மீண்டுமொருமுறை பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர்கள் மீது ஏவப்படுவதை ஏற்கவே முடியாது.!!

மிக அண்மையில்தான் பெரும்பான்மையின சட்டத்தரணியொருவர், இந்த சட்டம் குறித்த விமர்சனமொன்றை முன்வைத்திருந்தார். அவரின் கருத்துப்படி இச்சட்டம் தமிழர்களைக் கண்டிபடி கைதுசெய்து உள்ளே தள்ளுவதற்கான பொறி என்பதே வெளிப்பட்டது.  இப்படியாகத் தமிழ் இளைஞர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் மீளவும் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கெதிராகத் தமிழ் சமூகம் உடனடியாகவே தனது எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தவேண்டும்.

நாடு முழுவதும் பெருந்தொகையான ஆயுதங்கள் சர்வதேச தீவிரவாதிகளினால் பதுக்கப்பட்டிருந்து, மீட்கப்பட்டுவரும் நிலையில், அவை குறித்தெல்லாம் விசாரணை நடத்த, உடனடி நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகள் இல்லையென சாக்குபோக்கு சொல்லும் தரப்புக்கள், 10 வருடங்களுக்கு முன்  அரசினாலே அழித்தொழிக்கப்பட்டதாக சொல்லப்படும் அமைப்பொன்றின் தலைவரது படத்தை அலுவலகத்தில் வைத்திருந்தமை பயங்கரவாத நடவடிக்கை என்கின்றன. ஒருவரின் புகைப்படம் எவ்வகையில் பயங்கரவாதமாகும் என்பதற்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த வாரம் முழுவதும் விடுதலைப் புலிகளை உச்சமாகப் புகழ்ந்த அதே அரசுடமையாளர்களின் ஏவலில்தான் பயங்கரவாதத் தடைசட்டத்தைத் தமிழ் மக்கள் மத்தியிலேயே மீள நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள் காட்டப்படுகின்றன.  இந்த ஏமாற்றுத்தனமிக்க அரசியல் மனநிலையானது பெரும்பான்மை வக்கிரத்தின் இன்னொரு வகையான வெளிப்பாடுதான். இத்தகைய உளப்பிறழ்வான அரசுரிமையாளர்களுக்கு ஆதரவு வழங்க ஒருதொகை சர்வதேச நாடுகளும் போட்டியிட்டு வரிசைகட்டுகின்றன. இதை நம்பி தமிழர்கள் எங்கனம் மைய அரசியலுடன் இணைவது? எவ்வகையில் இனநல்லிணக்கம் சாத்தியமாகும்?

பேரழிவில் தம் உறவுகளை இழந்த தமிழர்கள், அதன் 10 ஆம் ஆண்டை அனுஸ்டிக்கத் தயாராகும் நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சிப்பதானது, போர் முடிந்து தசாப்தம் கடந்த நிலையிலும் பெரும்பான்மை அரசியல் மனநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றது. இறந்தவர்களுக்கான நினைவுகூரல் உரிமையை வழங்குவதற்குக்கூட இந்த இந்த மனநிலை தயாரில்லை என்பதையும், பயங்கர சூழலுக்குள்ளேயே தமிழர்களை வைத்திருக்க முயற்சிகள் நடப்பதையும் கோடிடுகின்றன.

எனவே தமிழ் சமூகம் இச்சட்டத்திற்கு எதிரான தனது எதிர்க்குரலை உடனடியாகவே வெளிப்படுத்த வேண்டும்.

நன்றி
Jera Thampi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.