பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்!!

பாமக வழக்கறிஞர்கள் பிரிவான சமூக நீதி பேரவையின் மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூன் 23) சென்னை சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. பாமகவின் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்தது சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே நியமிக்க வேண்டும், . மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும், உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், தமிழ்நாட்டில் திருநங்கையர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இறுதியாக சிறப்புரையாற்றிய ராமதாஸ், “பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ள மாட்டேன். இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து ஒரு வரி செய்தி வெளியிடாத ஊடகங்கள், ஆனால் இளவரசன் தற்கொலையை கொலை என்று கூறி எங்கள்மீது பழி போடுகின்றன” என்று விமர்சித்தார். வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை என்பது ஆர்.எஸ்.எஸ் போல செயல்பட வேண்டும் என்றும் அப்போது பேசினார்.

No comments

Powered by Blogger.