நாளைய இந்தியா எப்படி இருக்கும்?

கேபிள் சங்கர்

இந்திய நெட்ஃப்ளிக்ஸின் சீரிஸ்கள் பெரும்பாலும் உலக அளவில் பெயர் பெற்ற இந்திய இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்களை வைத்துத்தான் எடுக்கப்படுகின்றன. அவர்களது பார்வையாளர்களின் வீச்சு அத்தனை பெருசு. இம்மாதிரியான பெயர் பெற்றவர்களின் பெயர்கள் இணைந்திருக்கும்போது உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் குவிக்கும் கவனம் மிகப் பெரியது. அப்படியான ஒரு சீரிஸ்தான் இந்த லேலா. தீபா மெகத்தா, பவன் குமார், ஹ்யூமா குரேஷி, நம்மூர் சித்தார்த் எனப் பெரிய டீம்தான்.

கம்ப்யூட்டர் இளைஞன் ஒருவன் கடத்தப்படுகிறான். கண்விழித்துப் பார்த்தால் சொர்க்கம் போன்ற ஒரு நாட்டில் இருக்கிறான். அந்த நாடே சுபிட்சமாய் இருக்கிறது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. அவர்கள் நாட்டில் மக்களுக்குக் கொடுக்கும் சத்து மருந்து விநியோகத்தில் கொஞ்சம் கம்ப்யூட்டர் குளறுபடி. அதைச் சரி செய்யத்தான் இவனைக் கடத்தி வருகிறார்கள்.
அதைச் சரி செய்ய முயலும்போது ஒரு கூட்டம் அவனை அணுகுகிறது. சப்ளையைச் சரி செய்ய வேண்டாம் என்கிறது. அது மக்களை மூடர்களாக்கச் செலுத்தப்படும் மருந்து; அந்த மருந்தின் வீரியம் குறைந்ததால்தான் தங்களின் சுயம் தெரிந்தது என்பார்கள். அந்த நாட்டின் முதல் சுதந்திர முயற்சி. பின்பு என்ன ஆனது என்பது சுஜாதாவின் ‘சொர்க்கத் தீவு” எனும் நாவலின் கதை.
இதே போல்தான் 2049இல் இந்தியா ஆர்யவர்த்தாவாக மாறிவிட்டது. தண்ணீர் பஞ்சம். காற்றும் மாசு ஆகிவிட்டது. மழைகூடக் கறுப்பாகத்தான் பெய்கிறது. அந்த அளவுக்கு மாசு. ஏழைகள் குப்பை கூளங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் ‘தூஷ்’ என்று பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரவர் சாதிக்கு ஏற்பச் சுவர் எழுப்பி அதனுள் வாழ்கிறார்கள். மாற்று மதத்தினரைத் திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையையும் அவர்களிடமிருந்து பிரிக்கிறார்கள். பெண்களைச் சுத்தப்படுத்துகிறோம் என்று தனியே அவர்களைக் கிட்டத்தட்டச் சிறையில் வைத்து ஆர்யவர்த்தாவின் சித்தாந்தங்களை அவர்களிடத்தில் திணித்து மூளைச் சலவை செய்கிறார்கள்.
கதை நாயகி ஷாலினி ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டு லேலா எனும் பெண் குழந்தையுடன் சந்தோஷமாய் நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது கதை. கூரையை உடைத்து உள்ளே நுழையும் ஆட்கள் வெளியில் அவனவன் குடிக்கத் தண்ணியில்லாமல் இருக்கிறான், இங்க உனக்கு நீச்சல் குளமா என்று அடிக்கிறார்கள். ஷாலினியைச் சுத்தப்படுத்தும் அமைப்புக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.
