இறுதி கட்டத்தை நெருங்கிய ஆதித்யா வர்மா!

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மாவின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக சென்ற மாத தொடக்கத்தில் போர்ச்சுகல் சென்றது படக்குழு.

அப்போது அதன் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், “65 சதவீத படப்பிடிப்பு திட்டமிடப்பட்ட நேரத்துக்குள் நிறைவடைந்தது. இயக்குநர், நடிகர்கள், படக்குழு மற்றும் எங்கள் வியத்தகு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி” என தன்னுடைய ட்வீட்டில் ஷூட்டிங் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே ஒரு முறை முழுமையாக படமாக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து புதிய குழுவுடன் தொடங்கியிருப்பதால், படத்தின் ஒவ்வொரு நிலையையும் விக்ரம் அருகிலிருந்தே கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. தற்போது வந்துள்ள தகவலின்படி, ஆதித்யா வர்மாவின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அந்த போர்ஷன்கள் டெஹ்ராடூனில் படமாக்கப்படவுள்ளது. இம்மாதத்துக்குள் நிறைவடையும் படப்பிடிப்பை ஒட்டி, ஜுன் அல்லது ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டர்டெயின்மெண்ட். ஆதித்யா வர்மாவில் பனித்தா சந்து கதாநாயகியாகவும், ப்ரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்திலும் நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டியில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சைய்யா படத்தை இயக்கி வருகிறார்.
Powered by Blogger.