கிராம சபைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு கமல்ஹாசனின் உத்தரவு!

கிராம சபை ஆட்சியை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கிராமசபைக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் கிராமப் பஞ்சாயத்துகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். இன்று (ஜூன் 23) மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மே 1ஆம் தேதியன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட, கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராம சபை அமைப்பு பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்த நேரத்தில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சி அதை செயல்படவைக்கும் முயற்சியை முன்னெடுத்தது. அதன்வழியில் வரும் ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களும் முழுமையாக நடைபெற நமது மக்கள் நீதி மய்யம் கட்சி எப்போதும் போல் திறம்பட செயல்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். எனவே, வரும் ஜூன் 28ஆம் தேதியன்று தமிழகத்தில் இருக்கும் 12,000க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில் இந்த முறையும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும். கிராமசபைக் கூட்டங்கள் தொடர்பான நடைமுறையை இப்போதே நிர்வாகக் குழு, செயற்குழு, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி, களப் பொறுப்பாளர்கள் தொடங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.