சர்வதேச திரைப்பட விழாவில் ‘சர்வம் தாளமயம்’!

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இயக்குநர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வெளியானது. பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த அப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருந்த அந்தப்படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் நெடுமுடி வேணு, வினித், குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பல பாடல்களைக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு வாழ்க்கையில் முக்கிய புள்ளியாக அமைந்த இந்த திரைப்படம் தற்போது, 2019ம் ஆண்டுக்கான ”22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழா”விற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 15ம் தேதி துவங்கிய இந்த புகழ்பெற்ற திரைப்பட விழா இம்மாதம் 24 தேதி வரை நடைபெறுகிறது. ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.