இளையராஜா போட்ட நிபந்தனை என்ன?

இளையராஜா முன்பதிவு படத்துக்கு இசையமைக்க இயக்குநருக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு’. இந்தப் படத்தை ஜி.எம்.துரைபாண்டியன் இயக்குகிறார். இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் . “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை, பாலினக் கவர்ச்சி. பால்யப் பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை, காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனின் கதைதான் முன்பதிவு. இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது. கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது. இளையராஜா இசையமைக்கச் சம்மதித்ததும் படத்தின்மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது” என்கிறார் இயக்குநர் துரைபாண்டியன். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் அதிகம் பங்கேற்கிறார்கள், விரைவில் படப்பிடிப்புத் தொடங்க உள்ளது.

No comments

Powered by Blogger.