விஷாலுக்கு எதிரி விஷால்தானா?
வேட்டைப் பொருளான நடிகர் சங்கப் பதவிகள் - 2
இராமானுஜம்
அரசியல் கட்சிகள், ஆளும் அரசுகளின், பெரும் பணக்காரர்களின் கண் அசைவுக்குக் கட்டுப்படாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கான உதாரணம்தான் இம்மாத இறுதியில் நடக்கவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் என்று நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டது பற்றிப் பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக அரசுக்குத் தலைமை தாங்குவது அதிமுகவாக இருந்தாலும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது, செலுத்திக் கொண்டிருப்பது திமுக சார்ந்த ஊடகமே. 2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் தமிழகம் முமுவதும் சிதறிக் கிடந்த நாடக நடிகர்களை ஒருங்கிணைத்துச் சென்னைக்கு அழைத்துவந்து பாண்டவர் அணிக்கு ஆதரவாக வாக்களிக்கும் களப்பணியைக் கச்சிதமாகச் செய்து கொடுத்தது உதயநிதி சார்ந்த விநியோகஸ்தர்களே.
வெற்றி பெற்ற விஷால் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார் என்றுதான் கூற வேண்டும். ஆனால், தனது வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறினார் அதன் காரணமாக அவர் உடன் இருந்தவர்களே எதிரிகளாக மாறினார்கள்.
எதிர்பாராமல் கிடைத்த நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கப் பதவிகளுக்கு வந்த பின் பொறுமையும் நிதானமும் இழந்த விஷால் இதனைத் தனது தனிப்பட்ட வெற்றியாகக் கருதியதன் விளைவு ஆளும் அரசுக்கு எதிராகப் பேசவும், அரசியல் விமர்சனம் செய்யவும் தொடங்கினார்.
தமிழ் சினிமா வியாபாரத்தைத் தீர்மானிக்கக்கூடியவர்களுடன் தேவையற்ற மோதல் போக்கை மேற்கொண்ட விஷால் தனக்குப் பிரச்சினை வரும்போது சமரசமாவதும் மற்ற நேரங்களில் எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடித்ததும் திரைத்துறை வட்டாரத்தில் அவருக்கு எதிர்ப்பு அலையை உருவாக்கியன.
தன்னை நம்பி வாக்களித்த நடிகர் சங்க உறுப்பினர்கள் தொடர்புகொள்ள முடியாத தூரத்தில் இருக்கத் தொடங்கினார். இதனைச் சுட்டிக்காட்டிச் சரி செய்ய வேண்டிய இவரது உதவியாளர்கள், நட்பு வட்டங்கள், பத்திரிகைத் தொடர்பாளர், என அனைவருமே விஷாலை எளிதில் நெருங்க முடியாத சூழலை உருவாக்கத் தொடங்கினார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரும் விஷாலுக்கு மட்டும் கடுமையான எதிர்ப்பு அலை உருவாகக் காரணமாக அவரது நண்பர்களான நடிகர்கள் நந்தா, ரமணா, உதவியாளர் பாலமுரளி, பத்திரிகைத் தொடர்பாளர் ஜான்சன் ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். விஷாலை முன்னிறுத்தி இவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள முயற்சித்தவர்கள்; அவருக்கு வெளியுலகில் நடப்பவற்றை எடுத்துக் கூறி ஒழுங்குபடுத்த எப்போதும் முயற்சித்ததில்லை என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.
இதனால் ஆளும் அரசு விஷாலுக்கு எதிரானது. மலேசிய நட்சத்திரக் கலை விழாவுக்குச் சென்றவர்களுக்கான டிக்கட் முன்பதிவு செய்யும் பொறுப்பை பெற்றவர், அதில் அதிகபட்ச வருமானம் பெற முயற்சித்ததால் ஏற்பட்ட குளறுபடியைத் தட்டிக் கேட்டதால் பாண்டவர் அணியை இரு அணியாகப் பிளக்க அடித்தளம் அமைத்த நடிகர் யார்?
தன் விருப்பபடி விமான டிக்கட் கிடைக்காததால் தன்னுடன் நல்லுறவில் இருந்த கல்வியாளரை உசுப்பேற்றி சங்கரதாஸ் சுவாமிகள் அணி உருவாகப் பணியாற்றிய சங்கீதமான நடிகை, இவர்கள் முயற்சிக்கு ஆதரவு தந்து பாக்யராஜின் தலைமை ஏற்க என்ன காரணம்?

.jpeg
)





கருத்துகள் இல்லை