இறுதிவரை துணையிருக்க உதவும் திருமண அறிவியல்!

சத்குரு ஜகி வாசுதேவ் இந்தியாவில், பாரம்பரியத் திருமணங்களுக்குப் பின்னால் ஒரு முழுமையான விஞ்ஞானம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அது ஒரு வேடிக்கையாகிவிட்டது. இரண்டு பேருக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்பொழுது, அவர்கள் உடல் தன்மைகள், இரு குடும்பச் சூழ்நிலைகளில் மட்டும் பொருத்தம் பார்க்கப்படவில்லை. இன்னும் ஆழமாக, சக்தி சூழ்நிலையிலும் பொருத்தம் பார்க்கப்பட்டது.

பெரும்பாலான நேரங்களில் அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஏனென்றால் இருவரைக் காட்டிலும் மேலான அறிதல் உள்ள ஒருவரால் பொருத்தம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருமணம் செய்துகொள்பவர்களே தங்களது விருப்பத்திற்கேற்ப துணையைத் தேர்வு செய்தால், கண்ணழகு, மூக்கின் அழகு போன்றவற்றைப் பொறுத்தே தேர்வு செய்வார்கள். திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த அம்சங்கள் அர்த்தமற்றுப்போகும். உங்கள் மனைவிக்கு அற்புதமான கண்கள் இருக்கின்றன, ஆனால் எந்நேரமும் உங்களை அவள் முறைத்துக்கொண்டிருக்கிறாள் எனில், பிறகு அந்த திருமணத்தில் என்ன பொருள் இருக்கப் போகிறது? திருமண அறிவியலைப் பயன்படுத்தியவர்கள் உருவாக்கியதுதான் மங்கல சூத்ரா அல்லது மங்கல நாண். யோக அறிவியலிலும் இதுபோன்று உருவாக்கப்படுகிறது. மங்கல சூத்திரம் என்றால் மங்கலக் கயிறு என்பது பொருள். ஒரு மங்கலக் கயிற்றைத் தயாரிப்பதில் பெரும் அறிவியல் அடங்கியுள்ளது.


தூய பஞ்சைக் கொண்டு சில நூலிழைகளைத் தயாரித்து, அந்த நூலில் குங்குமம், மஞ்சளைத் தடவிய பிறகு, அது ஒரு குறிப்பிட்ட விதமாக சக்தியூட்டப்படுகிறது. சக்தியூட்டப்பட்டு, ஒருமுறை அணியப்பட்டுவிட்டால், வாழ்க்கை முழுவதும் அதைக் கடந்தும் அவர்களது உறவு நீடிக்கிறது. பல பிறவிகளுக்கும் அதே தம்பதிகள் இணைந்திருந்ததற்கான பரிசோதனை முறைகள் இருந்துள்ளன. உடல் நிலையிலும், உணர்ச்சி நிலையிலும் மட்டும் இல்லாமல், வேறு ஒரு நிலையிலும் அவர்களை இணைத்துக் கட்டும்படியான வழிமுறைகள் பின்பற்றப்பட்ட காரணத்தால், அந்த இருவரும் பிறவிகள் தோறும் இணைந்திருப்பதை விழிப்புணர்வுடன் தேர்வு செய்தனர். உடல், மனம், உணர்ச்சியின் நிலையில் நீங்கள் நிகழ்த்தும் எதுவும் மரணத்தோடு முற்றுப் பெறுகிறது.


ஆனால் சக்தியின் நிலையில் நீங்கள் என்ன செய்தாலும் அது நீடித்து நிற்கிறது. இருவரது நாடிகளும் அங்கே இணைத்துக் கட்டப்படுவதால்தான் அது ஒருமுறை செய்யப்பட்டதென்றால், வாழ்நாள் முழுவதும் நிலைத்துவிடுகிறது. மறுபரிசீலனை செய்வது என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. ஏனெனில் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று அறிந்தவர்களால், உங்களது புரிதலுக்குட்படாத மிகமிக ஆழமான ஒன்று இணைத்துக் கட்டப்படுகிறது. இப்போதும் அதே விதமான செய்முறை செய்யப்படுகிறது. ஆனால், அதன் அறிவியல் தெரியாதவர்களால் அது நடத்தப்படுகிறது. ஆகவே, பல காரணங்களால் “அந்தக் கயிற்றை அணிய எங்களுக்கு விருப்பமில்லை” என்ற மறுப்பு மக்களிடம் தற்போது இயல்பாக எழுகிறது. இன்றைய நிலையில் நீங்கள் அதை அணிந்தாலும், அணியாமல் இருந்தாலும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காணாமல் போய்விட்டது.


