அமைதியாக ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் மோடி வைக்கோக்கு அறிவுரை!!

“நாடு முழுவதும் அமைதி நிலவும் வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேற்று முன்தினம் 24ஆம் தேதி, ஓர் இஸ்லாமியப் பெண் மற்றும் இரு இஸ்லாமிய இளைஞர்கள், மாட்டுக் கறி எடுத்துச் சென்றார்கள் என்று கூறி, ‘பசு காவலர்கள்’ அவர்களை மரத்தில் கட்டிவைத்துக் கொடூரமாகத் தாக்கும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கோரி மூன்று பேரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது.

இதுதொடர்பாக வைகோ நேற்று (மே 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று, இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்கின்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்ற வேளையில், வேறு சில செய்திகள் கவலையையும், அதிர்ச்சியையும் தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள வைகோ, “கடந்த திங்கட்கிழமை அன்று பிரதமரின் சொந்த குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தின் பதூரா வட்டத்தில் உள்ள மாகூவத் கிராமத்தில் உள்ள கோயிலில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடத்துவதற்கு உயர் சாதியினர் தடை விதித்து இருப்பதாக, பிரவீன் என்ற தலித் சமூகத்தவர் தனது முகநூலில் பதிவு செய்து இருக்கிறார். இந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று கூறி, இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன் மனைவி இருவரையும் தாக்கி இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருந்த வேளையில், குஜராத் காவல் துறை, தலித் தம்பதியரைத் தாக்கிய வன்முறை கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரையில், எவரையும் கைது செய்யவில்லை” என்று மற்றொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

“மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெற்று இருக்கிற இந்த வன்கொடுமைகள், நரேந்திர மோடி அவர்களின் அடுத்த ஐந்து ஆண்டுக் கால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ள வைகோ, சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.