தாக்குதலை பயன்படுத்தி தூர நோக்கு இன அழிப்பு சிந்தனைகளுடன் வெளிநாட்டு இஸ்லாமிய அகதிகளை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியிலோ/ சிங்களப் பகுதியிலோ குடியேற்றாமல் நாசூக்காக தமிழர் பகுதிக்குள் உட் புகுத்தியிருக்கிறது இன அழிப்பு அரசு.
இதைத் தட்டிக் கேட்கப் போய் தமிழர்களுக்கு 'பாசிஸ்ட்' பட்டம் வேறு இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது.
நீதி வேண்டி ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நினைவு கூர்தல் நிகழ்வை மடை மாற்றியது மட்டுமல்ல நீதியை மறுத்து 'பாசிஸ்டுகள்' என்று வேறு ஒரு தீர்ப்பை எழுதி முடித்து வைத்திருக்கிறது 'ஈஸ்டர்'.
நாம் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறோம்.
இப்போது மனச்சாட்சியோடு சொல்லுங்கள்..
'இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் உண்மையிலேயே ஐஎஸ்ஐஎஸ் தானா?'
பரணி
ஆசிரியர் பீடம்
தமிழ் அருள் இணையம்

.jpeg
)





கருத்துகள் இல்லை