நான்கு வழிச்சாலைகளும் எட்டு வழிச்சாலைகளும் எதற்கு?

நாட்டின் வளர்ச்சிக்கு எனப்போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலைகள் நாடெங்கிலும் தினந்தோறும் பல நூறு உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டே இருக்கிறது.எங்கெங்கோ ஆயிரம் குடும்பங்கள் கதறித்துடித்த வண்ணம் இருக்கின்றன. விபத்தில் பலி என ஆயிரம் செய்திகளோடு செய்திகளாக கதறல்கள் கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இலட்சக்கணக்கான கிராமங்களை இரு கூறுகளாகத் துண்டாடி உருவாக்கப்பட்ட நான்கு வழி விரைவு வணிகப்பாதை என்பது எளிய மக்களின் தினசரிப் போக்குவரத்து வழியை விட முற்றிலும் மாறுபட்டது.  அதிவிரைவாக வரும் பல நூறு வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியதவர்களாகவே பெரும்பாலும் மக்கள் இருக்கிறார்கள்.

அரசின் மதுவை அருந்திவிட்டு சாலைவிதிகளை மீறி தாங்களும் இறந்து மற்றவர்களையும் கொன்றுவிடுகிறார்கள்.

முதல் இரண்டு சாலைகளில் ஒரு பக்கமாக வாகனம் வருவதையும் அடுத்த இருவழிப்பாதையில் இன்னொரு புறமாக இரு வழிகளில் வாகனங்கள் வருவதையும் கவனிக்கும் வழக்கமும் பழக்கமும் கைவரவில்லை.

நேராகவும், குறுக்காகவும், தொடராகவும் துண்டு துண்டாகவும் ஏராளமான வெள்ளைக் கோடுகள், ஒளி விளக்குகள், சமிக்ஞை அறிவிப்புகள், வளைவுகள் என எளிய மக்களை திக்கு முக்காடவைத்து வருகின்றன இச்சாலைகள்.

சொந்தக் கிராமமே இரண்டுபட்டிருக்க எதிர்ப்புறம் இருக்கும் தாய் வீட்டிற்கோ மகள் வீட்டிற்கோ அன்றாடம் வழக்கம் போல் போய்வரமுடியாமல் உயிரைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றமுடியாத இந்தத் தேசத்தில் நான்கு வழிச்சாலைகளும் எட்டு வழிச்சாலைகளும் எதற்கு?

( நேற்று முன் தினம் 4 குழந்தைகளின் தந்தையும் எனது துணைவியாரின் சகோதரரும் மதுரை திருவாதவூர் ஈழத்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்தவருமான சிவகுமார் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலை ஒன்றில் கனரக வாகனத்தால் கொல்லப்பட்டார்.)

No comments

Powered by Blogger.