முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்!!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


கண்டி, தெல்தோட்டையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

பெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம். குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.

முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

நாங்கள் அரசாங்கத்துக்குள் இருந்தாலும், வெளியிலும் இருந்தாலும் சமூகத்தின் நன்மைக்காக எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கூட்டாக ஒருமித்து செயற்படுவோம்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான அநியாயங்களை சர்வதேச சமூகம் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் பாதுகாப்பு தரப்பினரிடமும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறோம்.

இனி அட்டகாசம் செய்யவருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பவர்களின் அட்டகாசங்களை கைட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரை வைத்திருப்பதில், இந்த அவசரகாலச் சட்டத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

மூன்றாவது மாதமாக அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் நீடிக்க விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அவசரகாலச் சட்டம் எதற்கு தேவைப்பட்டதோ, அந்த தேவை முடிந்துவிட்டது.

இனியும் இதை நீடிப்பதாக இருந்தால், எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தருவதாக அது இருக்கவேண்டும். ஆனால், அந்த நிலைப்பாட்டை அண்மைக்காலங்களில் காணவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் அசமந்தப்போக்குடன் நடந்ததாக விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக இன்னுமொரு அரசாங்கம் வந்து, இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

கடந்த அரசாங்கத்தில் நடந்த விடயங்களையும் இன்னும் மறக்கவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.

சிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். நிச்சயம் இதற்கு விடிவுகாலம் கிட்டும்.

இதற்கான தீர்வு விடயத்தில் சரியான தெளிவில்லாமல் வலிந்துபோய் அமைச்சு பதவிகளை பெறுவதால் எங்களது கௌரவம் பாதிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும்.

என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று சக அமைச்சர்கள் என்னிடம் கேட்கின்றனர். குற்றமிழைத்தவர்களை கைதுசெய்யாமல் இருப்பது மிகவும் மோசமான விடயம். சிறு கும்பல் செய்த வேலைக்காக முழு சமூகமும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களும் வீடுகளும் புனரமைக்கப்பட வேண்டும். அவற்றைச் செய்யாமல் நாங்கள் அமைச்சரவையில் இருக்கமுடியாது.

ஏனைய இடங்களில் எவ்வாறு நஷ்டயீடு கொடுத்து கட்டிமுடித்தார்களோ, அதேபோன்று இங்கும் செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் நாங்கள் கதிரைகளில் போய் உட்கார முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.