விலகவில்லை, தூக்கி எறியப்பட்டேன்: அமலா பால்!!

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து அமலா பால் விலகியதாக சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால் அப்படத்திலிருந்து தான் தூக்கி எறியப்பட்டேன் என்று கூறியுள்ளார் அமலா பால். எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். சர்வதேசப் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் மியூசிக்கல் ரொமான்ஸ் பாணியில் தயாராகிறது அமலா பால் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து அமலா பால் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அவரது கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் தற்போது நடித்துவருகிறார். அமலா பால் இன்று இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறி என்னை நீக்கியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நடித்த எந்தப் படத்திலும் இது போன்ற புகார்கள் இல்லை. தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளவும், தேவைகளை சுருக்கிக்கொள்ளவும் செய்கிறேன்”என்று தெரிவித்துள்ளார். உதாரணமாக பாஸ்கர் ஒரு ராஸ்கல், அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்டப் படங்களை குறிப்பிட்ட அவர் அந்தப் படங்களில் தான் எவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் நிலையறிந்து செயல்பட்டேன் என்று விளக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்திற்கான உடைகளை மும்பைக்கு தன் சொந்த செலவில் சென்று தங்கி, தனது பணத்திலேயே வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனமான சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஊட்டியில் தான் தங்கும் இடம் குறித்து மிகச் சிறிய கோரிக்கையை வைத்ததாக கூறியுள்ளார். ஆனால் பட்ஜெட் காரணம் காட்டி அதை மறுத்த நிறுவனம் இதற்காக படத்திலிருந்து நீக்கி அவருக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஆனால் இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் எதுவும் பேசாமல் நீக்கியுள்ளதாக அமலா பால் கூறியுள்ளதுடன் முக்கிய குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். அதாவது ஆடை படத்தின் டீசர் வெளிவந்தபின்னரே தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஆடை படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அமலா பால் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. டீசரில் அந்த காட்சி இடம்பெற்றிருந்தது. ஆணாதிக்க, தன்முனைப்பு மனநிலையில் சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருவதாக அமலாபால் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்சினிமா நல்ல திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் இத்தகைய மனநிலையில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பின்குறிப்பாக தான் விஜய்சேதுபதியின் தீவிர ரசிகை என்றும் அவருடன் நடிக்க விருப்பமுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்தப் பதிவு அவரை காயப்படுத்துவதற்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அமலா பாலின் இந்த திடீர் அறிக்கை குறித்தும், அவரை நீக்கிய பின்னணி குறித்தும் திரையுலக வட்டாரங்களில் விசாரிக்கும் போது அமலா தனது அறிக்கையில் குறிப்பிட்ட ஆடை டீசர் காரணத்தையே குறிப்பிடுகின்றனர். “அமலா பால் தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் சிந்து சமவெளி போன்ற பி கிரேடு படத்தில் நடித்தார். அதன்பின் அவர் தனது பாதையை மாற்றிக்கொண்டார். தற்போது ஆடை டீசர் மூலம் உருவாகியிருக்கும் பிம்பம் விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படக் கதாபாத்திரத்துக்கு பொருந்தாது. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிப்பதை அவர் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்” என்றும் கூறிவருகின்றனர்.

No comments

Powered by Blogger.