மெல்லப் பேசு..!! மின்னல் மலரே..!! -பாகம் 15!!

கேள்விகள் ஆயிரம்
பதில்களோ உன்னிடம்
சொல்கின்ற வார்த்தையில் 
என் வண்ணங்கள் மாறுமோ?


அவசரமாக வெளியே புறப்பட்ட வெற்றி, முதல் நாள் சென்ற வைத்தியசாலைக்கே சென்றான். அந்த வைத்தியரின், பெயர் தெரியாதே, எப்படிக் கேட்பது,  என எண்ணமிட்டுக்கொண்டிருக்கும் போதே, முதல் நாள் சிகிச்சைக்கு உதவிய தாதிப்பெண்ணொருவர் வீட்டிற்குச் செல்வதற்காக வெளியே வந்தார். 

அவரிடம் விரைந்த சென்ற வெற்றி, முதல் நாளைய சம்பவத்தைக் கூறி, அவரது பெயர் பற்றி விசாரித்தான். 
கனிமொழியைக் கண்டதும் அவர் அடைந்த ஆனந்தமும் சிகிச்சையின் போது அவர் அடைந்த பதற்றமும் அந்தத் தாதிக்குத் தெரியுமாதலால் வெற்றி கேட்டதும் ‘டொக்ரர் ஆதித்தன்‘ என்றார். 

உள்ளே சென்று விசாரித்தபோது அவர்,  பணியில் இருப்பதாகச் சொன்னதும் வெளியே காத்திருந்தான் வெற்றி.  அவனுக்குள் பல கேள்விகள் இருந்தன, அவனது தேவதையைப்பற்றி. அதில் சிலதுக்கேனும் அவரிடம் விடை இருக்கும் என நினைத்தான். அதனால் தான் காலையில் முதல் வேலையாக புறப்பட்டு அங்கே வந்திருக்கிறான். 

இரண்டு மணிநேர காத்திருப்பின் பின்னர், வெளியே வந்த வைத்தியர், இவனைக் கண்டதும், “நீங்கள்......வெற்றிமாறன்” என்றார். 
“யெஸ் டொக்ரர்,” என்றவன், “உங்களோட கதைக்கவேணும், தயவுசெய்து எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கமுடியுமா?” என்றான். 
“என்ன ...என்ன இப்பிடி கேக்கிறீங்கள்? வந்து நிறைய நேரமோ? எனக்கு தெரியாதே, சொல்லியிருந்தா வேற ஒருத்தரை மாத்திவிட்டிருக்கலாம், சரி வாங்கோ.. வாங்கோ”  எனக்கூறியபடி தனது அறைக்கு அழைத்துச் சென்றார். 

உதவியாளரைக் கூப்பிட்டு  பக்கத்தில இருக்கிற பால்கடையில மோர், வாங்கிட்டு வரும்படி சொல்லிவிட்டு, “மோர் குடிப்பீங்கதானே, வெற்றி? அடிக்கிற வெயிலுக்கு இதமா இருக்கும்,” என்றார். 

“ஆம் ” என்பதுபோல தலையை ஆட்டினான் வெற்றி. 

அருகருகே இருந்த செற்றியில் ஒன்றில் அமர்ந்த ஆதித்தன், அருகில் அமருமாறு கையைக் காட்ட அமர்ந்தான் வெற்றி. அதற்குள் மோரும் வந்துவிடவே ஆளுக்கு ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு பருக ஆரம்பித்தனர். 
அண்ணாந்து பார்த்தபடி யோசனையுடன் இருந்த வெற்றியை நன்றாகப் பார்த்த ஆதித்தன், “சொல்லுங்கோ வெற்றி, என்ன கதைக்கவேணும்?” என்றதும்,  

“வேற ஒண்டும் இல்ல, எனக்கு சில விசயங்கள் தெரியவேணும், அதாவது கனியைப்பற்றி, அவளுடைய கடந்தகாலம் பற்றி, என்ற வெற்றியை ஆராயும் பார்வை பார்த்த ஆதித்தன், 

“ஏன் என்று தெரிஞ்சுகொள்ளலாமா?” என்றார்.  

தலையை ஆட்டிய வெற்றி, தன் மனதில் இருந்தவைகளைக் கொட்டத் தொடங்கினான். 

” டொக்ரர், பொதுவா, நான் ஒரு ரைப், சென்ரிமென்ற், காதல் இதுக்கெல்லாம் அடிமையான ஆள் கிடையாது, அம்மா போனதுக்குப் பிறகு, அத்தை வீட்டிலதான்,  அப்பா பாசமாத்தான் இருந்தார், படிப்பு, வசதி எண்டு அவரைப்பிரிஞ்சு போயிட்டம்.   அப்பிடியே வளர்ந்தன், வயசுக்குரிய குழப்படி இருந்ததே தவிர. குறும்புத்தனம் இருக்கேல்ல, அம்மாவை சின்ன வயசில இழந்ததோ, அந்த தவிப்பு எனக்குள்ள விதைச்ச வலியோ என்னவோ, யுனிவசிற்றிபோய் அந்த கடைசி வருசம் வரைக்கும் எனக்குள்ள காதல் என்ற எண்ணம் வரவேயில்லை.

