பப்புவா நியூ கினியின் அமைச்சராக தமிழர்!!

பசிபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவுகளில் மிகப் பெரிய தீவாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார்.


பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

மத்திய அமைச்சராக ஜூன் 7ம் திகதி பதவியேற்பதற்கு முன்புவரை, அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக சசீந்திரன் ஆறாண்டுகளாக பதவி வகித்துள்ளார்.

சிவகாசியில் அச்சு தொழிலை செய்து வந்த குடும்பத்தில் பிறந்த சசீந்திரன், 10ம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று , அதன்பின்னர் ,தனக்கு கிடைத்த உதவித் தொகையை பயன்படுத்தி ஆங்கில வழியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.

இந்நிலையில் தான் தமிழ்வழிக் கல்வியில் காட்டிய திறனை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியாததால், மேல்நிலைக் கல்வியில் சிறந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை என்றும், தங்கள்து குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத விவசாயத்தில், பெரியகுளத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மலேசியாவுக்கு சென்று இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி ஒன்றில் மேலாளராக பணியாற்றி போது , பப்புவா நியூ கினி நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்ததையடுத்து, 1999இல் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்திற்கு சென்றதாகவும் சசீந்திரன் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 82.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பப்புவா நியூ கினியில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது.

ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமில்லாத இந்த நாட்டில், ஆங்கிலமும், ஜெர்மன் மொழியும் கலந்த பிஜின் எனும் மொழியே இணைப்பு மொழியாக உள்ளதாகவும், அதை மூன்றே மாதத்தில் தான் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்

இந்நிலையில் தனக்கு மொழியைவிட மிகவும் கடினமானதாக இருந்தது உணவுதான். ஏனெனில், கிறித்தவ நாடான பப்புவா நியூ கினியில் அசைவம்தான் பிரதான உணவு. ஆனால் நானோ சைவத்தை கடைபிடிப்பவன்.

சிரமப்பட்டு, காலத்தை கடத்திக்கொண்டிருந்த நிலையில், சசீந்திரன் வேலை செய்த கடையின் உரிமையாளர், கடையை விற்றுவிட்டு தனது சொந்த ஊரான சிங்கப்பூருக்கு செல்வதாக கூறியுள்ளார்.

தீவிர யோசனைகளுக்கு பிறகு, 2000ம் ஆண்டு நானே அந்த கடையை குத்தகைக்கு ஏற்று நடத்துவதற்கு முடிவு செய்து 2007ம் ஆண்டு பப்புவா நியூ கினியின் குடியுரிமை பெறுவதற்குள் அம்மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்பொருள் அங்காடியை விரிவாக்கம் செய்துள்ளார் சசீந்திரன் .

அதன்பின்னர் 2011ம் ஆண்டு வரை தனது தொழிலை மென்மேலும் பெருக்குவதில் கவனம் செலுத்தி, ஊரக மற்றும் போக்குவரத்து வசதியற்ற காட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது இடத்துக்கே கொண்டுசென்று விநியோகம் செய்தது அப்பகுதி மக்களிடையே நற்பெயரைதனக்கு ஏற்படுத்தி தந்ததாக சசீந்திரன் கூறுகிறார்.

இந்நிலையில் சசீந்திரன் உள்ளூர் மக்கள் பேசும் மொழி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைப்போக்கையும் நான் நன்றாக புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்ற ஆரம்பித்துள்ளார்.

2007ம் ஆண்டே அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும், அதைவிட முக்கியமான ஒன்றான மக்களின் ஆதரவை 2010ம் ஆண்டு பெற்றதாகவும், அந்தவகையில் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூர் பழங்குடி மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடத்தியதாகவும் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட பப்புவா நியூ கினி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றதாக சசீந்திரன் கூறியுள்ளார்.

இதேவேளை பப்புவா நியூ கினியில் மாகாணத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிப்பதில்லை. தங்களது ஆளுநரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.

அந்த வகையில், 2012ம் ஆண்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்ற சசீந்திரன், அடுத்ததாக கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆளுநரானார்.

எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களும், நீண்ட கடல் பரப்பு, வணிகமயக்கப்படாத சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி பாரம்பரிய விவசாயத்தையும் 850க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்ட பப்புவா நியூ கினி நாட்டில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக ஜேம்ஸ் மாராப்பே தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு அவர் பிரதமராக பதவியேற்ற நிலையில், மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு சசீந்திரனுக்கு கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட சசீந்திரன் கடந்த ஏழாம் திகதி பப்புவா நியூ கினியின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதாக மிகப்பெருமையுடன் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.