ஆயுதங்களுடன் கைதான சந்தேக நபருக்கு பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை!


வவுனியா கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படம் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளருக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படாத வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள ஒளிப்படம் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போன்று இல்லாமல் தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி இப்பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பது பாரிய சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும், இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர். வவுனியா கனகராயன்குளம் தாவூத் உணவகத்தில் இருந்து கடந்த 29ஆம் திகதி ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசலகூடத்தினை சோதனையிட்ட போது மலசலகூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு, மூன்று மிதிவெடிகள், பதினைந்து தோட்டாக்கள், இரண்டு ஆர்.பி.ஐp. குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.