இனவாதத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு. வெறுப்பை விதைப்பது வேறு.!!

தெற்கில் எரிந்து கொண்டிருப்பது பள்ளிவாசல்களோ, மத நூல்களோ, பெட்டிக்கடைகளோ, வீடுகளோ மட்டுமல்ல. மனிதர்கள் மனிதர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வாழ்க்கையும் அங்கு எரிந்துகொண்டிருக்கிறது.


இந்தத் தீ இஸ்லாமிய இளைஞர்கள் இதயத்தில் வெறுப்பாய் மாறக் கூடாது. அடக்கப்படுபவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் வேறு யாரை விடவும் அந்த இழப்பை உணர முடியும். மனிதர்களை அடக்குவதாலோ தெருவோரக் கடைகளைக் கொழுத்துவதாலோ வீடுகளை அடித்து உடைப்பதாலோ அவர்கள் செய்வது அப்பட்டமான வெறுப்பே. அதற்கு மேல் அந்தச் செயல்களுக்கு விளக்கம் தேவையில்லை.

இது இன்னொரு சிங்களவருக்கோ இன்னொரு தமிழருக்கோ இன்னொரு இஸ்லாமியருக்கோ மதச்சார்பற்றவருக்கோ எவருக்குமே நடந்தாலும் நாம் அதனை எதிர்க்கவும் கண்டிக்கவும் வேண்டும். வெறுப்பு மோசமான ஒரு நோய்.

அங்கு வாலில் தீயுடன் கும்பலாகச் சென்று கூக்குரலிட்டுக் கடைகளைக் கொழுத்துபவர்கள் இரவில் கள்வர்களைப் போல் வரவில்லை. பகலில் நெருப்புடன் வருகிறார்கள். வெளிச்சத்திலேயே கற்களை எறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள். தாங்கள் தான் அவற்றைக் கொழுத்துவதாகவும் தாங்கள் தான் கற்களை எறிவதாகவும் தாங்கள் தான் கூச்சலிடுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது இனவாதத்தின் வெறிக்கூச்சலை, கல்லெறியை, தீ வைப்பை.

இந்த வெறியை மனிதர்களுக்குள் ஊட்டிய, ஊட்டும் ஒவ்வொருவரும் சேர்ந்து பற்ற வைத்த நெருப்பே எங்கும் எரியும் வெறுப்பின் நாவுகள்.

ஒருவருக்கொருவர் ஆதரவாய்ப் பற்றியிருக்கும் விரல்களை நாம் இறுக்கமாகவே பற்றிக்கொள்வோம். இனவாதக் கும்பல்கள் எந்த இனத்திற்குமே ஆபத்தானவர்கள்.

மனிதர்கள் ஒன்றாக நின்று இனவாதத்தை எதிர்ப்பது தான் ஒரே வழி. ஒரு இனவாதி இன்னொரு இனவாதியை அவர் தீ வைக்கிறார் தவறு என்றால், நீங்கள் வைத்ததும், வைக்கப்போவதும் கூட எதிர்காலத்தில் பற்றப்போகும் தீ தான். எறியப் போகும் கல் தான். புறக்கணிக்கப்போகும் கடை தான்.

ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு. வெறுப்பை விதைப்பது வேறு.

#standagainstracismNo comments

Powered by Blogger.