லயோலா மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற திருநங்கை!

லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு நலீனா பிரஷீதா என்ற திருநங்கை வெற்றிபெற்றுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்த நலீனா பிரஷீதா, 2011ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது திருநங்கையாக மாறியுள்ளார். அவர் பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியே வந்து திருநங்கை சமூகத்தில் சேர்ந்துள்ளார். முதலில் மும்பை மற்றும் பெங்களூருக்குச் சென்ற இவர் இறுதியாகச் சென்னை வந்துள்ளார். தொலைதூரக் கல்வி மூலம் உயர்நிலைக் கல்வியை முடித்த இவர், பின்னர் லயோலா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். தற்போது எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், பெண்கள் போட்டியிடும் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை நலீனா பெற்றுள்ளார். இதுகுறித்து நலீனா பிரஷீதா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “லயோலா கல்லூரி என்பது எனக்கு அம்மா போன்றது. இக்கல்லூரி எனக்கு அன்பைக் கொடுத்தது மட்டுமின்றி நான் யார் என்பதை எனக்கு இன்று உணர்த்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்களும், நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவால் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது” என்றார். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள நலீனா பிரஷீதா, பெண்கள் விளையாட்டு மற்றும் நடன அணிகளுக்காக சில திட்டங்களை வகுத்துள்ளதாகவும், பெண்கள் தற்காப்புப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். “எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வர விரும்புகிறேன். ஆண்கள், பெண்கள் போல ஒரு பாலினத்தவர்தான் திருநங்கைகள் என்பதைப் பரப்ப விரும்புகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் நாட்டின் குடிமகன்களாக உள்ளனர். நான் முதலில் இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது வெட்கப்பட்டேன். என்னைக் கேலி செய்தார்கள். அவற்றையெல்லாம் தாண்டி வந்து தற்போது வெற்றிபெற்றுள்ளேன். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அடுத்து வரும் திருநங்கைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். திருநங்கைகள் மீதான பார்வை மாறும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிட்டேன்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். “500க்கும் மேற்பட்ட மாணவிகள் லயோலா கல்லூரியில் பயில்கின்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வந்தனர். இதில் எனக்கு 328 பேர் வாக்களித்தனர். என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் 97 வாக்குகளைப் பெற்றார். 231 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.