தங்களை நியாயப்படுத்த தமிழர்களை சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்!

ஜனநாயக மக்கள் முன்னணியின்  அமைப்பு செயலாளர் மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளருமான   ஜனகன் வினாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை


தமிழர்கள் இன்றும்  மாவீரர் தினம் நடத்துகிறார்கள். ஆனால், நாம் அப்படி செய்யவில்லை. ஐஎஸ் பயங்கரவாதிகளை நாம் இன்று பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுக்கின்றோம் என ஐதேக கொழும்பு மாவட்ட எம்பி முஜிபுர் ரகுமான் தனியார் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில்  கூறியுள்ளார். தமிழரின் போராட்டத்துடன் ஒப்பிட்டு இதுபோன்ற கருத்துகளை பல்வேறு மேடைகளிலும், ஊடகங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய மத தலைவர்களும் அவசர அவசரமாக கூற தொடங்கியுள்ளார்கள். சிங்கள மொழியில் இத்தகைய கருத்துகளை இவர்கள் கூறுவதை தமிழர்கள் அறியார் என இவர்கள் நினைக்க கூடாது. ஐஎஸ் பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும், தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும்  தமிழர்களை இவ்விதம் ஒப்பிட்டு  பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.இன்றைய தினங்களில் தமிழர்கள் அனுஷ்டிப்பது மாவீரர் தினமல்ல. இது பத்து வருடங்களுக்கு முன் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு  கூறும் நிகழ்வுகளே நடக்கின்றன.  இத்தகைய நினைவு கூறல்களை இந்நாட்டின் ஜனாதிபதியும், இராணுவ தளபதியும் கூட புரிந்துக்கொண்டு இருக்கும்போது எம்பி முஜிபுர் ரகுமான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது வாதங்களை முன்வைக்க, தாம்  ஐஎஸ் பயங்கரவாதிகளை காட்டிகொடுக்கிறோம் என்று பெருமை பேசி நல்ல  பெயர் வாங்குவதற்காக தமக்கு புரியாத தமிழர் அரசியல் பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபற்றி கவனத்தில் எடுக்கும்படி  தலைவர் அமைச்சர் மனோ கணேசனிடமும் கோரியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் கூறியுள்ளதாவது,ஐஎஸ் இஸ்லாமிய அடிப்படைவாத ஈஸ்டர் குண்டு வெடிப்புகளினால் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் அதிகமாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் ஆவர்.  ஆனால் இது தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் அரசியல், மத தலைவரும் தமிழரை நோக்கி ஆறுதல் ஆசுவாச கருத்துகளை சொன்னதாக தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் சிங்கள பெளத்த தலைவர்களை எவ்விதம் சமாதானப்படுததுவது என்பதிலேயே இருக்கிறது.


கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து சமாதானப்படுத்தினால்  அனைத்தும் சரியெனவும் அவர்கள் நினைக்கிறார்கள். கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் நல்லெண்ண பெருந்தன்மையை பயன்படுத்த எண்ணுகிறார்களே தவிர,  அதையும் புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால், கர்தினால் மல்கம் ரஞ்சித்  அவர்கள் மத ரீதியாக கொல்லப்பட்ட தமிழ், சிங்கள கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்கிறாரே தவிர, அவர் தமிழர்களை இனரீதியாக பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் யோசிக்கவில்லை.


ஐஎஸ் இஸ்லாமிய அடிப்படைவாத குண்டு வெடிப்புகளில் பெரிதும் பாதிக்கபட்ட தமிழர்கள், இச் சம்பவங்களை கண்டிப்பதுடன் அதன் தொடர்ச்சியாக வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம்  ஆகியவற்றில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளையும் கண்டிக்கும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். பேரினவாத தாக்குதல்கள் மூலம்  அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதையே  பயங்கரவாதிகள் விரும்புகிறார்கள். ஆகவே இவை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று உரக்க கூறுகிறோம்.


இந்நிலையில், ஐதேக கொழும்பு மாவட்ட எம்பி முஜிபுர் ரகுமான் உட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தங்கள் தரப்பை நியாயப்படுத்தி சிங்கள பெளத்த தலைவர்களை சந்தோஷப்படுத்த, தமிழர்களின் இக்காலகட்ட முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் பற்றி பொது ஊடகங்களில் பேசி கொச்சை படுத்துகிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், தங்களது இத்தகைய பொறுப்பற்ற கருத்துகள் ஏற்கனவே குண்டு வெடிப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனங்களை, காயப்படுத்துகின்றன என்பதை இவர்கள் உணர வேண்டும்.
Powered by Blogger.