கார்த்தியின் கைதி புதிய அப்டேட்!

கைதி படத்தின் புதிய போஸ்டரை அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
திரைப்படங்கள் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டுதல், கட் அவுட் வைத்தல் என்பதைக் கடந்து ரசிகர்கள் தங்கள் நாயகர்களின் பிறந்தநாளுக்கு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு (மே 25) அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கியுள்ளனர்.
கார்த்தி நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் இரு படங்கள் தயாராகி வருகின்றன. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, கைதி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படக்குழு டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
சிறைச் சாலைக்குள்ளே நடைபெறும் இந்தக் கதையில் கார்த்திக்கு ஜோடி இல்லை. மே 30ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஜோதிகா, கார்த்தியின் சகோதரியாகவும் சத்யராஜ், தந்தையாகவும் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
Powered by Blogger.