பொசன் போயாவைக் காரணம் காட்டி சந்தைகளில் மீன் விற்பனைக்கு தடை வடக்கு அதிகாரிகள் பேசா மடந்தைகளா?

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மீன் சந்தைகள் அனைத்தையும் இன்றும் (15) நாளையும் (16) மூடுமாறு மத்திய அரசு விடுத்த அறிவித்தலை வடக்கு மாகாணத்தில் செயற்படுத்திக் காட்டிய அதிகாரிகளின் செயற்பாடு கண்டனத்திற்கு உரியது.


எதை, எங்கு எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநரும் அதிகாரிகளும் மிகக் அக்கறையாக இருக்கவேண்டும். அனைத்து விடயங்களையும் ஆள ஊடுருவிப் பார்க்கும் ஆளுநர் இந்த விடயத்தில் அக்கறை அற்றிருப்பதும் வேதனையானது.

உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கடந்த 2019.06.12 ஆம் திகதி வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதில், ஸ்ரீ பௌத்த 2563 ஆண்டின் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை பொசன் வாரமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, யூன் 15,16 ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதும் அமைந்துள்ள, மதுபானசாலைகளை மூடுவதற்கும், சிறப்புச் சந்தைகளில் மதுபான விற்பனையை நிறுத்தவதற்கும் மிருகங்களைக் கொல்லும் இடங்கள், ரேஸ் புக்கிகள், கெஷினோ மற்றும் கிளபஸ் நிலையங்களை மூடுவதற்கும், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த விடயங்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை வடக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் நேற்று வடக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைத்திருந்தார்.

இக்கடிதங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த தவிசாளர்களும் செயலாளர்களும் மீன் விற்பனைச் சந்தைகளை மூடுவதற்கு உத்தரவிட்டனர். இதன் பிரகாரம் வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்துச் சந்தைகளும் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படுவதாக சந்தைகளுக்கு முன்பாக நேற்று பிற்பகல் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டன.

இன்று கடலுணவுகளுடன் சந்தைகளுக்கு சென்ற வியாபாரிகள் சந்தைகள் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைந்தனர். சில வியாபாரிகள் சந்தைக்கு வெளியே வைத்து விற்பனை செய்த போதிலும் பலரும் கடலுணவுகளை விற்பனை செய்ய முடியாமல் திருப்பிக் கொண்டு சென்றனர்.

பொசன் நிகழ்வு பௌத்தர்களுக்கு உரியது. நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும். ஆனால், வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஏன் பாதிக்கச் செய்யவேண்டும்?

சிவராத்திரி, தைப்பொங்கல் காலத்தில் நாடு முழுவதும் மாமிசம் விற்கக்கூடாது என மத்திய அரசு தடை போடுமா?

எமது அதிகாரிகள் அந்தளவு அறிவீனர்களா? வடக்கு மாகாணத்திற்கு என ஆளுநர் ஒருவர் இருக்கின்றார். அவரது ஆலோசனை பெறப்பட்ட பின்னர்தான் மீன் சந்தைகளைப் பூட்டுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதா?

கொழும்பில் குண்டுவெடித்தால் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு போடுவதும், மட்டக்களப்பில் மோதல் நடந்தால் யாழ்ப்பாணத்தில் சோதனைச் சாவடிகளை அமைப்பதும்தான் சிறிலங்காவின் நல்லாட்சியா?

வடக்கில் உள்ள கடற்றொழிலாளர்களும் அதனோடு இணைந்த தொழிலாளர்களும் பல்வேறு வகையிலும் தொழில் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் அவர்களை மேலும் பாதிக்கும் என்பதை எமது அதிகாரிகள் சிந்திக்காமல் இருப்பது ஏன்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.