தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்!!📋

சர்வதேச சமுதாயம் என அழைக்கப்படும் நாடுகள் வகித்த பாத்திரம் .

இலங்கை, இந்தியப் பெருங்கடலில் மூலயுத்தி ரீதியான மிகவும் முக்கியத்துவம் உ்ள்ள இடத்தில் அமைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலைச் சுற்றிலும் நாற்பத்தி ஏழு நாடுகளும் எண்ணற்ற தீவுகளும் உள்ளன.

இந்தப் பகுதியில் கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பிரதானமாகப் போட்டியிட்டு வருகின்றன.

டிகோகார்ஷியாவில் அமெரிக்கா கடற்படை மற்றும் விமானப்படைத் தளத்தை கொண்டுள்ளது. இந்தியா, இந்தியப் பெருங்கடலைச் சுற்றிலும் தனக்குச் சொந்தமானப் பகுதியைக் கொண்டிருப்பதோடு, மாலத்தீவின் மீது கணிசமான செல்வாக்கையும் கொண்டுள்ளது.

சீனம் மியான்மருக்கு அருகில் கோகோ தீவுகளில் தனது தளத்தைக் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல், உலகின் பாதிக்கும் மேற்பட்ட கப்பல் சரக்குகளை எடுத்துச் செல்லும் கொள்கலன்களையும், சரக்குகளில் மூன்றில் ஒரு பகுதியையும் எண்ணெயில் 3ல் இரண்டு பகுதியையும் கொண்டு செல்வதற்கான முக்கியமான நீர்வழித் தடமாகும்.

இந்த நீர்வழித்தடத்தின் மூலம்தான் பெருமளவிலான பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அமெரிக்கா பத்து ஆண்டுகளுக்கான வாங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர சேவைக்குமான ஒரு ஒப்பந்தம் ஒன்றை 2007ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாளன்று கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தப்படி மற்றவற்றோடு பொருட்களை கொண்டு செல்வதற்கும் சேமிப்பதற்கும் மற்றும் எண்ணெயை மறுபடியும் நிரப்பிக் கொள்வதற்குமான வசதிகளைப் பெறமுடியும். அமெரிக்கா ஏற்கனவே வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் பொறியமைப்பை திரிகோணமலையில் நிறுவியுள்ளது.

இவற்றைக் கண்காணிப்புக்குப் பயன்படுத்த முடியும்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு உறுதிமொழியை இந்தியா பெற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ்வரும் பகுதியில் இதை புலப்படுத்துகிறது.

இலங்கையில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த வசதிகளை பொதுமக்களுக்கு ஒலிபரப்ப மட்டுமே பயன்படுத்தும் வகையிலும், எந்த ஒரு நாடும் ராணுவ மற்றும் புலனாய்வு நோக்கங்களுக்காக இவற்றைப் பயன்படுத்தாத வகையிலும் இலங்கை அந்நிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்”.  

மேலும் “இந்தியாவின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு நாடும் திரிகோணமலை அல்லது வேறு எந்த துறைமுகத்தையும் ராணுவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தக் கூடாது”

இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட நேரமானது, இந்தியா, சோவியத் பக்கம் இருந்த காலமும் அமெரிக்காவிற்கும் சோவியத்திற்கும் இடையிலான மோதுதல் உச்சத்தில் இருந்த காலமும் ஆகும்.

அதற்குப் பின்னர் சர்வதேச சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.

இன்றைக்கு இப்பகுதியில் இந்தியா அமெரிக்காவின் முதன்மையான கைக்கூலியாகச்  செயல்பட்டு வருகிறது.

1993லிருந்து அமெரிக்காவிற்கு பின்னால், சீனம் மொத்த எண்ணெய் இறக்குமதியில் உலகத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.

2000க்கும் 2004க்கும் இடையில் உலகின் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்த் தேவையின் வளர்ச்சியில் 40% அளவிற்கு சீனா காரணமாக அமைகிறது.

