பேருந்து மேற்கூரையிலிருந்து கொத்தாக விழும் மாணவர்கள்!
சென்னை பஸ் டே கொண்டாட்டத்தின் போது பேருந்து கூரை மீது அமர்ந்திருக்கும் மாணவர்கள் கொத்தாகக் கீழே விழுந்து அடிபடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின் பேரில், மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்கதையாகி வருகிறது. நேற்று 47ஏ என்ற பேருந்தில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 18) பஸ் டே கொண்டாட்டத்தின் போது, பேருந்து மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் கொத்தாகக் கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது.
செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40எ என்ற மாநகர பேருந்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்து, பேருந்தின் முன்பக்கம் பேனர் கட்டியுள்ளனர். பின்னர், பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன் இரு சக்கர வாகனத்தில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டுள்ளனர். இதனால் பேருந்து ஓட்டுநரும் பிரேக் போட பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டு வந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்து அடிபட்டனர்.
தகவலறிந்து அங்கே சென்ற போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பிவைத்திருக்கின்றனர். இதே போன்று ராயப்பேட்டையில் 21 என்ற பேருந்தைச் சிறை பிடித்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். மெரினா கடற்கரை சாலையில் 60 என்ற எண் கொண்ட பேருந்தையும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அங்கே வந்த அண்ணா சதுக்கம் போலீசார் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். நேற்று மட்டும் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 பேரைக் கைது செய்திருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பஸ் டே கொண்டாட்டத்தின் பேரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கல்லூரி மாணவர்களைத் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்று கல்லூரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை