பிரதமர் மோடிக்குத் தலைமை நீதிபதி கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மூன்று கடிதங்களை எழுதியுள்ளார். அவற்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது வரம்பை 65ஆக உயர்த்தும்படியும் ரஞ்சன் கோகாய் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது கடிதத்தில், “பொதுமக்களுக்குச் சரியான நேரத்தில் நீதி வழங்குவதற்கான நோக்கங்களை அடைவதற்காகவும், உச்ச நீதிமன்றம் முழு திறனுடனும் செயல்படுவதற்காகவும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துப் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 128, 224ஏ ஆகியவற்றின் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்படி பிரதமர் மோடியை ரஞ்சன் கோகாய் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் 58,669 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் பற்றாக்குறையால் முக்கிய வழக்கு விசாரணைகளுக்குத் தேவையான அமர்வுகளை அமைக்கமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்கு நான்கு நீதிபதிகளுக்குக் கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அவர்கள் பதவி நியமனம் செய்யப்பட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருப்பார்கள். தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர். ரஞ்சன் கோகாய் தனது இரண்டாவது கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது வரம்பை 62 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரும்படி அவர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கான பற்றாக்குறை இருப்பதாலேயே நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் தனது கடிதத்தில், “தற்போது 399 பதவிகள் அல்லது ஒட்டுமொத்த நீதிபதிகளுக்கான பதவிகளில் 37 விழுக்காடு காலிப்பணியிடங்களாகவே உள்ளன. இந்தக் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அனைவரும் முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் தேவையான நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு நிகரான நீதிபதிகளை நியமிக்க முடியவில்லை. ஒரு நீதிபதி பரிணாம வளர்ச்சி பெறுவதற்குக் காலம் தேவைப்படும். விசாரணைகளில் அவர் தனது புதிய சிந்தனைகளைப் புகுத்துவதற்குத் தயாராகும் காலத்தில் அவரது பணி ஓய்வுக்காலம் வந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நீதிபதிகளின் பணி ஓய்வு வயது வரம்பை நீட்டிக்க வேண்டும். இதனால் நீதிபதிகளின் அனுபவத்தை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயங்களில் நியமிக்க பரிசீலனை செய்யப்படுகின்றனர். என்னுடைய கருத்தின்படி, அவர்கள் உயர் நீதிமன்றங்களிலேயே 65 வயது வரை பணியைத் தொடரலாம். இந்த முன்மொழிதலால், அனுபவம் பெற்ற நீதிபதிகள் நீண்டகாலத்துக்குப் பணியை மேற்கொள்வர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.