தமிழகம் என்ன வேட்டைக்காடா? வைகோ!!

மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழகத்தில் வட இந்தியர்களை மட்டுமே நிரப்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார பயணத்தைத் தொடங்குகிறார். இதற்காக இன்று (மே 7) சென்னை விமான நிலையம் சென்ற வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெல்லும் என்றும், சட்ட மன்றத் தேர்தலில் திமுகவே வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக அரசு தமிழகத்தின் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றவில்லை; வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கும் எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய வைகோ, “அஞ்சல் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசின் எந்த பொதுத் துறையாக இருந்தாலும் வட மாநிலத்தவர்களையே முழுக்க முழுக்க தேர்வு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். திருச்சி ரயில்வே பணிமனையில் பயிற்சியாளர்கள் பணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்திலேயே 80 லட்சம் பேருக்கு வேலையில்லாமல் இருக்கும்போது வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி இறைப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், “தமிழகம் என்ன வேட்டைக்காடா? காலனியாக்கப்பட்டு விட்டதா? தமிழில் தேர்வு எழுதும் பிற மாநிலத்தவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளிப்போட்டு அவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு 2 சொற்களை கூட தமிழில் சொல்லத் தெரியவில்லை என்று உடன் வேலை செய்கின்ற பணியாளர்கள் என்னிடம் தெரிவித்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதுபுதுமையான ஆக்கிரமிப்பாக உள்ளது” என்றார்.
நீட் தேர்வில் மிகப்பெரிய கொடுமை நடப்பதாகக் கூறிய வைகோ, “நீட் தேர்வு எழுதும் மாணவிகளின் துப்பட்டாவை பறிப்பது, கம்மல்-நகைகள் அணிய அனுமதி மறுப்பது, முழுக்கை சட்டைகளை கத்தரிப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள். இதுபோன்ற செயல்களை செய்தால் மாணவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறதா? இது மிகப்பெரிய கொடுமை, மனிதாபிமானமற்ற தன்மை. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில்தான் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.