 அது எப்படிச் செய்யப்படுவது என்பதை அறிந்த ஒருவரால் மங்கல சூத்திரம் செய்யப்பட்டபோது, அதன் பிறகு அந்த இருவருக்கும் “இந்த நபர் என் மனைவியாக இருக்க வேண்டுமா, இல்லையா?” என்றும் “இந்த ஆண்தான் என்றென்றைக்கும் என் கணவராக இருக்கப் போகிறாரா?” என்றும், அவர்கள் மனதில் சந்தேகம், சலிப்பு என்று எதுவும் எழுவதில்லை. அந்த உறவில் இருவரும் தடங்கலின்றி பயணப்படுகின்றனர். மரணத்துடன்கூட அது நிற்பதில்லை.

இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் ஆரோக்கியமாக இருந்தாலும் சில மாதங்களுக்குள் இவரும் இறந்துவிடுவார். ஏனென்றால் சக்தி நிலைகள் அந்த மாதிரி கட்டப்பட்டிருந்தன. இன்னொரு மனிதரோடு நீங்கள் அந்த விதமாகப் பிணைக்கப்பட்டால், இரண்டு உயிர்களும் ஒரே உயிராக வாழ்கின்றன. அது அற்புதமான ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையே உச்சபட்ச சாத்தியமாக இருப்பதில்லை என்றாலும், அது வாழ்வதற்கான அழகான வழிமுறையாக இருக்கிறது.


 இன்றைக்கு மக்கள் அன்பைப் பற்றிப் பேசும்பொழுது, அன்பின் ஒரு பகுதியாக மட்டும் இருக்கின்ற உணர்ச்சிகளைக் குறித்தே பேசுகின்றனர். உணர்ச்சிகள், இன்றைக்கு ஒருவிதமாகக் கூறும்; நாளைக்கு வேறொரு விதமாகக் கூறும். நீங்கள் முதலில் உறவை உருவாக்கியபொழுது, “இது என்றென்றைக்குமான உறவு” என்று எண்ணினீர்கள். ஆனால் மூன்று மாதங்களுக்குள், “ஓ, நான் ஏன்தான் இந்த நபருடன் இருக்கிறேன்?”


என்று எண்ணுகிறீர்கள். ஏனெனில் இதெல்லாமே உங்கள் விருப்பு, வெறுப்பின் வழியே நிகழ்கின்றன. இந்த விதமான உறவு நிலையில் நீங்கள் அதிக துன்பத்திற்கு மட்டுமே ஆளாவீர்கள். ஏனெனில் ஒரு உறவுநிலையானது, சமநிலையற்று இருந்தாலும் இந்த மாதிரி அவ்வப்போது விலகுவதும், இணைவதுமாகவும் இருந்தாலும், நீங்கள் அளவு கடந்த வலியையும், வேதனையையும் அனுபவிப்பீர்கள்.


இது முற்றிலும் தேவையற்ற ஒன்று. அன்பினால் உருவாகும் வலியைக் குறித்து எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும், அன்பின் நோக்கம் வலியை உருவாக்குவதல்ல. அன்பிற்குள் நீங்கள் ஏன் செல்கிறீர்கள் என்றால், அன்பு என்பது உங்களுக்குப் பரவசத்திற்கான வழியாக இருக்கிறது. அன்பு கொள்வது நோக்கமல்ல, பரவசம் அடைவதே நோக்கமாக இருக்கிறது. யாருடனாவது காதலில் விழுவது குறித்து மக்கள் பித்தாக இருக்கின்றனர். ஏனெனில் எத்தனை முறை அன்பில் அவர்கள் காயப்பட்டாலும் அவர்கள் காதலில் இருந்த நினைவே அவர்களுக்குள் ஒரு சிறிதளவு பரவசம் தருவதாக உள்ளது. பரவசத்திற்கான ஒரு வழியாகவே மக்கள் காதலைப் பார்க்கின்றனர். எப்படிப் பரவசமாக இருப்பது என்பதற்கு, பெரும்பாலான மக்களும் தற்போது அந்த ஒரு வழியைத்தான் அறிந்திருக்கின்றனர்.


 ஆனால், எந்த வழியையும் சார்ந்திருக்காமல் பரவசமுடன் இருக்க முடியும். நீங்கள் ஆனந்தத்துடன் இருந்தால், அன்புடன் இருப்பது ஒரு பிரச்சினையல்ல. எப்படியும் அப்போது நீங்கள் அன்பாகத்தான் இருப்பீர்கள். அன்பின் மூலமாக நீங்கள் ஆனந்தத்தைத் தேடும்போதுதான் யார் மீது அன்பாக இருப்பது என்பது பற்றி அதிகம் தேர்வு செய்கிறீர்கள்.


ஆனால் நீங்கள் ஆனந்தத்தில் நிரம்பியவர் என்றால், நீங்கள் பார்ப்பது எதுவாயினும், அதனுடன் நீங்கள் அன்பாக இருக்க முடியும். ஏனென்றால் பிணைக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் அங்கே இல்லை. பிணைக்கப்படும் பயம் இல்லாதபொழுது மட்டும்தான் வாழ்க்கையோடு, உயிர்த்தன்மையோடு ஈடுபாடு கொள்வீர்கள்.

No comments

Powered by Blogger.