தடைகளைத் தாண்டி திருமா வெற்றி: வைகோ!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் இன்று (மே 26) சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விளிம்புநிலை மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்,
அனைத்து தரப்பு உரிமைகளுக்காக ஏங்கும் மக்களுக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களையும், சமூகநீதியையும் பாதுகாப்பதற்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவனின் வெற்றியை தடுக்க எத்தனையோ தடைகளை உருவாக்கி, கோடி கோடியாய் பணத்தை கொட்டியும் அவரது வெற்றியை தடுத்துவிட வேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டு பல்வேறு தாக்குதல்களை ஏவினார்கள். அத்தனையையும் கடந்து மக்களின் நல்லாதரவை பெற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்ற எழுத்தாளர் ரவிக்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு புதிய திருப்பம். இருவருமே நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய சக்திவாய்ந்த தலைவராக திருமாவளவனும், அவரைப் போலவே அனைவரையும் அரவணைத்து செல்கிற இனிய இயல்பினரான ரவிக்குமாரும் அவரது தலைவருக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றச் செல்வது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது. தமிழகத்தில் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தளம் மேலும் வலுவடைவதற்கு அவர்களது பணி இன்றியமையாததாக இருக்கும். தமிழக வாழ்வாதாரத்தை, சமூக நீதியை பாதுகாக்கின்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக, தமிழீழ மக்களுக்கான குரலாக அவர்களது இருவரது குரலும் ஒலிக்கும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மக்களவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட தலைவர்களான தளபதி மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் இயக்கத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் நல்வாழ்த்துகளையும் பெற்றோம். மதச்சார்பின்மை கருத்தியலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் போராடுவோம். மாநிலங்களவை உறுப்பினராக வைகோ அனைவருக்காகவும் குரல் எழுப்பவுள்ளார். அவருக்கு விசிக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று மோடி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “கடந்த ஐந்தாண்டு காலம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டது ஊரறிந்த உண்மை. சிறுபான்மையினர் எந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதும் மோடி வெற்றிபெற்றவுடன் மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் அச்சத்தோடும் பீதியுடனும் வாழ்ந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.