சீனத்தின் பொருளாதார வளர்ச்சியை தொடர்வதற்கு எரிசக்தி மூலாதாரங்களை அடையப்பெறுவது மிகவும் முக்கியமான அம்சம் ஆகும்.

2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின்னர் நோரிங்கோ ஆயுதக்கிடங்கு அமைந்துள்ள பகுதிக்கு அருகிலான காலேயை மறுகட்டுமானம் செய்வதற்காக மேலும் 4 மில்லியன் டாலர் “உதவியை“ சீனம் வழங்கியது.

2007ஆம் ஆண்டு இந்தக் கிடங்கு மூடப்பட்டப்பின் இன்னும் அதிகமான மேம்பட்ட ஆயுதங்களை மலிவான விலையில் பாலி டெக்னாலஜிஸ் 36.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

சீனத்தின் உளவறியும் அமைப்ாபன எம்.எஸ்.எஸ். என்ற அமைப்புடன் நெருங்கிய சீனத்தின் ஹியூவேய்யில் செய்தித் தொடர்புக்கான நாடு தழுவிய உட்கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்காக 150 மில்லியன் டாலர் ஒப்பந்தம் சீனாவிற்கு வழங்கப்பட்டது.

இலங்கைத் தீவினது கிழக்கு கடற்கரையில் உள்ள ஹம்பன் தோட்டாவில் ஒரு துறைமுகத் திட்டத்தை கட்டியமைப்பதற்காக இலங்கையுடன் சில ஒப்பந்தங்களை செய்து கொண்டது.

இதன் மூலம் தனது எண்ணெயை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.

நான்காம் ஈழப் போர் முடிவடைந்த பின்னர் நுவரச் சோலை நிலக்கரி எரிசக்தித் திட்டத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் சீனம் கையெழுத்திட்டது.

சீனக் குழுமங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்துக் கொள்வதற்காக 33 ஆண்டுகளுக்கான ஒரு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

ஹியூச்சென் இன்வெஸ்மெண்ட்ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் மிரிகாமா மண்டலத்தில் 28 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. முதன்முறையாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் – அதுவும் கொழும்புக்கு மிக அருகாமையில் ஒரு அந்நிய நாட்டிற்காகத் தரப்பட்டுள்ளது.

சீனம் பெருமளவில் இலங்கைக்குள் நுழைவதானது அமெரிக்க – இந்தியக் கூட்டுக்கு பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

தங்களின் மூலயுக்தி ரீதியான பூகோள - அரசியல் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய பிரச்சனைகளை அணுகிய மிக முக்கியமான நாடுகளே இவைகளாகும்.

இலங்கை ராணுவம் போரை முடிவுக்கு கொண்டுவர இருந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம், “அப்பாவி மக்களை” கொள்வது குறித்தும், “மானுட நெருக்கடி” குறித்தும் ஓலக்குரல் எழுப்பியது.

2008ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இன ஒழிப்பின் போது 50,000 குடிமக்கள் கொல்லப்பட்டபோது போரை முடிவுக்கு கொண்டுவர எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.

மனித உரிமை மீறல் பற்றி அது ஊளையிட்டதும், அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட “அவலம்” குறித்து ஊளையிட்டதும், தனது நலன்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதற்கு, அதாவது சீனத்தை விலக்கி வைப்பதற்கு மூடி மறைக்கப்பட்ட அச்சுறுத்தலே ஆகும்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு காலத்தில் ஆலோசகராகப் பணியாற்றிய (தற்போது உறவை துண்டித்துக் கொண்டவர்) அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மீது வழக்குத் தொடுக்க கோப்புகளைத் தயாரித்து வருகிறார்.

வியப்பூட்டக்கூடிய வகையில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கையின் ராணுவச் செயலாளருமான கோத்தபைய ராஜபக்சேயும், முதன்மை ராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.

அமெரிக்கா இலங்கையில் சீனத்துடனான போட்டியில், இலங்கை அரசு மீது நிர்பந்தம் செலுத்த இதை எந்த நேரத்திலும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முடியும்.

