கேரள மாணவன் வாட்ஸ்அப் `பக்'கைக் கண்டறிந்தார்!!

வாட்ஸ்அப் செயலியில் இருந்த குறைபாட்டைக் கண்டறிந்த 19 வயது கேரள மாணவனை ஃபேஸ்புக் கௌரவித்துள்ளது.


உலக அளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், சமூக வலைதளங்களின் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமானதாகும். உலக அளவில் அந்த நிறுவனம் வாட்ஸ்அப் உள்ளிட்ட தங்களது செயலிகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் எனப்படும் `பக்'கைக் (Bug) கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன் கௌரவித்தும் வருகிறது. 

இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் இருந்த பாதுகாப்புக் குறைபாடு ஒன்றை கேரளாவைச் சேர்ந்த கே.எஸ்.அனந்தகிருஷ்ணா என்ற 19 வயது பொறியியல் மாணவர் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்த அவர், அந்தக் குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். வாட்ஸ்அப் செயலியில், பயனருக்கே தெரியாமல் அவரது கணக்கில் பதியப்பட்டிருக்கும் ஃபைல்களை முழுவதுமாக மற்றவர்கள் அழிக்க வழிவகை செய்யும் வகையில் அந்தக் குறைபாடு இருந்திருக்கிறது.


இதுகுறித்து கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அந்தக் குறைபாட்டை சரிசெய்ததுடன், அதைக் கண்டுபிடித்த அனந்தகிருஷ்ணாவை கௌரவப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி, ஊக்கத்தொகையாக அவருக்கு 500 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 34,000) அளித்ததுடன் ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைத்தும் அவரைக் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதேபோல், ஃபேஸ்புக் நிறுவனம் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. தங்களது செயலிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன் ஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலிலும் அவர்களுக்கு இடம் அளித்து ஃபேஸ்புக் கௌரவித்து வருகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் அனந்தகிருஷ்ணா, எத்திக்கல் ஹேக்கிங்கில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்து வருகிறார். அதேபோல், கேரள போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் (Kerala Police Cyberdome) பிரிவிலும் பணியாற்றி வருகிறார் இந்த 19 வயது மாணவர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.