துரித உணவுகளால் ஆபத்து- ஆய்வில் தகவல்!

குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருள்கள் குறித்து, இத்தாலியில் உள்ள `நேபிள்ஸ்  ஃபெடரிகோ II பல்கலைக்கழகம்' (University of Naples Federico II) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது.
  6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 61 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 'ஜங்க் ஃபுட்' எனப்படும் துரித உணவுகளே குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைக்கு முக்கியக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மைக்ரோ ஓவனில் சமைத்த உணவுகள், கிரில்டு மற்றும் பார்பிக்யூ எனப்படும் வறுத்த இறைச்சி உணவுகள், எண்ணெயில் அதிக நேரம் வறுத்த உருளைக்கிழங்கு சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டாக்டர் ராபர்டோ பெர்னி கானானி பேசும்போது,  ``உணவுப் பொருள்களைக் கடுமையான வெப்பத்தில் சூடுபடுத்தும்போது, உணவில் உள்ள குளூக்கோஸ், புரதங்களுடன் இணைந்து சில தேவையற்ற வேதிப்பொருள்களை உருவாக்கும். அவற்றில் ஒன்றுதான்  `ஏஜிஇ' (AGE - Advanced Glycation End Product) எனப்படும் நச்சுப் பொருள். பெரும்பாலும், அதிக புரதம் நிறைந்த கோழி இறைச்சி போன்றவற்றை கிரில்டு செய்யும்போதோ, பார்பிக்யூ என்னும் முறையில் அதிக வெப்பத்தில் வறுக்கும்போதோ அல்லது மீன், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை நீண்ட நேரம் எண்ணெயில் பொரிக்கும்போதோ, இந்த நச்சுப்பொருள்கள் உருவாகின்றன. இந்த மூலக்கூறுகள், தோலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டினைப் பாதிக்கிறது. இதன் விளைவு, ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகளையும் உண்டாக்கும்" என்றார்.

நேபிள்ஸ்  ஃபெடரிகோ II பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வுகுறித்து உணவியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில்,"துரித உணவுகள் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. எனவே, எல்லோரும் அச்சப்படத் தேவையில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது மரபு, வளரும் சூழல், நோய் எதிர்ப்புத் திறனைப் பொறுத்து மாறுபடும். ஆனாலும் குழந்தைப்பருவத்தில் உண்ணும் உணவே அவர்களது எதிர்கால ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருக்கும். எனவே, சத்துகளே இல்லாத துரித உணவுகளைத் தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த நம் மரபு சார்ந்த உணவுகளை உண்ணக் கொடுப்பதே சிறந்தது" என்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.