உலக சைக்கிள் தின விழிப்புணர்வு கட்டுரை!

சைக்கிளில் செல்லும்போது தனியாகச் செல்வதைக் குறைத்துக்கொண்டு, உடன் யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது. சைக்கிள் பழுதானால் உடன் வருபவர்கள் உதவியுடன் அத்தகைய சூழலைச் சமாளித்துவிடலாம். மேலும் தனிமையை விரட்ட உதவும்.

`வாரம் ஒருநாள் அலுவலகத்துக்கு சைக்கிளில் போங்க ப்ளீஸ்!' - உலக சைக்கிள் தின விழிப்புணர்வு கட்டுரை! #WorldCycleDay
இன்று உலக சைக்கிள் தினம். சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதியை உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடுமாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைவதற்குமுன் சைக்கிள்தான் மனிதனுக்கு உற்ற தோழனாக இருந்தது. மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட புதிய வாகனங்களின் வரவு சைக்கிள் பயன்பாட்டை மட்டுமல்ல, மனிதனின் ஆரோக்கியத்தையும் அழித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

`தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், எந்தப் பயிற்சியை முதலில் தொடங்குவது என்ற சந்தேகம் பலருக்கும் வருவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் முதல் பயிற்சியாக சைக்கிளை ஓட்டத் தொடங்கலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் அனைத்து வகை உடற்பயிற்சியையும் ஒட்டுமொத்தமாகச் செய்யாமல், ஒவ்வொரு தினமும் ஒவ்வொன்று எனப் பிரித்துக்கொள்ளலாம். வாரத்தின் ஏழு நாள்களில், இரண்டு நாள்கள் நடைப்பயிற்சி, இரண்டு நாள்கள் சைக்கிள் ஓட்டுவது, மூன்று நாள்கள் யோகா எனப் பிரித்துச் செய்யலாம். அதனால் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம் சைக்கிள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே, அக்கம் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் செல்வதற்கு சைக்கிளைப் பயன்படுத்தலாம். அலுவலகத்திற்குக்கூட சைக்கிளில் செல்லலாம். அதனால் பெட்ரோல் செலவு குறையும்; பணமும் மிச்சமாகும். அலுவலகம் அருகில் இருந்தால் மட்டும் வாரம் ஒருமுறை சைக்கிளில் செல்லலாம். தொலைவில் இருந்தால் நீங்கள் சைக்கிளில் செல்லும்போது சோர்வாகி, அலுவலகத்தில் தூங்கிவழிய நேரிடும். `அலுவலகம் செல்லும் அனைவரும் வாரம் ஒருமுறை சைக்கிளில் செல்ல வேண்டும்' எனக் கொள்கை முடிவு எடுத்தால் சமூக அளவில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

அனைத்து உடற்பயிற்சிகளையும்விட சைக்கிள் ஓட்டுவது பேரானந்தத்தைத் தரும். வாழ்க்கையில் எத்தனைவிதமான அழுத்தம் இருந்தாலும், அதிலிருந்து விடுபட இது உதவும். முடிவுகள் எடுக்கமுடியாமல் குழப்பான மனநிலையில் இருப்பவர்கள், தெளிவான மனநிலையை அடைய சைக்கிள் பயிற்சி நிச்சயம் உதவும். நம்மைப் பற்றி நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளவும் சைக்கிள் பயணம் உதவும். சைக்கிள் ஓட்டுவதை வெறும் பயிற்சியாக மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமாக அணுகும்போது நமது வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறும்.

சைக்கிள் பயிற்சி உடலுக்கு நிறைய பயன்களைத் தரும். உடல் எடை அதிகரித்து தொப்பையுடன் இருப்பவர்கள், வாரத்துக்கு மூன்று நாள்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் தொப்பை குறையும். கால், இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். `தொடர்ந்து சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு முதுகு வலி வராது' என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் உட்கார்ந்தநிலையில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் முதுகு வலி ஏற்படாமலிருக்க சைக்கிள் பயணம் மேற்கொள்ளலாம். ஏற்கெனவே முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சைக்கிள் பயிற்சி செய்யலாம். சைக்கிள் ஓட்டும்போது வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி முகமும், உடலும் பொலிவு பெறும். சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரக்க சைக்கிள் பயிற்சி உதவும். உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபெற்று சைக்கிள் பயிற்சியில் ஈடுபடலாம்.

சைக்கிள் ஓட்டுவதால் பெண்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதவிடாய்ப் பிரச்னை உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது. அடி வயிற்றில் சேரும் கொழுப்பை குறைக்கும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். சைக்கிள் ஓட்டுவதால் உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். அதனால் அனைத்துக் கவலைகளும் மறைந்து மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

சைக்கிளில் செல்லும்போது தனியாகச் செல்வதைக் குறைத்துக்கொண்டு, உடன் யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது. சைக்கிள் பழுதானால் உடன் வருபவர்கள் உதவியுடன் அத்தகைய சூழலைச் சமாளித்துவிடலாம். மேலும் தனிமையை விரட்ட உதவும். சைக்கிள் பயிற்சியை ஆரம்பிக்கும்போது தொடர்ந்து இரண்டு மணி நேரம் பயணிக்கப் பழகுவது நல்லது. புதிதாகத் தொடங்கும்போது ஒரு மணி நேரத்தில் ஏழு முதல் பத்து கிலோமீட்டர் வரை செல்ல முடியும். பழகிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகப்படுத்தலாம்.

பயணம் பாதுகாப்பாக இருக்க சைக்கிள் ஓட்டும்போது அணியவேண்டிய தலைக்கவசத்தை அணிந்துகொள்வது நல்லது. சைக்கிள் பயணத்தின்போது இரண்டு லிட்டர் தண்ணீரை உடன் எடுத்துச் செல்லவேண்டும். சைக்கிள் பயணத்துக்கு முதலில் பொதுஇடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்தப்பகுதி குறைவான வாகனம் செல்லும் இடமாக இருந்தால் நல்லது. சைக்கிள் ஓட்டும்போது சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

'சைக்ளிங்' செல்லுங்கள்! உங்கள் சிறந்த நண்பனாகவும் உங்களை நீங்களே தெரிந்து கொள்ளவும் சைக்கிள் பயணம் உதவும். இந்த நல்ல முயற்சியை சைக்கிள் தினத்திலிருந்து தொடங்குங்க நண்பர்களே!

நன்றி  விகடன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.