போதைப் பொருளும் மரண தண்டனையும்.!!📋

கல்முனை விவகாரம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் தொடர்ச்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கடந்த சில காலமாகவே இலங்கையில் பொதுவாக பேசுபொருளாக இருக்கும் விடயங்களில் போதைப் பொருள் தாக்கங்கள் மற்றும் மரண தண்டனையை அமுல்படுத்தல் ஆகிய விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.

அதேவேளை, இந்த இரண்டு விடயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாகவும் இருக்கின்றன.

உண்மையில் கடந்த பல வருடங்களாகவே உலக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் இடைத்தரிப்பு நாடாக இலங்கை விளங்கி வருகின்றது. தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து போதைப்பொருட்களை மேற்குலகுக்கு கடத்தும் வழித்தடத்தில் இலங்கை ஒரு ஒரு இடைத்தரிப்பு நாடு. இன்று இந்த நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இவற்றின் மிகவும் எளிய வடிவமாக உள்ளூரில் அதிகம் பேசப்படும் கேரள கஞ்சாவைக்கூடக் கூறலாம். ஆனால், அதனைவிட மிகவும் திறன் உள்ள போதைப்பொருட்கள் பெருமளவில் இலங்கையின் ஊடாகக் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு.

என்னதான் அவற்றை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கடத்துவதாகக் கூறினாலும் இலங்கை அரசாங்க பணியாளர் மட்ட ஆதரவு இல்லாமல் அவற்றை இலங்கையின் ஊடாகக் கடத்துவது என்பது கடினம். இந்தப் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. போதை மருந்துப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து இலங்கை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இங்கு, அங்கு என்று சொல்ல முடியாதபடி நாட்டில் எல்லாப் பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் இதனை நன்கு அறிவர். இவற்றை தவிர்ப்பதற்கான பல திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், போதிய பலன் கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலைமை இங்கு மாத்திரமல்ல, மிகவும் வளர்ந்த மேற்கு நாடுகள் மற்றும் செல்வந்த மத்திய கிழக்கு நாடுகளிலும் இதே நிலைமைதான்.

இவை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் கிடையாது. அந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி அதிக ஈடுபாடும் காண்பிக்கிறார்.

அண்மையில் பிலிப்பைன்ஸ்ஸுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அந்த நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஈவு இரக்கமின்றி கொல்லும் திட்டம் குறித்து கவரப்பட்டு கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்த விமர்சனங்களை அடுத்து அவர் தனது கருத்தை பின்னர் வலியுறுத்தவில்லை.

ஆனால், ஒரு விடயத்தில் அவர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். அதாவது, போதை மருந்துக் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்றும் அதற்காக 40 வருடங்களுக்கு அதிகமான காலமாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை மீள அமுல்படுத்துவது என்பதிலும் அவர் தீவிரமாக இருக்கிறார்.

அதன் அடுத்த கட்டமாக 4 பேருக்கு மரண தண்டனையை விதிப்பதற்கான அனுமதியையும் அவர் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது.

எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை வழங்குவது சரியா, இல்லையா என்பது இன்றைய நிலையில் உலக மட்டத்தில் எங்கும் நடக்கும் ஒரு விவாதம். ஒரு குற்றத்துக்கான தண்டனை என்பது மரணமாக இருக்க முடியாது என்பதும் அதற்கு மாறாக மிகவும் கொடிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரணமே தண்டனை என்றும் வாதிடும் இரு தரப்பு இருக்கத்தான் செய்கின்றன.

பாலியல் துஸ்பிரயோகம், கொலை, போதை மருந்துக் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனையே தீர்வு என்ற வாதம் ஒரு புறம் இருக்கிறது. பல முஸ்லிம் நாடுகளில் இது அமுல்படுத்தப்படுகின்றது.

ஆனால், பல மேற்கத்தைய நாடுகள் “குற்றங்களுக்கான தண்டனை குற்றவாளி திருந்துவதற்கு ஊக்குவிக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமேயொழிய அவரது உயிரை பறிப்பதாக இருக்கக்கூடாது” என்று வாதிடுகின்றன. கைதிக்கு கொடுக்கப்படும் மரண தண்டனை, அவர் குற்றமற்றவர் என்று எந்தத்தருணத்திலாவது பின்னர் நிரூபணமானால், திருத்த முடியாத தண்டனையாகிவிடும், போன உயிர் திரும்ப வராது என்ற வாதமும் இங்கு பொருந்துகிறது.

இலங்கையும் அண்மைக்காலம் வரை வழங்கப்பட்ட மரண தண்டனைகளைக் கூட நிறைவேற்றாத ஒரு நாடாகவே இருந்துவந்தது. நாற்பது வருடங்களுக்கும் அதிகமாக இந்த நடைமுறையை இலங்கை பின்பற்றி வந்தது.

ஆனால், அதில் இருந்து மாறுவது என்று ஜனாதிபதி இப்போது முடிவெடுத்துள்ளார். பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் நாடுகளும் பிரபலங்களும் கூட இந்த விடயத்தில் இலங்கையை விமர்சித்துள்ளனர். இந்த முடிவு மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஐநாவிந் பொதுச்சபையில்கூட 6 மாதங்களுக்கு முன்னதாக மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராகவே இலங்கை வாக்களித்திருந்தது. குறுகிய காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் மேற்கத்தை நாடுகளை கவலைகொள்ளச் செய்துள்ளன.

எம்மைப் பொறுத்தவரை எமக்கு கிடைத்த ஒரு வாழ்வு முழுமையாக வாழப்பட வேண்டியது. தண்டனைகள் குற்றவாளியை திருத்தவே, ஒரு உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமை கிடையாது என்பதுடன் உடன்படுகிறோம். உயிர் வாழ்வது என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. மற்றவரின் உயிரைப் பறித்த ஒருவருக்கும் அந்த உரிமை உள்ளது. போதை மருந்து கடத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க வேறு செயற்திறன் மிக்க வழிகளைக் காண்போம். திருத்த முடியாத விளைவுகளைத் தரும் மரண தண்டனையை எதிர்ப்போம்.

அன்புடன்
சீவகன் பூபாலரட்ணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.