கொல்லியான கள்ளி!!

கள்ளிச் செடியின் துயரமோ
சொல்லி மாளாத் தூரம்
கள்ளிச் செடி என்றதுமே
கருத்தம்மாதான் கண்முன்னே !

காலத்தின் பிடியில்
கருவறை  நிறைந்த மலர்கள்
புது உலகில் வாசம் வீசமுன்னே
புதை குழியில் சூடப்பட்ட  துயரத்தின்
பழியுமோ வஞ்சம் இல்லாக் கள்ளிக்கே !

தாய்ப்பாலைப் புசிக்க முன்னே
கள்ளிப்பாலில் பசியாறிய  பிஞ்சின்
பஞ்சிதழ்களில் நஞ்சு பொங்கி இறைக்க
பட்டுப் பாதம் சொட்டுச் சொட்டாய் விறைக்க
முத்து விழிகள் மெல்ல மூடிய துயரத்தின்
பழியுமோ வஞ்சம் இல்லாக் கள்ளிக்கே !

அள்ளிக் கொஞ்ச நெஞ்சு துடித்தாலும்
அழகுக்கு அணிகலன் கோர்த்து
அறிவை ஏற்றி அன்பை ஊட்டி
ஆடவனிடம் ஆசை மகளை கரமிணைக்க
வழியடைத்த வறுமை வந்து வாசல் கதவைத் தட்ட
வந்த சொந்தத்தை சுமந்தவரோ
வெந்த மனதில் ஈயம் ஊற்றி
தூரதேசம்  அனுப்பித் துடித்த துயரத்தின்
பழியுமோ வஞ்சம் இல்லாக் கள்ளிக்கே!

சிசுக்களின் வில்லியோ கள்ளி - அவளே
கொல்லியென கருத்தம்மாள்
சொல்லிச் சொல்லி கோசம் போட்டாள்
சொல்லிய கதையில் தவறுமில்லை
கொல்லிச் செடியாக கள்ளியுமில்லை!

கள்ளிச் செடியைத் தள்ளி வைக்கும்
எண்ணத் துளிகளை சலவை செய்
கொல்லி என்னும் கோசத்திற்கு கொள்ளி வை
ஆயுள் கூட்டும் அற்புதச்செடி கள்ளி
தன்னை ஈந்த  ஈரச்செடி கள்ளி
முள் வேலிக்குள் முரடான மூலிகைச் செடி கள்ளி !!!

-ஜெயவவா அன்பு
Powered by Blogger.