ஜெர்மனியில் கலக்கும் இந்திய இளைஞர்!

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் இருந்தது.
ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்ஃபரன்ஸை நடத்தியது.

டாய்ச்சா டெலிகாம், இ.ஆன் போன்ற ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சிஇஓ, சிஓஓ-க்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருக்க, டேட்டா அனலிடிக்ஸ் பற்றி பேச விஜய் பிரவின் மகராஜன் மேடைக்கு வந்தார். பலத்த கரவொலிகளுக்கு நடுவே டேட்டா அனலிடிக்ஸில் நிபுணத்துவராய் விளங்கும் அந்த 28 வயது இளைஞர் மேடையேறினார். எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்ற போதிலும் இவரின் பேச்சு எந்த ஒரு பிசிறும் இல்லாமல் செம்மையாக இருந்தது. கேள்வி நேரத்தில் இவரின் தெளிவான பதிலைக் கேட்டு பல சிஇஓ-க்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே போய்விட்டனர்.

கான்ஃபரன்ஸ் முடிந்தவுடன் நமக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி:

உங்கள் பூர்வீகம்?
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள தெற்கு அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்து, அப்பாவின் பணி காரணமாக தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். அப்பா மகராஜன், தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆய்வகக்கூடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், அம்மா சந்திரா, வைப்பாரில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். `வாத்தியார் பிள்ளை மக்கு' னு சொல்லுவாங்களே. ஆனால், அதை பொய்யாக்கி 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 56 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து வாங்கிய `சிறந்த மாணவர் விருது'ம்தான் என்னை எனக்கே புரிய வைத்தது. சிங்கப்பூரில் உள்ள ``நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்" பல்கலைக்கழகத்தில் `தானியங்கி இயந்திரங்கள்' பற்றி பேசி அவார்டும் வாங்கியிருக்கிறேன். ஐஐடி கான்பூரின் `தூதுவர்' என்ற பதவியும் கல்லூரி காலத்திலேயே எனக்குக் கிடைத்தது. இவை எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வேரூன்ற வைத்தது.

ஜெர்மனிக்கு வந்தது எப்படி?
மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜெர்மனி வந்தேன். படிப்பு முடிந்தவுடன் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவில் வேலை கிடைத்தது. இந்தத் துறை எனக்குப் பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின், சீமன்ஸ் நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். சேர்ந்த 9-வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால் அதிகபட்சம் 3 சதவிகிதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில் எனக்கு 8.4% கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.

ஜெர்மனி விஞ்ஞானி

அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?
டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவைதான். ஆனால், டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானை துல்லியமாக அளவிடுவதுபோல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப்பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும்போது ``உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவுதான்.

டேட்டா அனலிடிக்ஸ் கான்பஃரன்ஸில் பேச அழைப்பு வந்தது எப்படி?
ஒயிட்ஹால் மீடியா எங்கள் சீமென்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, டேட்டா அனலிடிக்ஸில் என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விஷயங்களைக் கேட்டறிந்தனர். பின், ஒரு பக்க அளவில் டேட்டா அனலிடிக்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பச்சொல்லியிருந்தனர். சில வாரங்கள் கழித்து, மூன்றாவதாக வீடியோ கான்ஃபரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விஷயங்களை விளக்கச்சொல்லி கேட்டனர். அதன் பின்னர் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!

உங்க குடும்பம் பற்றி?
கடந்த நவம்பரில் திருமணம். மனைவி இரத்தினமங்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுகலை பட்டம் பயின்றவர். இப்போது, ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டிருக்கிறார்.

எதிர்காலத் திட்டம்?
படித்துக்கொண்டிருக்கும், வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி, அவர்களும் என்போல சாதனைகள் பல பண்ண வழிமுறைகள் வகுத்துக்கொண்டிருக்கிறேன். கூடியவிரைவில் அது பற்றிய அறிவிப்பு உங்களை வந்துசேரும்.

அவர் முயற்சிகள் கைகூடி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் கூறி விடை பெற்றோம்.

செய்தி  : ஜேசு ஞானராஜ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.