அச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 நாட்களுக்குள் கிழக்கில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் நாட்டின் நிலையை நிலைகுலைய வைத்துவிட்டது.



ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்த சுற்றிவளைப்பு தேடுதலில், அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் மற்றுமொரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் சாய்ந்தமருது – வெலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் குண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 4 பயங்கரவாதிகள் உள்ளடங்களாக அப்பாவி பொதுமக்களும் சேர்ந்து 15 பேர் உயிரிழந்தனர். தற்போது அக்கிராமத்தின் நிலைபற்றி அறிய அங்கு சென்றோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்காக கடந்த 2010ஆம் ஆண்டு ‘சுனாமி வீட்டுத்திட்டம்’ என்ற பெயரில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது.

கடற்தொழில், விவசாயம் என்பவற்றை பிரதான தொழிலாக கொண்டு வாழும் இம்மக்கள், வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர். இவ்வாறு 460 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றன.

அச்சம் தோய்ந்த முகத்துடன் இம்மக்கள் வாழ்வதை எம்மால் காணமுடிந்தது. பகலில் தமது சொந்த வீட்டிலும், இரவில் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளிலும் வாழும் நிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை இதுவரை எதிர்கொண்டிராத ஒரு பயங்கரவாத நெருக்கடி மக்களை பீதியின் உச்சத்தில் கொண்டுசென்றுள்ளதை இம்மக்களின் முகங்கள் பிரதிபலித்தன. தமக்கு ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மக்கள் வாய்திறந்து பேச அச்சப்பட்டனர்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்விக்குறியும் அவர்களிடத்தில் காணப்பட்டது. இத்தனை காலமும் வெளிச்சத்தை காணாமல் இருந்த அந்தக் கிராம வீதிகளுக்கு தற்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு காணப்படுகிறது.

பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு விடயம் பரவலாக பேசப்பட்டது. அதாவது வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என கூறப்பட்டது. தற்கொலைக் குண்டுதாரிகள் ஏன் இக்கிராமத்தில் பதுங்கியிருந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. விடைகாணப்படாத இக்கேள்விகளுக்கு, தொடரும் புலனாய்வு விசாரணைகளே பதில்கூற வேண்டும்.

பயங்கரவாதிகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள். இப்போதும் அச்சத்தின் மத்தியில் அவர்களுடைய காலம் செல்கின்றது. அச்சத்தை போக்கி இயல்புநிலையை ஏற்படுத்துவது சவாலாக காணப்பட்டாலும், அதனை வெற்றிகொள்வதே காலத்தின் தேவை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.