சீனம் புதிய நாஜிகளுக்கு தொழிறய்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களையும், உதவிகளையும் வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான குடிமக்களைக் கொன்றதற்காக இலங்கை அரசைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதைக் கூட தடுத்து நிறுத்தியது.

இந்தியாவும் கூட இத்தீர்மானத்தை எதிர்ப்பதில் இதே போன்ற பாத்திரத்தை வகித்ததோடு மட்டுமின்றி, இன்னும் சில நாடுகளையும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்காக அவற்றில் ஆதரவைத் திரட்டியது.

தாக்குதலுக்கு ஆட்படுத்த கூடாத பகுதிகளில் (NFZ) உள்ள குடிமக்களின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக ஐ.நா. சபையால் அனுப்பப்பட்ட பார்வையாளரான விஜய் நம்பியார் இலங்கை அரசாங்கத்திற்கு நற்சான்றிதழை வழங்கினார்.

அவரது சகோதரரான சதீஷ் நம்பியார் என்பவர்தான் இலங்கை அரசின் பாதுகாப்புத் தொடர்புள்ள விஷயங்களுக்கான ஆலோசகர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமுள்ளதே ஆகும்.

ஒரு சகோதரர் தேசிய விடுதலைப் போரை ஈவிரக்கமில்லாமல் எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கு ஆலோசனை வழங்குகிறார்.

அதே நேரத்தில் கடல் கடந்து வேறொரு நாட்டில் வாழும் இன்னொரு சகோதரர் மனித உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்.

இனப்படுகொலைக்குப் பின்னர் அங்குள்ள குடி மக்களின் அவலம் குறித்து கண்டறிய இலங்கைக்குச் சென்ற ஐ.நா. சபையின் செயலாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கையின் ராணுவ பாசிஸ்டுகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததையும், பிற போர்க் குற்றங்களையும் உண்மையிலேயே அவர் மூடி மறைத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் என்ற “பயங்கரவாதிகள்” மீதான இலங்கை அரசின் வெற்றியை ஐ.நா. சபை வாழ்த்தி வரவேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக தமிழர்கள் உலகம் முழுவதும் இக்கொலைகளை கண்டித்த நேரத்தில், இந்த இன ஒழிப்புப் போரை முடிவுக்கு கொண்டுவர கோரிய நேரத்தில் ஐ.நா. சபை இனப்படுகொலைகளை சட்டப்பூர்வமாக ஆக்கியுள்ளது.

ஈழத்தைச் சார்ந்த ஒருவர் உட்பட 14 தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன் தங்களைத் தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட பின்னரும் கூட இவர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் இந்த கண்டனங்களுக்கும் கருத்துக்களுக்கும் கொஞ்சமும் மதிப்பளிக்காத இந்தப் பிற்போக்காளர்கள் அப்பாவி மக்கள் மீதான கொடூரமான கொலைகளை நடத்துவதில் ஒன்றிணைந்து நிற்கின்றார்கள்.

பலதலைமுறைக் காலமாக திட்டமிட்ட வகையிலான இன சுத்திகரிப்புப் படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழ மக்கள் நீதியான முறையில் தனித்தாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நடத்தும் போரை நசுக்குவதில், நாகரீக சமுதாயத்திற்கே உரிய அனைத்து சனநாயக நியதிகளையும், கீழ்மைப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றன.

இந்த பிற்போக்காளர்களால் இதேபோன்ற படுகொலை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும், தற்போது பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியிலும் நடத்தியுள்ளனர் - நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலை பாதகர்கள் தங்களின் முதன்மையான நலன்களுக்கு ஏவல் புரியும் வகையில் கொடுங்குற்றங்களைச் செய்வதில் எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதற்கு இவைகளே சாட்சியங்கள் ஆகும்.

