அமமுக முகவர்களின் வாக்குகள் எங்கே? தினகரன் கேள்வி!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன் தலைமையிலான அமமுக, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. மேலும் தமிழகம் முழுவதும் 22.25 லட்சம் வாக்குகளைப் பெற்ற அமமுகவுக்கு பல வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை. தோல்வி தொடர்பாக வரும் ஜூன் 1ஆம் தேதி அமமுக ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.


இந்த நிலையில் சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் இன்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம், அது கிடைக்கவில்லை. இதற்கான காரணம் போகப் போகப் புரியும்” என்றார்.

பல வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லையே என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக தமிழகம் முழுவதிலுமிருந்து தகவல் வருகிறது. 300 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் எனக்கு வந்துள்ளன. அமமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, கட்சிக்காரர்கள் வாக்களிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அமமுக முகவர்கள் குறைந்தபட்சம் 4 பேராவது இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது கிடைத்திருக்க வேண்டுமல்லவா? அது எங்கே போனது. அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டிருந்தால் உடனே வீட்டுக்கு கிளம்பியிருப்பார்கள். அமமுக சார்பாக அன்று முழுவதும் அங்கு இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எங்கள் முகவர்கள் அனைவரும் மாலை முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது நீலகிரி தொகுதியில் ஜீரோ வாக்குகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார்கள்.

நான் வாக்களித்த வாக்குச் சாவடியில் என் குடும்பம், நண்பர்கள் ஓட்டுக்கள் என 100 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்போம். ஆனால் 14 ஓட்டுக்கள்தான் பதிவாகியுள்ளது. எங்களுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகாதது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில்சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் இடைத் தேர்தலில் உங்களுடைய பிரதான முழக்கமாக இருந்தது, அது தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதிமுக சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. அரசியலில் எது வேண்டுமென்றாலும் நடக்கும். இந்த ஆட்சி முடிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று பதிலளித்தார்.

பிரிந்துசென்றவர்கள் அதிமுகவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “ஒரு கட்சியில்தான் இருக்க வேண்டும் என்று யாருக்கும் கட்டாயம் கிடையாது. யாரும் செல்வதென்றால் செல்வார்கள். ஒரு சிலரோ அவரோடு சேர்ந்து 10 பேரோ போவதனால் ஒரு கட்சி அழிந்துவிடாது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், “தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றவர், செந்தில் பாலாஜி அவருடைய புத்திசாலித்தனத்தால் வெற்றிபெற்றுள்ளார் என்றும், வரும் 28ஆம் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.