மெல்லப் பேசு ....மின்னல் மலரே....பாகம் 18!!

என் தேவதையே
நீ என் சாமி
நீ என் ஆவி
நீயே என் தாயுமானவள்.
வீட்டிற்குள் நுழையவும் அதிகமாக பேச்சுக் குரல்கள் கேட்டது, அப்பாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான், மாமியும் மகள் ஆராதனாவும் வந்திருந்தனர். ‘என்னடா‘  என்றிருந்தது வெற்றிக்கு.

வரும்போது அவனுக்குள் இருந்த ஆனந்தம் அத்தையைக் கண்டதுமே மறைந்துவிட்டது, கனிமொழி பற்றிய உண்மையை அப்பாவிடம் சொல்லவேண்டும் என்ற ஆவலில் வந்தவன், இவர்களைக் கண்டதும் எரிச்சலுற்றான். 

‘சொல்லாமல் கொள்ளாமல் அத்தை எதற்காக வந்தார்‘ என்ற எண்ணம் அவனைக் கோபப்படவைத்தது. அத்தை ஒன்றும் அப்பாவுடன் கூடிப்பிறந்தவர் அல்லதான்,ஆனால்,  தன் மகளை அவனுக்கே மணமுடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். அவன் எத்தனையோ தடவைகள் சொல்லியும் அத்தை பிடிவாதமாகவே இருந்தார்.

 “என்ன அண்ணா இது, வேலைக்கு வந்தவளை, நடுவீட்டில அதுவும் வெற்றியின்ர அறையில தங்க விட்டிருக்கிறாய், உனக்கென்ன விசரே?” தெளிவாக விழுந்தது வெற்றியின் காதில், அந்த வார்த்தைகள் கனிமொழியின் காதிலும் விழுந்தது என்பது அவனுக்குத் தெரியாது,
“தேள் கடிச்சதில, ஏலாமப்போட்டுது, அதனால தான் அங்க படுத்திருக்கிறா, அக்கா இதை ஒரு பெரிய விசயமாக்காம பேசாமல் விடுங்கோ,

சரி சரி இருங்கோ, வெற்றி வந்திட்டான் போல, குடிக்க ஏதாவது கொண்டுவரச் சொல்லுறன்” என்றபடி எழுந்தார்.

அவ்விடம் வந்த வெற்றி, அத்தையையும் மகளையும் கோபமாய் பார்க்க, ‘சரி விடப்பா‘  என்பதுபோல கண்களால் வேண்டினார் தந்தையார்.
பேசாமல் அவன் உள்ளே வரவும் கனிமொழி, குழந்தையையும் அணைத்தபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.

“என்ன .....என்னாச்சு கனி? எங்க போறீங்க?” என்றான்.

“நான் என்ர இடத்திலயே படுக்கிறன், அதோட வீட்டுக்கு ஆக்கள் வந்திருக்கினம், சமையல் வேலை எல்லாம் பாக்கவேணும், போறன் விடுங்கோ” என்றாள் சற்றே தள்ளாடியபடி.

 அந்த நேரத்தில் மற்றவர்களின் முன்னால் அவளுடன் வாக்குவாதம் செய்ய அவன் விரும்பவில்லை. பேசாமல் அனந்திதனை மட்டும் கைநீட்டி துாக்கியபடி  “சரி வாங்கோ...நான் அனந்துவை கொண்டுவந்து தாறன்” என்றபடி முன்னால் நடந்தான்.

தனது இருப்பிடம் விரைந்தவள், உள்ளே பெரிய கட்டில் மெத்தை போடப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தபடி “இதெல்லாம் என்னத்துக்கு?” என்றாள்.
“உங்கள் ரெண்டுபேருக்குமாகத் தான்”, என்றவன், “ஏன் இதனால இப்ப என்ன பிரச்சினை?” என்றான்.

“அதுக்கில்லை, நீங்கள் எங்களுக்காக சிரமப்படவேண்டாம், அதுவும் இப்பிடி எல்லாம் செலவு செய்யவேண்டாம், சொன்னால் உங்களுக்கு கோபம் வரும், ஆனா நான் சொல்லத்தான் வேணும், நீங்கள் இப்பிடி பாத்து பாத்து கவனிச்சா பாக்கிறவை அது இதெண்டு சொல்லத்தான் செய்வினம், புரிஞ்சுகொள்ளுங்கோ”  மூச்சுவிடாது சொல்லிமுடித்தவளை நன்றாகப் பார்த்தவன்,

 “வேண்டாம் என்றால் துாக்கி வெளிய வைச்சிடுங்கோ” என்றுவிட்டு “சாப்பாடு கடையில வாங்கி வந்திருக்கிறன், நீங்கள் சிரமப்படவேண்டாம், பேசாம படுத்தாபோதும்” என்றுவிட்டு அனந்துவை அணைத்தபடி பேசாமல் போய்விட்டான். அவளோ உடம்பு முடியாமல் இருந்தாள், அவளாவது அதை துாக்கி வெளியே வைப்பதாவது, பேசக்கூட தெம்பில்லாது அப்படியே கட்டிலில் சரிந்தாள். குழந்தை அவனோடு சென்றுவிட்டதை நினைத்தபடி பேசாமல் படுத்திருந்தாள்.

அனந்துவுக்கு கூட இப்பல்லாம் அவர் தான் தேவைப்படுறார், எண்ணங்கள் இப்பிடி ஓடினாலும் அதிலும் ஒரு சுகம் இதயத்தை நனைக்கவே செய்தது. கண்களை மூடினாள், ஏனோ அந்த அழகான பொழுது இனிமையாய் இருந்தது அவளுக்கு. 


தொடரும்.....
கோபி கோபிகை


ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையதளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Blogger இயக்குவது.