வித்தியாசங்கள் பார்வையில் தெரியும் போது கூட உண்மையில் தங்களின் ஏகாதிபத்திய விரிவாதிக்க நலன்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பிராந்தியத்தில் மூலயுத்தி ரீதியான மேலாதிக்கத்தை பெறுவதே அவர்கள் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

#விடுதலைப்_புலிகளின்_தோல்விகளும் #படிப்பினைகளும்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய விடுதலைப் போரை வெற்றிகரமாக நடத்தி வந்த விடுதலைப் புலிகள், நான்காம் ஈழப் போரில் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய தளங்களை இழக்க நேரிட்டதோடு, அவர்களின் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் கொல்லப்பட்டனர் – காயப்படுத்தப்பட்டனர் – கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீண்டும் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு தனித் தாயகத்திற்கான போராட்டத்தை தொடர்வதற்கு கணிசமான காலம் தேவைப்படும். விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட போரானது, சுரண்டலுக்கும் – அநீதிக்கும் – ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போரிடுவோர்க்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும்.

விடுதலைப்புலிகளின் தோல்வி, தமிழீழ மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆயுதப் பேராட்டங்களை நடத்தும் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

இத்தகைய சக்திவாய்ந்த ஒரு ராணுவப் படை தோல்வி அடைந்தது இயற்கையாகவே இப்போராட்டங்களுக்கு ஆதரவளித்தோர்க்கும், அனுதாபம் காட்டியோர்க்கும் ஓரளவிற்கு சோர்வையூட்டும்.

எனவே தோல்விக்கான காரணங்களைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதும் உலகம் முழுவதிலும் உள்ள தேசிய இன இயக்கங்களுக்கும், இந்தியாவிலும் தெற்காசியாவிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்தி வருபவர்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

முக்கியமான அம்சங்கள்

1. கடந்த 30 ஆண்டுகளாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் போர்க்குணமுள்ள அமைப்பே விடுதலைப் புலிகள் அமைப்பாகும்.

இந்தக் காலம் முழுவதிலும் இவ்வியக்கம் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.

தற்போது தனது எல்லாத் தளங்களையும் அது இழந்துவிட்டது. ஆனால் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் கூட தனித்தமிழ் ஈழம் என்ற தனது இலட்சியத்தை அது ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

இது மட்டுமின்றி, அதன் கருத்தியலும் வர்க்க அடிப்படையும் முதலாளித்துவ தன்மை கொண்டாகும்.

இதனால் தமிழீழம் என்று போற்றி உயர்த்திப்பிடித்த இலட்சியத்தினுடைய நண்பர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை வேறுபடுத்தி அடையாளம் காணமுடியவில்லை.

தனது சொந்த மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள் தமிழ் ஈழத்தின் பகுதியைச் சேர்ந்தவர்களான வடகிழக்கில் வாழும் இஸ்லாமியர்கள், இலங்கையில் மத்தியப் பகுதியில் வாழும் தோட்டத் தொழிலில் பணியாற்றும் தமிழர்கள், சிங்கள மக்கள், தமிழீழம் என்ற இலட்சியத்திற்கு எல்லாவிதமான ஆதரவும் அளித்த இந்தியாவில் உள்ள தமிழர்கள், இந்திய அரசு மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் ஆகிய பல்வகைப்பட்ட சக்திகளைப் பற்றிய விடுதலைப்புலிகளின் அணுகுமுறை முதலாளியக் கண்ணோட்டத்தைக் கொண்டதாக இருந்தது.

புத்தமத சிங்களப் பேரினவாதிகளையும், சிங்கள உழைக்கும் மக்களையும் கூட இலக்காக்கி கையாண்டபோது ஆளும் வர்க்கங்களுக்கும், ஒடுக்கப்படும் மக்கள் திரளினருக்கும் இடையிலான வர்க்க வித்தியாசங்களை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஏற்கனவே இனவெறியில் கிளைத்தெழுந்துவந்த சிங்கள ஆளும் வர்க்கங்களுக்கு , சிங்கள தேசத்தைப் “பாதுகாப்பது” என்ற போர்வையில் தமிழர்கள் மீது எல்லாவிதமான தமிழர் விரோத கலவரங்களைத் தூண்டிவிடவும், தங்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பவும் ஏராளமான வாய்ப்புகளை அளித்தது.