அங்கிருந்து வெளியேறித் தன் பெண்ணை கண்டுபிடிக்க முயல்கிறாள் ஷாலினி. வெளியே வரும்போது உடனிருக்கும் பாதுகாவலன் பானு அரசு எதிர்ப்பாளன். தீவிரவாதி என்றுகூடச் சொல்லலாம். ஆளும் ஆர்யவர்த்தா அரசை நடத்தும் ஜோஷியைக் கொல்ல முயலும் தீவிரவாதக் கும்பலின் தலைவன். இழந்த வாழ்க்கையை, தன் பெண்ணை, மீட்க வேண்டுமென்றால் ஆர்யவர்த்தா எனும் நாட்டின் தலைமையை அழிக்க வேண்டும்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் முதல் சீசன்.
ஷாலினியாய் ஹ்யூமா குரேஷி, பானுவாக சித்தார்த். ஹ்யூமா குரேஷி தன் முந்தைய வாழ்க்கைக்கும், இன்றைய வாழ்க்கைக்குமிடையே நடந்த பெரும் மாற்றங்களை உணர்ந்து குமுறினாலும், நிஜம் புரிந்து தன் இலக்கை அடைவதற்கான உறுதியுடன் அடுத்தடுத்த நிகழ்வுகளை நிகழ்த்தத் தயாராகும்போது ‘அட’ போட வைக்கிறார். சித்தார்த் வழக்கம் போல இறுகிய முகத்துடன் அதிக முகபாவங்கள் இல்லாமல் தீவிரமாய் நடித்திருக்கிறார்.
இந்த சீரீஸ் மூலம் எதிர்காலத்தில் பாலும் தேனும் ஓடும் என்று சொல்லாமல் எதிர்கால அபாயங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் சாதிய, மத துவேஷங்கள் அதிகமாகி, இயற்கையும் பொய்த்து, சர்வைவல்தான் முக்கியம் என்றாகிவிடும் என்கிறது இந்த சீரிஸ். முழுக்க முழுக்க இந்துத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் நாடாகிவிடும் என்பதைக் காட்டுகிறார்கள். பொருளாதாரத்திலும் சாதியிலும் பின் தங்கியவர்கள் அரசுக்கு எதிரானவர்களாகவும், வறுமை அதிகமாகியிருப்பதாகவும் காட்டியிருப்பது, காட்சிகளூடேயே சமகால அரசியல்களைச் சீண்டிப் பார்த்திருப்பது ஆகியவை சுவாரஸ்யம்.
தீபா மெகத்தா, சங்கர் ராமன், யூடர்ன் பவன் குமார் மூவரும் ஆறு எபிசோடுகளை இயக்கியிருக்கிறார்கள். நாவலைத் திரைக்கதையாக்கும்போது இருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி, அம்மா தன் பெண்ணைத் தேடிப் போகும் எமோஷனோடு படம் பயணிக்கிறது. மொத்த சீரிஸும் ஆங்காங்கு மிகவும் மெதுவாக நகர்கிறது. எபிசோடுக்கு ஏற்றாற்போலச் சட்டென ட்விஸ்டுகளுக்குத் தயாராவதற்காகச் சடுதியில் எமோஷன் மாறுவது இயல்பாக இல்லை. தீவிரவாதச் செயல்களுக்கு ஷாலினி ஏன் உடன்பட வேண்டும் என்பதற்கான காரணம் மிக அழுத்தமாக இல்லை. இதையெல்லாம் மீறி இந்த சீசனை நிறுத்தியிருக்கும் இடம் நச். என்ன நடக்கப்போகிறது இனி வரும் சீசன்களில் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முத்தாய்ப்பு இது.
சமகால அரசியலைக் கூர்மையாக விமர்சிக்கும் இதுபோன்ற கதைகளை யோசிக்கவே தைரியம் வேண்டும். அரசியல் ரீதியாக ஒரு சித்தாந்தம் வெல்கிறது என்றால் அது தனிநபர்களின் உளவியலை எப்படி பாதிக்கும், மனிதர்களின் சிந்தனை முறையின் மீது பெரும்போக்கு அரசியல் தன் தாக்கத்தை எப்படிச் செலுத்தும் என்பதையெல்லாம் சற்று ஆழமாகவே அணுகியிருக்கிறார்கள்.
இணைய வெளி தரும் சுதந்திரத்தை உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கும் மற்றொரு காத்திரமான, படைப்பூக்கம் கொண்ட முயற்சி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.