விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களும்தான் " - திருமுருகன் காந்தி!📋

தமிழீழ இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக, சென்னையில் மே 17 இயக்கம் சார்பில் வீரவணக்கப்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. `தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், பொது வாக்கெடுப்பையும் நடத்திட வேண்டும்' என்ற முழக்கம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, பிரவீன் குமார், அருள்முருகன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். ஏராளமான பொதுமக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பறையிசையுடன், சிலம்பம், ஈழப் பாடல்கள் என உணர்ச்சிகரமான அம்சங்கள் நடந்தேறின. இந்தக் கூட்டத்தில் போராளி இசைப்பிரியாவுக்கும், பிரபாகரனின் மகன் பாலசந்திரனுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய திருமுருகன் காந்தி, ``இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டு பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. அரசியல் கட்சிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் இனத்தைக்காக்க இருப்பவர்கள் அல்ல; தங்கள் பணத்தைக் காக்க இருப்பவர்கள் என்று நமக்குப் புரிய வைத்தது இந்த இனப்படுகொலைதான். ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலானவை 2009-லும் சரி, தற்போதும் சரி, ஈழம் குறித்தான விவாதங்களை எழுப்பாமல் நசுக்குகிறார்கள். 2009 நாடாளுமன்றத் தேர்தல் சத்தத்தில் ஈழ இனப்படுகொலை மறைக்கப்பட்டது. தேர்தலின்போது, ஈழம் குறித்துப் பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தலுக்கு அப்பாற்பட்டு, கூட்டணிக்கு அப்பாற்பட்டுப் போராடக்கூடிய இயக்கங்கள் இங்கே உள்ளன. அந்த வகையில் மே 17 இயக்கம் களத்தில் தொடர்ந்து நிற்கும்.


இங்கே உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களும், பெரியாரிஸ்ட்களும், அம்பேத்கரிஸ்ட்களும், ஈழத்தை மறுத்துவிட்டு எந்தக்கட்சியும் இங்கே அரசியல் செய்துவிட முடியாதென்கிற நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கியிருக்கிறார்கள். ஈழத்தையும் , விடுதலைப் புலிகளையும் இன்று பலர் கொச்சைப்படுத்தி பேசி வருவதைப் பார்க்கிறோம். வெறும் ஓட்டுக்காக நின்றவர்கள் அல்ல அவர்கள் நாட்டுக்காக எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தவர்கள்.


ஈழம் கிடைத்தபின் சாதி ஒழிப்போம் என்று அவர்கள் சொல்லவில்லை, தமிழீழப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே சாதி ஒழிப்பைச் சாத்தியப்படுத்தியவர்கள். மின்சார உற்பத்தி நிலையங்கள், சாலைகள், ரயில் பாதைகள் ஈழத்தில் எங்கே இருக்க வேண்டும் என வரையறை வைத்திருந்தவர்கள். பொருளாதார ரீதியாக ஈழத்தைக் கட்டமைக்கும்போதே அது தற்சார்பாக இருக்கவேண்டுமெனத் திட்டமிட்டார்கள்.

அமெரிக்காவிடம் உலகின் அதிசிறந்த பயிற்சி பெற்ற 30,000 பேர் கொண்ட இலங்கைப் படையை வெறும் 1,200 பேரைக் கொண்டு 35 நாள்கள் யுத்தம் நடத்தி ஆனையிறவை விடுதலைப் புலிகள் வீழ்த்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, தங்கள் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தியது. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் திரிகோணமலையை இலங்கை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றது. இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கையும் ஒப்புக்கொண்டது. இலங்கையின் தரைப்படையையும் கடற்படையையும் வலிமைப்படுத்த பெரும் உதவி செய்தது இந்தியா. இதை இலங்கை முன்னாள் மந்திரி கோத்தபய ராஜபக்சே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் தானமாக போர்க்கப்பலையும், போர்விமானங்களையும் இந்திய அரசு அளித்தது.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய `ட்ராய்க்கா' (Troika) என்ற ஆறுபேர் கொண்ட குழு இனப்படுகொலையைத் திட்டமிடுகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் அங்கீகாரத்துடன் இந்த இனப்படுகொலை நடைபெறுகிறது. 12 வயதுச் சிறுவன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டதைப் பற்றி, சரத் ஃபொன்சேகா பேசுகையில் `இந்திய ராணுவத்தின் உடையைத் திருடி விடுதலைப் புலிகள்தான் பாலசந்திரனைக் கொன்றது' என்றார். நான் இங்கே கேட்க நினைப்பது, பாலசந்திரன் கொல்லப்பட்ட அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தினம் மே 19 காலை 10 மணி என்று மெட்டா தரவு மூலம் தெரியவருகிறது. மே 18 இரவே யுத்தம் முடிந்துவிட்டது என்று ஐ.நா-வும் இலங்கை அரசும் அறிவித்துவிட்டன. மே 19 காலை ஆயுதங்களோடு இருந்தது சிங்கள ராணுவமும் இந்திய ராணுவமும்தான். பாலசந்திரனைக் கொன்றவர்கள், இந்திய ராணுவத்தைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? பாலசந்திரனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட தோட்டா எங்களுடைய வரிப்பணத்தில் வந்ததா?


பி.ஜே.பி. போன்ற கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க-வை வரலாற்றில் இல்லாதபடி, துடைத்தெறிய வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க. வருகிறதென்றால் இலங்கையில் பெருமுதலீடு செய்துள்ள ஜெகத்ரட்சகனை என்ன செய்யப்போகிறார்கள் என்பதற்குப் பதில் சொல்லிவிட்டு வரட்டும். இங்கே அ.தி.மு.க எதிர்ப்பு என்பது வேறு, தி.மு.க எதிர்ப்பு என்பது வேறு. ஓட்டு வாங்கிக்கொண்டு டெல்லி போகிறவர்கள், என்ன செய்கிறார்கள் என்பதை ஐந்து ஆண்டுகளும் நீங்கள் கேட்கவேண்டும். அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் வழக்கம்போல, ஈழத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்று அறிக்கையில் கூறிவிட்டு, சும்மா கடந்து சென்றுவிட முடியாது. யார் நாடாளுமன்றத்துக்குச் சென்றாலும் சரி, ஈழம் குறித்து அவர்கள் சொன்னதுபோல் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவில்லை என்றால் அவர்களின் வீடு முற்றுகையிடப்படும், கட்சி அலுவலகம் முற்றுகையிடப்படும்" என்றார்.

தற்போது இந்தக் கூட்டத்தில் பேசியதற்காக, இரண்டு வழக்குகள் திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டிருக்கிறது.


No comments

Powered by Blogger.