எளியோரின் விடிவுக்கு விதையாய் இந்த மரணம்- மருத்துவர் ரமேஸ்!!

நிறை போதையில் இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் தன் மனைவியை இழந்த கோவை மருத்துவர் ரமேஷ்,
மனைவியின் சடலத்தோடு மக்கள் எதிர்ப்பை மீறி அந்தப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே தன் மனைவியின் உடலை அடக்கம் செய்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை ஆர்வலரும் சமூக சேவகருமான கோவை மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா வாகன விபத்தில் இறந்த சம்பவம் தமிழகம் முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். எளிய மக்களுக்கு சேவையாற்றுவதே தன் வாழ்வாக வரித்துக்கொண்ட  தவிர்க்க முடியாத ஆளுமை. ரமேஷின் மகள் சாந்தலா தேவி கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை மாலை, சாந்தலா தேவியை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கணுவாயிலிருந்து ஸ்கூட்டரில் சென்ற ரமேஷின் மனைவி ஷோபனா  வீடு திரும்பவில்லை. ஆனைகட்டியிலிருந்து சாந்தலா தேவியை அழைத்துக்கொண்டு ஜம்புகண்டி பகுதியை அடைந்தபோது, எதிர் திசையில், நிறைபோதையில் அசுர வேகத்தில் வந்த ஒரு பைக் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஷோபனா பரிதாபமாகப் பலியானார். பலத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய சாந்தலா தேவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஷயமறிந்து கணுவாயிலிருந்து சம்பவ இடத்துக்கு பதறியடித்துக்கொண்டு வந்த ரமேஷ் நிலைகுலைந்து போனார். சம்பவ இடத்தில் சடலமாகக் கிடக்கும் மனைவி;  மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மகள். விபத்துக்கு காரணம் ஜம்புகண்டியில் மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படும் டாஸ்மாக்தான் என்று தெரியவரவே, அந்தப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக்கை மூடச்சொல்லி  மனைவியின் சடலத்தோடு 4 மணிநேரம் போராடினார். அந்தப் பகுதியின் போலீஸ் இஸ்பெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உறுதியளித்த பிறகே அங்கிருந்து மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்றார்.

மறுநாள் செவ்வாய்க் கிழமை பிரேதப் பரிசோதனையெல்லாம் முடிந்த பிறகு, தீராத சோகத்திலும் திடகாத்திரமாக மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு எல்லோரது இதயத்தையும் நெறுக்கியது.

அந்தப் பகுதியில் டாஸ்மாக் வேணாம்னு அங்குள்ள மக்கள் ரொம்ப நாளா போராடிக்கிட்டு இருக்காங்க.  ஆனால், அரசாங்கத்தின் காதுக்கு அது கேக்கல. என் மனைவி உயிரைக் கொடுத்துதான் அந்த  டாஸ்மாக்கை மூடணும்னு இருந்துருக்கு. என் மனைவியின் உயிர் அந்தப் பகுதி பழங்குடி மக்களுக்காக போயிருச்சுன்னு நினைச்சுக்குறேன். என் மனைவியுடைய உடலை அந்தப் பகுதி மக்கள்கிட்டயே கொடுத்துடுறேன். அங்கேயே அவங்க வழக்கப்படி அடக்கம் பண்ணிறலாம்’ என்று ரமேஷ் சொல்ல அவரின் நண்பர்களும் மற்றும் உறவினர்களும் தங்கள் கண்ணீரால் அவரது முடிவை ஆமோதித்தார்கள். இறுதியில் நேற்று இரவு ஜம்புகண்டி பகுதியில் அந்த ஊர் மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, அவர்கள் முறைப்படி விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.