அன்று வீரத்துக்கு பெயர்போன மண்ணிலே இன்று விலைபோகும் அரசியல் முன்னெடுப்பு !!!

“ அன்று வீரத்துக்கும், கொள்கைக்கும் பெயர்போன வடக்கு மண்ணில், இன்று ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் சில்லறைகளுக்கு விலைபோகும் அரசியலை முன்னெடுத்து, தமிழ் மக்களின் வாக்குகளை அடகுவைக்க எத்தனிப்பதுதான் இராஜதந்திர அரசியலா:”  

“ கோவணத்துக்கே வழியில்லாமல் இருப்பவர்களுக்கு ‘கோட்சூட்’ வழங்கினால் எல்லாமே சரியாகிவிடும், கடந்த காலத்தை மறந்துவிடுவார்கள்” என்ற கொள்கையில் அரசியலை முன்னெடுக்கும் சுயநல அரசியல்வாதிகளை வடக்கு மக்கள் துடைத்தெறிய வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் உதயமாகி நான்காண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் தற்போதுதான் சுடலை ஞானம் பிறந்ததுபோல், அரசாங்கம் 50 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதை வரலாற்று வெற்றியாக கருதி, ஏதோ, வானத்தையே வில்லாக வளைத்து சாதனை படைத்துவிட்டதுபோல் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் மார்தட்டிக்கொள்கின்றனர்.

உரிமைகளை உரத்துக்கேட்காமல் சலுகைகளுக்காக கையேந்தும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளால், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பணத்துக்காக தலையாட்டும் பொம்மைகள் என்ற விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கானதொரு அரசியல் நகர்வே புதிய நிதியம் உருவாக்கம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் இலகுவில் நிராகரித்துவிடமுடியாது.

அபிவிருத்திக்கான இந்த நிதிப்பங்கீட்டை வெறுமனே வாக்குவேட்டை நடத்துவதற்கான பொறிமுறையாக மட்டும் கருதிவிடமுடியாது. தமிழர்களை மூன்றாம் நிலை இனமாக மாற்றுவதற்கான சதி வலையும் இதில் பின்னப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் ஆளுங்கட்சிகளின் பங்காளியாகவ செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொண்டது ஒருவகையில் நியாயம்தான். அதற்கான காரணம் என்னவென்பதை நான்கூறிதான் புரியவேண்டும் என்றில்லை.

குறித்த நிதியை இந்த ஆண்டுக்குள் முழுமையாக பயன்படுத்த முடியுமா? இல்லை என்பதே நிராகரிக்க முடியாத பதிலாக அமையும். காரணம்,   திறைசேரிக்கு திரும்பி செய்வதற்கான அறிகுறிகளே பிரகாசமாக தென்படுகின்றன. 

எனவே, அமைச்சுக்களைப் பொறுப்பேற்று இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் பாரிய அபிவிருத்திகளை செய்வதை விடுத்து,  இப்படி சில்லறைக்கு ஆசைப்பட்டுளு தமிழ் மக்களை அடகு வைக்கும் வகையிலான விலைபேசும் அரசியல் கலாச்சாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். 

இல்லையேல், தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே,  தமிழ் மக்களின் அரசியல் பயணம் தூர நோக்குடன் அதிகாரம் உள்ள தமிழ் தலைமைகளை உருவாக்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். “ 

விநாயகமூர்த்தி ஜனகன். 
அமைப்புச் செயலாளர்
ஜனநாயக மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.