அம்மா இல்லையே என்ற துக்கம், ஈடுசெய்யமுடியாத அந்த இழப்பு, தங்கச்சி பாடினி, இதுதான் என்ர மனசில் இருந்தது, பிறன்ஸோட சுத்துறதும், கம்பு, கட்டையை துாக்கிறதும் அடிக்கடி நடக்கிறதுதான். என்ர வலியை யாரும் அறியக்கூடாது எண்றதில நான் உறுதியா இருந்தன், 
நான் நினைக்கிறன், அம்மான்ர இழப்பை மறக்க, அந்த வேதனையில இருந்து தப்ப கோபக்காரன் என்ற போர்வைக்குள்ள, என்னை மறைச்சு வாழ்ந்திட்டன், முதல் முதலா ஒரு பெண்ணுடைய முகம் பாத்து, நான் ஆச்சரியப்பட்டதும் ஆசைப்பட்டதும்  கனிமொழியைத்தான். யுனியிலதான் அவளைப் பாத்தன், அவ எங்கட வீட்டுக்கு வந்து ரெண்டு வருசம் ஆச்சு, அதுக்கு ரெண்டு வருசத்துக்கு முதல் ஒரு இளங்காலைப் பொழுதில நான் விரும்பி அமர்ந்திருக்கிற வாகை மரத்துக்கு கீழ என்னைக் கடந்து போனா,  பாத்த உடனே அந்த முகம் என்ர மனசில் பதிஞ்சிட்டுது, என்னால் அந்த  அமைதியான முகத்தை மறக்கமுடியேல்ல, முதல்ல, அதை ஒரு பொருட்டா நினைக்கயில்லதான், நாளாக நாளாக அவளை ரொம்ப நேசிச்சன், நிறைய இடங்களில தேடினன், ஆனா அவ என்ர கண்ணில படவே இல்ல,

காலம் அவளை என்னிடம் தரும் எண்டு நம்பி நான் காத்திருந்த போதுதான் அவளை எங்கட வீட்டில கண்டது. ஒரு கணம் பயங்கர திகைப்பு, அவளுடைய கோலமும் அவளுடைய நிலமையையும் கண்டு. அதுவும் அவள் ஒரு குழந்தையோட போக்கிடம் இல்லாம தஞ்சமடைய என்ர வீட்டுக்கு வந்திருக்கிறாள் எண்டதும் தாங்கவே முடியேல்ல. முதல் நாள் நிறைய அழுதன், அந்த ஏமாற்றம், அவள் இல்லாத வாழ்க்கை என்ற வெறுமை, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மனசு மறுத்தது. 

அப்பிடியே மெல்ல மெல்ல, நானே என்னைச் சமாதானமாக்கிக் கொண்டிருந்தன். ஆனா, காலஓட்டத்தில ஒரு விசயம் புரிஞ்சது, அதாவது, கனி திருமணம் செய்திருந்தாலும், அவளுடைய பழைய வாழ்க்கையை அவள் வெறுக்கிறாள் என்ற உண்மை. அதை தொடர அவள் விரும்பேல்ல என்ற உண்மை, மெல்ல மெல்ல எனக்குள்ள திரும்பவும் நம்பிக்கை வந்திட்டுது, எப்பிடியாவது கனியை சமாதானம் செய்து, அவளைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பதே எனக்கு உற்சாகத்தைத் தந்தது.  நான், அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் குடுக்கப்போறன் என்றதைவிட அவளோட என்ர வாழ்கையை இணைச்சு நான் சந்தோசமா வாழப்போறன் எண்றதில நான் உறுதியா இருந்தன்.  

அப்பாட்டச் சொல்லி, டிவோர்ஸ் பண்ணச்சொல்லி சொன்னதும் அவ மறுத்திட்டா, வீட்டைவிட்டுப்போறன் எண்டா, அதுக்குப்பிறகு நான் தொல்லை செய்யேல்ல, அப்பாவும் ஒண்டும் கேட்கேல்லை, இனிமேல் இதைப்பற்றி எதுவும் கதைக்ககூடாது எண்டு நான் தான் சொன்னன், அவரும் அதுக்குப்பிறகு ஒண்டும் கதைக்கேல்ல, நாள் ஓடிக்கொண்டிருந்தது. 

எல்லா வகையிலயும் அப்பாவைக் கவனிக்கிறமாதிரி என்னையும் கவனிச்சுக் கொள்ளுறா, எனக்கு ஒரு சின்ன வலி எண்டாலும் அவளால தாங்கமுடியாது, அதோட, 
அவளும் நானும் சின்னதா மனஸ்தாபம் அடைஞ்சிருக்கிறம், ஆனா, யாரோ ஒருத்தர் உடனேயே சமாதான கொடியை உயர்த்திவிட உடனே சரியாகிடுவம், குழந்தை அனந்து எங்களுக்குள்ள ஒரு பாலமா இருக்கிறான், எங்கள் ரெண்டுபேருக்குமே அவன் உயிர். 

இண்டைக்கு வரைக்கும் எனக்கு ஒரே நம்பிக்கை தான் இருக்கு. அதாவது கனிதான் என் மனைவி, அனந்துதான் என் முதல் மகன், அதுதான் என் குடும்பம். என்னுடைய காதல் பொய்யானது கிடையாது, அது நிச்சயம் ரெண்டு பேரையும் சேர்ந்து வாழவைக்கும். எனக்கு தெரிய வேண்டிய தெல்லாம், கனியை உங்களுக்கு எப்பிடித் தெரியும்? அவளுடைய திருமண வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அவ கணவன் ரொம்ப கொடுமைக்காரனா? என் கனியை வாழ்க்கையில் தோற்றுப்போக வைத்தவன் யார்?  என்னைப் பொறுத்தவரைக்கும் அவள் ஒரு பொக்கிஷம், அந்தப் புதையலை தொலைத்த அந்த துரதிஷ்டசாலி எங்கே இருக்கிறான்?

தயவுசெய்து உங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் சொல்லுங்கோ டொக்ரர்?” கேட்டுவிட்டு பெரிய மூச்சை எடுத்துவிட்டான் வெற்றிமாறன். 

இடைமறித்த அவர்,  “ஆதித்தன்”  என்றார். 

தொடரும்.....
கோபிகை


ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.