இந்தியா - இஸ்ரேல்: உறவும் வரலாறும்!

உலக அரசியல் பழகு - ஆரா

விடுதலை பெற்ற பிறகான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கடந்த பத்தாண்டுகளில் மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்து கடந்த கட்டுரைத் தொடரில் பார்த்தோம்.
அணிசேராக் கொள்கை என்ற நிலையிலிருந்து இந்தியா இப்போது அமெரிக்காவின் சார்பான அணி என்ற நிலைக்குச் செல்கிறதா என்ற கோணத்திலும் நாம் எழுதியிருந்தோம். இதைப் படித்துவிட்டு சிலர், ‘இந்தியா இப்போது அமெரிக்க ஆதரவான நிலையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் அல்லவா இருக்கிறது?’ என்று கருத்து தெரிவித்தார்கள். சமீப நாட்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகம், வரி விதிப்புகளில் நடக்கும் மோதல்களையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
அதேநேரம் பிரதமர் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை பற்றி நம்மிடம் கருத்துரைத்த இன்னும் சிலர், “அணி சேராக் கொள்கை என்பது தற்போதைய இந்தியாவுக்குப் பொருந்தாது. அப்போது இந்தியா சுதந்திரம் பெற்ற புதிது. பிறந்த குழந்தை போன்றது. ஆனால், இப்போது வளர்ந்து நிற்கிறது. உலகின் முக்கிய சக்திகளை அனுசரித்து, ‘பேலன்ஸ்’ செய்து போவதுதான் அணி சேராக் கொள்கை. ஆனால் மோடியோ, இந்தியாவே உலகின் முக்கிய சக்தியாகத் திகழ வேண்டும் என்றும், இந்தியாவை வைத்து அணிகள் உருவாக வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறார். எனவே, இது அணி சேராக் கொள்கையிலிருந்து அடுத்தகட்ட சக்தியாக இந்தியாவை முன்னேற்றுவதற்கான வளர்ச்சித் திசை நடவடிக்கைதான்” என்கிறார்கள்.
இது ஒருபக்கம் என்றால், இஸ்ரேலைப் பொறுத்தவரை முந்தைய இந்தியாவின் நிலைப்பாட்டோடு ஒப்பிடுகையில், இப்போதைய இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் மாறியிருப்பதும் இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றத்துக்கான ஒரு சமிக்ஞை என்று சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அதுபற்றிப் பார்ப்போம். இதுவும் அணி சேராக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான நிலையாக இருக்கிறது.
இஸ்ரேல் என்ற நாட்டிலிருந்து தனி நாடு கேட்டுப் போராடிய பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்துக்கு இந்தியா உலக அரங்கில் பிரத்யேக தோழனாக இருந்தது ஒரு காலம்.
யூதர்களின் தனி தேசமாக 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவான பின்னர், இஸ்ரேலின் மேற்குக் கரையில் இருக்கும் காசா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக பெற்ற பாலஸ்தீனம் இஸ்ரேலிடம் இருந்து தன் விடுதலைக்காகப் போராடியது.
1988 நவம்பர் 15ஆம் தேதி பாலஸ்தீனத்தை சுதந்திர பாலஸ்தீனம் என்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் அறிவித்த போதும், இன்று வரை பாலஸ்தீனம் ஐநாவின் உறுப்பு வகிக்கும் நாடு என்ற அந்தஸ்தைப் பெறவில்லை. அதற்குக் காரணம் இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்புதான்.
2011ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அப்போதைய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சார்பில் ஐநா பொதுச் செயலாளருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்புகிறார். சுதந்திர பாலஸ்தீனத்தை ஐநா அங்கீகரித்து அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றாக ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த விண்ணப்பம். 2012 நவம்பர் 29ஆம் தேதி பாலஸ்தீனத்தின் இந்த கோரிக்கை மீது ஐநா முடிவெடுத்தது. அதன்படி ஐநாவின் பொது அவை பாலஸ்தீனத்துக்கு observer state status என்ற பிரிவில் இடம் அளித்தது. அதாவது ஐநாவின் உறுப்பு நாடாக பாலஸ்தீனத்தைச் சேர்க்க முடியாது என்றும் அதற்குப் பதிலாக ஐநா அவையில் பார்வையாளர் நாடு என்ற நிலையை மட்டுமே ஐநா வழங்கியது. ஓட்டளித்தல், விவாதித்தல் போன்ற எந்த உரிமையும் பார்வையாளர் நாட்டுக்குக் கிடையாது.
யாசர் அராஃபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சார்பில் நடந்து வந்த ஆட்சியை உலகத்தில் அங்கீகரித்த அரபு அல்லாத முதல் நாடு இந்தியாதான். 1975ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் புதுடெல்லியில் திறக்கப்பட்டது. பாலஸ்தீனத்தோடு இந்தியாவின் முழுமையான அரசியல் உறவுகள் 1980இல் நிர்மாணிக்கப்பட்டன. இத்தனைக்கும் 1988இல்தான் பாலஸ்தீனத்தை தனி நாடு என்று யாசர் அராஃபத் பிரகடனப்படுத்தினார்.
பாலஸ்தீனத்துடனான இந்தியாவின் உறவுகள் இப்படி என்றால், இஸ்ரேலுடனான உறவு எப்படி இருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்,
1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்னும் நாடு முதன்முதலில் உருவானபோது இந்தியா அதை எதிர்த்தது. 1949ஆம் ஆண்டு, மே மாதம் இஸ்ரேல் ஐ.நா.வுக்குள் நுழைந்தபோது அதையும் இந்தியா எதிர்த்தது. இஸ்ரேல் என்ற நாடு உருவாகி இரு வருடங்கள் கழித்து 1950 ஆம் ஆண்டுதான் இந்தியா அதை அங்கீகரித்தது.
பாலஸ்தீனத்துடன் அரசியல் உறவுகளை மேம்படுத்திய பிறகே அதாவது மிகப் பிற்பாடுதான் 1992இல் இஸ்ரேலுடனான அரசியல் உறவுகளை மெல்ல தொடங்கியது இந்தியா. 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் செய்தார்.
2017ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரைப் பெற்றார். 1950இல் இஸ்ரேல் என்ற தேசத்தை இந்தியா அங்கீகரித்த பின்னர், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னே இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணம் இஸ்ரேலுக்கு நிகழ்ந்தது.
இதையே பின்னர் மோடியே ஒரு சந்திப்பில் கேள்வியாகவும் கேட்டார். “70 வருடமாக ஒரு நாட்டுக்கு இந்தியப் பிரதமர் போகாதது ஏன்?” என்ற மோடியின் கேள்வியில் பல வரலாறு ஒளிந்திருக்கிறது. இங்கேதான் வெளியுறவுக் கொள்கையின் மீதான மாற்றமும் நிகழத் தொடங்குகிறது.
அதன் அடிப்படையில்தான் ஜூன் முதல் வாரத்தில் ஐநாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்கிறது இந்தியா. அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு. அதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.