சாதி மோதல்: எஸ்பி நெற்றியில் வெட்டுக்காயம்!

தேனி மாவட்டத்தில் நடந்த தனிநபர் மோதல்கள் சாதிப் பிரச்சினையாக பூதாகரப்படுத்தப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குச் சென்ற மாவட்டக் கண்காணிப்பாளர் உட்பட போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். குறைவான எண்ணிக்கையில் போலீசார் இருந்ததே தாக்குதலை எதிர்கொள்ள முடியாததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட லட்சுமிபுரம் அருகில் உள்ள சருத்துப்பட்டியில் கடந்த 14ஆம் தேதி இரவு ஒரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி சாலை மறியலைக் கைவிடச் சொல்லி பேச்சுவார்த்தைக்குச் சென்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைச் சமாளிக்க போலீசார் லத்தியைச் சுழற்ற அந்த இடமே களேபரமாகிப் போனது. கண்காணிப்பாளர் பாஸ்கரனைக் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் கடுமையாகத் தாக்கியது. தற்போது அவருக்கு மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தின் பின்னணி பற்றி விசாரிக்க மின்னம்பலம் களமிறங்கியது. நான்கு நாட்களுக்கு முன்பு, சரத்துப்பட்டியில் நாயக்கர் சமூகத்தினர் நடத்திய கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது அந்த ஊர் சாலையில் இருசக்கர வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டியுள்ளனர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திருவிழா நடக்கும் பகுதியில் பிரச்சினை ஏற்படுத்திய இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் நாயக்கர் சமூகத்தினர். ஆனால், சாலை மறியல் செய்தவர்களைச் சில இளைஞர்கள் புகைப்படம் எடுக்கவே அவர்களைத் தாக்கினர் மறியலில் ஈடுபட்டவர்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிசெய்யும் காவலர் சிரஞ்சீவி என்பவர், கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு குடிபோதையில் பைக்கில் வந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அவரைத் தாக்கியதாகவும் வதந்தி பரவியது. இதனால், கடந்த 14ஆம் தேதி இரவு ‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்த போலீசாரைத் தாக்கிய மாற்றுச் சமூகத்தினரை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று மக்கள் சாலை மறியலில் இறங்கினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகக் கலவரமாக வெடித்துள்ளது. தற்போது சருத்தப்பட்டி கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குச் சென்ற போலீசாரின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்துள்ளதால் தான் எஸ்பியின் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது என்கின்றனர் போலீசார். ஒரு வார காலமாக சாதி மோதல் பதற்றம் புகைந்த நிலையில், மாவட்டக் காவல் துறையும், எஸ்பி தனிப்பிரிவும், எஸ்பிசிஐடியும் விழிப்பாக இல்லாமலிருந்ததால்தான் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டதாகக் சொல்கின்றனர். தமிழக டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றிய பாஸ்கர், மாவட்டத்தில் பணிபுரிய விரும்பி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆசியோடு தேனியில் பதவியேற்றார் என்கிறது போலீஸ் வட்டாரம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.