மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 20!!

வானத்து தாரகைபோல
வண்ணமாய் வந்தவளே!
கண்ணுக்குள் நிறைந்தே நீ 
கண்ணீராய் வழிகிறாய்......
வேலைகளை முடித்துவிட்டு “அப்பாடா” என்றபடி வெளியே வந்த ஆதித்தன், அறைக்குள் நுழைந்து, சோர்வுடன் ஷோபாவில் சாய்ந்துகொண்டான். மனம் கனத்துக் கிடந்தது. 

வைத்தியசாலையில் நடந்துவிட்ட சம்பவம் மனதை அதிகமாய் வதைத்தது. இரண்டு வருடங்களாக காதலித்தவன், சந்தேகப்பட்டு, பேசிவிட்டான் என்றதற்காய் ஒரு பெண் உடலை தீயிட்டுக் கொழுத்தியிருந்தாள், அவனும் சக வைத்தியர்களும் எவ்வளவோ முயற்சித்தும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

வந்திருந்தவர்களின் கதறலும் அந்தப் பெண்ணின் கடைசிநேர முனகலும் அவளைக் காதலித்தவனின் மன்றாட்டமும் ஆதித்தனை என்னவோ செய்தது.

அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்ட அவனும் அவளது அநத நிலையைக்கண்டு துடித்த துடிப்பும், தவித்த தவிப்பும், அவளது உறவினர்கள் அவனிடம் காட்டிய கோபமும் கண்ணுக்குள்ளேயே நின்றது வெற்றிக்கு.
'அவள் இறந்துவிட்டாள்'  என்பதைச் சொன்னதும் வெறிகொண்ட அவனது தோற்றமும் தன்னைத்தானே அழிப்பதற்காய் அவன் எடுத்த முயற்சிகளும்.....அப்பப்பா....


உலகத்தில், காதல் தான், எத்தனை வகை என எண்ணிக்கொண்டான். வெற்றியின் காதல் ஒருவிதம் என்றால் ஒரு பெண்ணின் சாவிற்கு காரணமான இவனது காதல் இன்னொரு விதம்.

ஒவ்வொருவருக்கும் காதல் ஒவ்வொருவிதமாக அல்லவா இருக்கிறது, என எண்ணியவன்,  எழுந்து சென்று குளித்துமுடித்து வெளியே வந்தான்.  இன்று சாப்பாடு இறங்காது என்பதை உணர்ந்தவனாய், ஒரு கப் தேநீரோடு வந்து அமர்ந்துகொண்டான். எண்ணங்கள் சுற்றிச் சுற்றி அந்தக் கோர மரணத்திற்குள்ளேயே நின்றது. ஒரு வைத்தியராக இருக்கும் தான், இந்த அளவிற்கு குழப்பம் அடைவது சரியல்ல எனத்தோன்றினாலும், 'நானும் மனுசன் தானே, எனக்கும் உணர்வுகள் இருக்கும்தானே' என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

சிந்தனைகளைத் திசைதிருப்ப நினைத்தவன், கைபேசியை எடுத்து முகநுாலைப் பார்க்கத் தொடங்கினான்.

“வணக்கம்” என்ற குறுந்தகவல் வந்திருந்தது. யாரென்று பார்த்தான், அவுஸ்ரேலியாவில் உள்ள தோழி ஒருவர், எப்போதாவது  அவர்கள் தகவல் பரிமாற்றத்தில் பேசிக்கொள்வதுண்டு. அவளும் மருத்துவத் துறையில் கற்பதால் இருவரும் அது சார்ந்து நிறைய கதைப்பதுண்டு.
பதில் “வணக்கம்” அனுப்பினான்.

ஒன்லைனில் இருந்திருக்க வேண்டும், உடனேயே “நலமா?” என்ற கேள்வியோடு வந்தது,.
“ஆம்” என்றதுடன், “நீங்கள் நலமா?” என்ற கேள்வியை அனுப்பினான் பதிலாக.

 ‘ஆம்‘ எனப் பதில் வந்தது அந்தப் பெண்ணிடமிருந்து
எப்போதாவது முகநுால் வரும் ஆதித்தனுக்கு இப்படியான உரையாடல்களுக்கு நேரமே இருப்பதில்லை. யாராவது வைத்தியம் சார்ந்து கேள்வி கேட்கும் போது மட்டும் பதில் தந்துவிட்டுப் போய்விடுவான். பாடினியும் அது சார்ந்து கதைப்பதால் அவளோடு எப்போதாவது அவன் கதைப்பதுண்டு. தற்போதைய உரையாடல் மனதிற்கு இதமாக இருந்தது.

.அதன் பின்னர் முகநுாலில்  அழைப்பை ஏற்படுத்தி கதைக்க ஆரம்பித்தனர். உரையாடல் நீண்டு தொடர்ந்தது அவர்களுக்கிடையில். அப்பா, அண்ணா, எல்லாம் ஊரில் இருப்பதாகவும்  தான் மேற்படிப்பிற்காய் வெளிநாடு வந்துவிட்டேன் எனவும் அவள் தன்னைப்பற்றிப் பகிர்ந்துகொண்டாள், அம்மாஅப்பா,  கிராமத்தில் இருப்பதால், தான் மட்டும் வைத்தியசாலை விடுதியில் தங்கி பணிபுரிவதாக ஆதித்தனும் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டான்.