தனித்தாயகத்திற்கான அவர்களது போராட்டத்தில் சிங்கள மக்களின் அனுதாபத்தை இனவெறி உணர்வுகள் மேலோங்கி இருந்த காரணத்தால் வென்றெடுக்க முடியாவிட்டாலும் கூட, அப்பாவி மக்களைக் கொன்றதை தவிர்த்திருக்கலாம். 

மேலும் இலங்கை  சமசமஜாக்கட்சி (L.S.S.P.)  போன்ற கட்சிகள் பிரிந்து போகும் உள்ளிட்ட ஈழமக்களின் உரிமையான சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்திருந்த நிலையில், அது எவ்வளவுதான் பலவீனமாய் இருப்பினும் கூட அதனுடன் ஐக்கியப் பட்டு இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக  போராடுவதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால், செயல்யுத்தியை வகுக்கும்போது, விடுதலைப் புலிகள் கொண்டிருந்த முதலாளிய தேசியவாத கண்ணோட்டத்தின் விளைவாய் இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சொந்தமான மக்களுடனான அதனுடைய உறவுகளிலும் கூட அவர்கள், வர்க்க வித்தியாசங்களைக் கணக்கில் கொள்ளவில்லை. மிகத் துல்லியமாக கூற வேண்மாயின் உழைக்கும் மக்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போதெல்லாம், முதலாளிகளை ஆதரிக்கும் நிலையை அவர்கள் மேற்கொண்டனர்.

அது போன்றே தமிழகத்தின் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெறுவதைவிட, தமிழகத்தில் உள்ள முதலாளிகள் மற்றும் அவர்களின் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தங்கள் கவனத்தைக் குவித்தனர்.

தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகிய பரந்துபட்ட மக்கள் தமிழ்தேசிய உணர்வின் காரணமாக தாமாக முன்வந்து ஆதரவைத் தந்ததோடு, தமிழர்களுக்கான தனித்தாயகம் என்ற நியாயமான லட்சியத்தை உயர்த்திப் பிடித்தனர்.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட  ஈழப் போராட்டத்திற்கு தமிழக மக்களும், புரட்சியாளர்களும் பிற சனநாயக சக்திகளும் அச்சமின்றி உறுதியான ஆதவைத் தந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகள், இந்தியாவில் உள்ள மாவோவிய அமைப்புகளுடன் எவ்வித உறவையும் வைத்துக் கொள்ள கூடாது என தங்களது முன்னணி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

சர்வதேச மட்டத்திலும் கூட கதை இதுவேதான். உலகம் முழுவதிலும் சிதறிக்கிடக்கும் தமிழர்களிடம் பலமான வலைப்பின்னலை விடுதலைப் புலிகள் கட்டியமைத்திருந்தனர்.

ஆனால் போராடும் மக்களுடனோ, அமைப்புகளுடனோ அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களிடம் நெருக்கமான உறவுகளை கட்டி அமைத்துக் கொள்ள தீவிரமாக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கு மாறாக ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அல்லது அரசாங்கத்தில் உள்ள செல்வாக்குள்ள நபர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெறுவதில் கவனத்தைச் செலுத்தினர்.

இது வெறும் தேசியத் தனிமைவாத போக்கு மட்டுமின்றி, மக்களைவிட முதலாளிகளுக்கு அதிக அழுத்தத்தைத் தரும் வர்க்கக் கண்ணோட்டமே ஆகும்.

கருத்தியல் ரீதியல் மார்க்ஸிய – லெனினிய – மாவோவியம் தனது நலனுக்கு எதிரானது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாகவே இருந்தனர்.

முன்னர் “சோஷலிச தமிழீழம்” என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தனர்.

ஆனால், மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே இம் முழக்கம் தனது வர்க்க நலனுக்கு எதிரானது என்பதால் அதனை திரும்பப் பெற்றனர்.

2. விடுதலைப் புலிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய உணர்வுபூர்வமான செயல்வீரர்களைக் கொண்ட ஒரு கெரில்லாப் படையாக தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கியது.

