தாய்க்கு மறுமணம் செய்துவைத்து மகனொருவன் தாயாகிறான்!!

பெற்ற பிள்ளை வாழாதிருப்பதைக்கண்டு மற்றவர்களைக் காட்டிலும் தாயே அதிகமாக வலியும் வேதனையும் அடைகிறார். தன்பிள்ளைக்கு வாழ்க்கை அமைய துடிப்பதும் தாயே. அந்த தாயாக மாறியிருக்கிறான் ஒரு மகன்.

நாகரிகம் வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் இன்றைய சமூகத்தில், இன்னும் விவாகரத்து, அதன்பின் நடக்கும் இரண்டாம் திருமணம் என்பது முகம் சுளிக்கவைக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
நெருக்கடிகள், சந்தர்ப்பவாத சூழ்நிலைகளால் முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணம் நடப்பதுண்டு.  இரண்டாவது திருமணம் நல்ல வாழ்க்கை தருமா, இல்லையா என்ற நிலையில் சமூகம் அவர்களை இழிவான நிலையிலேயே பார்த்துவருகிறது. இப்படியான நிலையில், தனது தந்தையை விவாகரத்து செய்த பிறகு இரண்டாவதாகத் திருமணம் செய்த தனது தாய்க்கு வாழ்த்துச் சொல்லி உருகியுள்ளார், கேரள இளைஞர் ஒருவர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பள்ளிமோன் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் தான் அந்த இளைஞர். தனது தாயின் முதல் திருமணம் சரியாக அமையாததால்தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் எனக் கூறி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ``இது எனது அம்மாவுடைய இரண்டாவது திருமணம் குறித்து... இரண்டாவது திருமணத்தை அங்கீகரிக்காத ஆட்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். வாழ்க்கை முழுவதையும் எனக்காக அர்ப்பணித்தவர் என் அம்மா. திருமண வாழ்க்கையில் நிறையத் துயரங்களை அவர் அனுபவித்துள்ளார். என் கண் முன்னே நிறையப் பார்த்துள்ளேன். ஒருமுறை நெற்றியில் அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட நின்றிருந்தார். அப்போது, ``ஏன் இப்படி சகித்துக்கொண்டிருக்கிறீர்கள்" எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், `எல்லாம் உனக்காகத்தான். இப்போது மட்டுமல்ல, இனியும் பொறுத்துக்கொள்வேன்' என்றார்.

அது இன்றும் என் நினைவில் உள்ளது. அன்று அந்த வீட்டில் இருந்து என் அம்மா வெளியேறியபோது, அவர் கைபிடித்து எடுத்த முடிவுதான் இது (இரண்டாவது திருமணம்).  இதை நடத்துவேன் எனத் தீர்மானித்தேன். அதுபோல் நடத்தியுள்ளேன். வாழ்நாள் முழுவதும் எனக்காக அர்ப்பணித்த அம்மாவுக்கென கனவுகள் நிறைய உள்ளது. இந்தத் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். திருமண வாழ்த்துகள் அம்மா..." என்று கூறியுள்ள அவரின் அம்மா ஒரு டீச்சர். கோகுலுக்காகத் தனது வேலையை உதறிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனாலும் முதல் திருமணம் சரியாக அமையாததால், கோகுல் 10-ம் வகுப்பு படிக்கும்போதே விவாகரத்து பெற்றார்.

வீட்டை விட்டு வெளியேறும்போது, வேலை எதுவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ``இரண்டாவது திருமணம் குறித்துப் பேசும்போதெல்லாம் மறுத்துவிடுவார். அப்போதுதான் அவருடன் படித்தவரே வரனாக வந்தார். அதற்கும் மறுத்தார். ஆனால் ஒருவழியாக சம்மதிக்க வைத்துவிட்டேன்" என ஒரு பேட்டியில் கூறியுள்ள கோகுல், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரணியில் உள்ளார். இதற்கிடையே, இந்தப் பதிவுகுறித்து எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு அவர், ``சந்தேகம், அவமதிப்பு அல்லது வெறுப்பு நிறைந்த கண்களுடன் இதைப் பார்க்காதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தாலும்கூட, நானும் சரி, வேறு யாரும் இங்கு கவனிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

அவர், தனது அம்மா குறித்து பதிவிட்ட சில நொடிகளில் அது வைரலானது. பலரும் கோகுலின் முடிவை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர். இதுவரை 31 ஆயிரம் லைக்ஸ், 3 ஆயிரம் ஷேர்கள் கிடைத்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.