முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பங்கீடு தொடர்பான விசேட கூட்டம்!!

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பங்கீடு  தொடர்பான விசேட கூட்டம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் மாங்குளத்தில் அமைந்துள்ள  வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைமையகத்தில் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.


இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில்  வடமாகாணத்தின் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், நீர்ப்பாசன பொறியியலாளர்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்களுக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் இதன்போது கலந்துரையாடப்பட்டு சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், தீர்மானங்களெதுவும் மேற்கொள்ளாது வெறுமனே கலந்துரையாடல்களுடன் முடிவுபெறும் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் பார்க்க இவ்வாறு மக்களுக்கு பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்கே விரும்புவதாக குறிப்பிட்டார். 

இதேவேளை பறங்கியாற்றிலிருந்து வீணாக வெளியேறும் நீரினை தடுத்து வவுனிக்குளத்திற்கு திருப்புவதன் ஊடாக மாந்தை கிழக்கு மக்களின் குடிநீர்த் தேவையினை உடனடியாக பூர்த்திசெய்ய முடியுமென்றும் அவ்வாறு வீணாக வெளியேறும் நீரினை பறங்கியாற்றின் சிறாட்டிக்குளம் பகுதியில் தற்காலிக அணையொன்றினை உருவாக்குவதன் மூலம் சேமித்து  மக்களின் குடிநீர் தேவையினைபூர்த்தி செய்வதற்கு உடனடியாக நான்கு இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். உடனடியாக இது தொடர்பில் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடிய கௌரவ ஆளுநர், பொறியியலாளர் குழுவொன்றை குறித்த பகுதிக்கு அனுப்பியதுடன் அவர்களின் முன்மொழிவுடன் தற்காலிக அணையினை கட்டுவதற்கு உடனடியாக தேவையான நான்கு இலட்சம் ரூபாவினை நேற்று முன்தினம் (25) மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் அவர்களிடம் வழங்கி வைத்தார்.
Powered by Blogger.