அவசரகால சட்டம் தொடர்வது மக்களை அடிப்படுத்துவதா??-சுரேஸ்!!

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நாட்டை வைத்திருப்பது ஐனநாயகத்திற்கு விரோதமானது. இந்தச் சட்டம் மக்களை அடிமைத்தனத்திற்கு மாற்றக் கூடியது. ஆகையினால் எதிர்காலத்தில் பல விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் இருப்பதால் இந்தச் சட்டம் விரைவாக நீக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆரம்பித்திலேயே தமிழ் மக்களுக்கு எதிராக கடுமையாகப் பாவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு என்ற போர்வையில் சோதனைச் சாவடிகள், சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள் என பல்வேறுபட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ஐனநாயகச் சூழலே இல்லாமல் செய்யக் கூடிய ஆபத்துக்களும் இருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். .
ஆகையினால் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் அதன் பின்னர் உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் என்று கூறியிருந்தும் இதுவரையில் நீதிமன்றமும் செல்லவில்லை. ஆகையினால் தொடர்ந்தும் அரசிற்கு ஆதரவைக் கொடுப்பதைவிட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அச்சத்தைப் போக்குவதற்கு இச் சட்டத்தை நீக்குவதற்கான அழுத்தங்களை அல்லது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கெட்டுக் கொண்டார்.

நாட்டில் தற்பொது கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று சொல்லக் கூடியவர்களால் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கை அரசாங்கம் உடனடியாகவே அவசர காலச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த அவசர காலச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமது ஆதரவை முழுமையாகத் தெரிவித்திருந்தார்கள்.

அந்த வகையில் ஏகமனதாக அத் தீர்மானம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவசரகாலச் சட்ட விதிமுறைகைள ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், இவை தொடர்பாக உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப் போவதாகவும் பல விடயங்களைச் சொல்லியிருந்தார்.

ஆனால் இதுவரை அந்த விடயங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு அவர்கள் போனதாக நாங்கள் இன்னமும் அறியவில்லை. அது மாத்திரம் அல்லாமல் அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்திற்கு வந்த பொழுது அந்த நேரத்தில் இந்த தேவையற்ற விதிமுறைகளை நீக்கச் சொல்லி இவர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அது தொடர்பாக எதும் பேசவில்லை.

குறிப்பாக பெயர் பெற்ற சட்டத்தரணிகள் என்று சொல்லக் கூடிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா உட்பட அவர்கள் எந்தவிதமான கேள்விகளையும் அங்கு தொடுக்காது இப்போது வந்து, அது தொடர்பில் சவாலுக்கு உட்படுத்துவோம் என்று கூறுவதும், அதனைச் சவாலுக்கு உட்படுத்துவதன் ஊடாக அந்த விதிமுறைகள் அந்தச் சரத்துக்கள் மாற்றப்படுமா என்பதும் கூட ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு பயங்கரமான தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் முகமாக அந்த அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்களைகப் பொறுத்தவரையில் இந்த அவசரகாலச் சட்டம் அவர்களுக்கு எதிராகவும் மிகக் கடுமையாகப் பாவிக்கப்படத் தொடங்கியிருக்கின்றது. இதில் முக்கியமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சரத்துக்கள் எல்லாம் ஒரேயடியாகப் பாவிக்கப்பட்டும் இருக்கின்றது. இதைப் போல எதிர்காலத்திலும் கூட ஐனநாயக சூழலை இல்லாமல் செய்வதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் நிச்சயமாகப் பாவிக்கப்படும்.

இப்பொழுது கூட பிரதம மந்திரி, இரானுவத்திற்கும் முப்படைகளுக்கும் அதியுச்ச அதிகாரங்களைக் கொடுத்திருப்பதாக தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் இந்த அவசரகாலச் சட்டம் என்பது என்னென்ன விதமாக எல்லாம் பாவிக்கப்படப் போகின்றது என்பதை எதிர்காலத்தில் நாங்கள் பார்க்கலாம். ஆனால் ஆரம்பத்திலேயே இப்பொழுது தமிழ் மக்களுக்கு எதிராக பாவிக்கப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரம் அல்லாமல் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2009 ஆம் ஆண்ட யுத்தம் முடிவிற்கு வந்ததன் பிற்பாடு மிகவும் அமைதியான ஒரு பிரதேசமாக இருந்து வருகிறது. ஆயினும் இங்கு ஏற்படக் கூடிய சில சமூக விரோத சம்பவங்களைத் தவிர வேறேதும் இல்லை. அந்தச் சமூக விரோதச் சம்பவங்கள் கூட நிச்சயமாக தடை செய்யப்பட்டிருக்கலாம்.

ஆனால் அவை எல்லாம் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் பொலிஸாரால் கடைப்பிடிக்கப்படவில்லை. அவ்வாறு சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்பட்டிருந்தால் சமூக விரோதச் சம்பவங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

ஆக சமூக விரோதச் செயற்பாடுகளைத் தவிர வேறு எந்தவிதமான வன்முறைகளோ தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் மோதல்களோ வன்முறைகளோ ஏதும் நடக்கவில்லை. இவ்வாறிருக்கையில் வடக்கு மாகாணத்தில் நிரந்தரமான சோதனைச் சாவடிகள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் பிரதான வீதிகள் உட்பட பல இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இது போக்குவரத்துச் செய்பவர்களுக்கும் மக்களுக்கும் சரி அனைவருக்கும் பல்வேறு அசௌகரிங்களை ஏற்படுத்துகின்றது. பாதுகாப்பை ஒழுங்கமைப்பது என்பது வேறு விடயம். பாதுகாப்புக்கு நாங்கள் குந்தகமானவர்கள் அல்லர். பாதுகாப்பு என்பது ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஆனால் பாதுகாப்பு என்ற பேரில் தமிழ் மக்களை மீண்டும் பல்வேறுபட்ட அடக்குமுறைக்குள் உள்ளாக்கும் நிலைமை இருக்கக் கூடாது.

இன்னும் சொல்லப் போனால் இரானுவத்தினருக்கோ, பொலிஸாருக்கோ, அரசாங்கத்திற்கோ வடக்கு மாகாணம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது அவர்கள் அறிந்திருக்கக் கூடிய ஒரு விடயம். அவ்வாறான ஒரு சூழ் நிலையில் தற்காலிக தேவைகளையொட்டி தற்காலிக முகாம்களை அமைப்பதென்பது வேறு. ஆனால் இங்கே மக்களுடைய பார்வையில் நடக்கக் கூடிய விடயங்கள் என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்கள் அல்ல என்ற பரவலான அபிப்பிராயம் மக்களிடம் இருந்த வந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கக் கூடியது என்னவெனில் இந்த அவசரகாலச் சட்டம் என்பது மிக விரைவாக அகற்றப்பட வேண்டும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நாட்டை வைத்திருப்பது ஐனநாயகத்திற்கு விரோதமானது. மக்களை அடிமைத்தனத்திற்கு மாற்றக் கூடியது. அது மாத்திரமல்லாமல் படையினருக்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே விரைவாக இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அது மாத்திரமல்லாமல் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை அவர்கள் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பதை விடுத்து இச் சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அவற்றைத் தீர்ப்பதற்கும் குறைந்தபட்டம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்க விரும்புகின்றேன் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.