அவனது குரலில் இருந்த தொய்வைக் கண்டவள், “என்ன, ஏதெனக்கேட்க அவனும் அன்றைய நிகழ்வின் தாக்கத்தினையும் அதனால் மனதில் ஏற்பட்டுள்ள வலியையும் பகிர்ந்துகொள்ள,
“இப்ப எல்லாம், காதல் வலிகளைத் தான் கொடுக்குது, முகநுால், ருவிற்றர், இன்ஸ்றா எண்டு எக்கச்சக்கம் வந்து, அதைச் சில பேர் எப்பிடி பயன்படத்துறது எண்டு தெரியாம பயன்படுத்தப் போய், சந்தேகமும் சண்டையும் தான் மிச்சமா கிடக்கிறது, உயிரை எடுக்கிற அளவுக்கு, பிரச்சினைகள்,

காதலிக்கிறவையளிட்ட சரியான புரிதல் இலலாததுதான் காரணம், வேற என்ன, கொடிய துயரம் தான், என்ன செய்யிறது, இதுக்காக நீங்கள் நிறைய யோசிக்காதேங்கோ,” ஆறுதலான அவளது வார்த்தைகளால்  உள்ளத்தில் இருந்த அத்தனை சஞ்சலங்களும் மெல்ல குறைந்தது.

மனதில் தெளிவு வந்தது அதித்தனுக்கு. அவளது இனியான ஆறுதல் ஆதித்தனின் மனதில் ஒரு பொறியைத் தட்டிவிட்டிருந்தது, அவளைப் பற்றி அறியத்தொடங்கினான்.

மறுநாளும், அதே நேரம், அவளுக்கு குறுந்தகவல் அனுப்பினான். அவளும், அழைப்பை எடுத்தாள். இருவரும் சகஜமாய் பேசிக்கொண்டனர்.
 “பாடினி, நல்லா பாடுவீங்களோ?” என்ற ஆதித்தனுக்கு,
“பாடுவேன் ஆனா யாரும் கேக்கமாட்டாங்க, வீடு கட்ட கல் வேணுமெண்டா சொல்லுங்க நான் பாடித்தர்றன்” என்றதும் சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு, சிரித்தபடியே அவளிடமிருந்து விடைபெற்றான்.

அப்போதுதான் நினைவு வந்தவனாக வெற்றி கொடுத்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தான். சில நிமிடங்களில் வெற்றி பேச,

“ஹலோ வெற்றி, இப்ப கனிக்கு எப்பிடி இருக்கு, பரவாயில்லையா? அவ எங்க இருக்கிறா? பேசமுடியுமா?” என்றான்.
“ம்...இப்ப பரவாயில்லை ஆதித்தன், அவ வீட்டில இருக்கிறா, நானும் அனந்துவும் வெளியில வந்திருக்கிறம்” என்றான்.

“வெளியிலயா? எங்க? எனக்கு அந்த குழந்தையை பாக்கணும் போல இருக்கு, நீங்க நிக்கிற இடத்தைச் சொல்லுங்கோ, நானே அங்க வர்றன்” என்ற அதித்தனிடம் விபரம் சொன்ன வெற்றி, அனந்திதனிடம் திரும்பி,

“அனந்துக் குட்டியைப் பாக்க மாமா வரப்போறார்” என்றான். அவனைப் பார்த்தபடி சிரித்த குழந்தையை முத்தங்களால் அர்ச்சித்தான் வெற்றிமாறன்.

பத்தே நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்த, ஆதித்தன், தனது உந்துருளியை நிறுத்திவிட்டு இவர்களிடம் வந்தான். புதிதாக ஒருவரைக் கண்டதும் வெற்றியை இறுக்கமாக பற்றிக்கொண்ட குழந்தையின் தலையைத் தடவிய ஆதித்தன், ‘மாமாடா...  வா...வா‘ என்றான்.

என்ன நினைத்தோ ஆதித்தனிடம் தாவியது குழந்தை. இறுகப்பற்றி குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட ஆதித்தன், வாங்கி வந்திருந்த பிஸ்கட் பக்கெற்றைக் கொடுத்துவிட்டு எதிரே இருந்த இராட்டினத்தின் ஆசனத்தில் அமர்த்தினான்.

“வெற்றி, இவன் பேர்?”
“அனந்திதன்......அவனோட அம்மாவுக்கு அனந்து” என்றான் மெல்லிய புன்னகையுடன். 

“அம்மாவை மாதிரியே தான் இருக்கிறான், சின்ன வயசில அவ இப்பிடித்தான் கொழுகொழுவென்று இருப்பா,” என்ற ஆதித்தனிடம், ”ஆதி...அவளோட சின்ன வயசு போட்டோ ஏதாவது உங்களிட்ட இருக்கா, இருந்தா தாங்களேன், பாக்கணும் போல இருக்கு” என்றான் வெற்றி.

தனது பேஸில் இருந்த கனிமொழியின் சிறுவயதுப் படத்தை எடுத்துக்கொடுத்த ஆதித்தன், “உங்களிட்டயே இருக்கட்டும்” என்றான்.

“இல்லை....இல்லை ...நீங்கள் வைச்சிருந்தது,” என இழுத்த வெற்றிக்கு தானும் கனிமொழியும் ஒன்றாக இருந்து எடுத்த படத்தைக் காட்டிய ஆதித்தன், “இது இருக்கு” என்றான்.

இருவரையும் வேடிக்கை பார்த்தபடி பிஸ்கட் ஒன்றைச் சாப்பிட்டு முடித்த குழந்தை அவசரமாய் எழுந்து வெற்றியிடம் தாவிக்கொண்டான்.

“சரி வாங்கோ...அப்பிடியே கடையில ஏதாவது சாப்பிடுவம்” எனக்கேட்ட ஆதித்தனுடன் கூட நடந்தனர் வெற்றியும் மகனும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.