1983ல் தமிழர் விரோதக் கலவரம் பெரிய அளவு நடத்தப்பட்ட கருப்பு ஜூலைக் காலத்தின் போது, அதன் வலிமை வெறும் 30 பேர்களாக மட்டுமே இருந்தது.

ஆனால், 4ஆம் ஈழப்போர் தொடங்கியபோது அதன் வலிமை 30 ஆயிரத்திற்கும் 40 ஆயிரத்திற்கும் இடையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. கடைசிக்கட்ட போரின் போது 22 ஆயிரம் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கொல்லப்பட்டதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், கைது செய்யப்பட்டதாகவும், சரணடைந்ததாகவும் இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற போராடும் எந்த ஒரு அமைப்பும் எதிரிகளிடமிருந்து நிலப்பரப்புகளை கைப்பற்றி அங்கு, அதன் அல்லது மக்களின் ஆட்சியை நிறுவ வேண்டும்.

இதன் மூலம் போரானது கெரில்லாப் போர் என்ற நிலையிலிலிருந்து நிலையான யுத்தம் என்ற நிலைக்கு மாற்றம் அடையும். அதேபோல ராணுவமும், கெரில்லாப் படையிலிருந்து முறையான ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவமாக மாற்றமடையும்.

2006 ஜூலையில் நான்காம் ஈழப்போர் துவங்குவதற்கு முன்னால் இலங்கையில் விடுதலைப் புலிகள் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் 16,000 ச.கி.மீ. நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தனர்.

அங்கு தங்களுக்கெ சொந்தமான குடிமை மற்றும் ராணுவ நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.

இதிலிருந்து ஏறத்தாழ மூன்றாண்டு காலத்திற்குள் படிப்படியாக நிலப்பரப்பின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கினர்.

ஓராண்டுக்கு பின்னர் 2007 ஜூலையில் தோப்பிகாலாவில் அடைந்த தோல்விக்குப் பின்னர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திரிகோணமலையில் தனது முழுக்கட்டுப்பாட்டையும் இழந்தனர்.

உடனடியாக இலங்கை அரசு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி தனது கைக்கூலியும், துரோகியுமான கருணாவின் கட்சியை மாநில ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியது.

இலங்கையின் கிழக்கு மாவட்டத்தைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை ராணுவம் வடக்கு மாவட்டத்தில் தனது தாக்குதலைக் குவிமையப்படுத்தியது. 2007 செப்டம்பரிலிருந்து விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பை ஒன்றன்பின் ஒன்றாக இலங்கை ராணுவத்திடம் இழக்கத் தொடங்கினர்.

இந்த காலகட்டம் முழுவதிலும் நிலப்பரப்புகளை இழந்தபோதிலும் நிலையான போரையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தினர்.

இதனால் மேலும் பலவீனமடைந்து எதிரியின் தாக்குதலுக்கான இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதற்குப் பின்னரும் கூட நிலையான போர் என்ற வழிமுறையிலிருந்து மீண்டும் கெரில்லாப் போர் முறைக்கு மாறிச் செல்லவில்லை.

போரில் வெற்றியடைந்தப் பின்னர் ஒரு பகுதியைக் கைப்பற்றி தக்க வைத்துக் கொள்வது தான் நலையான போரினது கோட்பாடாகும்.

இந்த வாய்ப்பை இழக்கும் போது, அந்த வழிமுறையையே தொடர்வது பயனற்றது என்பதோடு அது எஞ்சியுள்ள நிலைகள் மீது எதிரி தனது தாக்குதலை குவிமையப்படுத்த இன்னும் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

எதிரி தனது தாக்குதலை ஒரு முகப்படுத்தியபோது நடவடிக்கைக்கான களத்தை விரிவுபடுத்தாமல், கெரில்லா முறைகளை நடைமுறைப்படுத்தாமல், தனது படைகளையும், மக்களையும் மிகக் குறுகிய பகுதியை நோக்கி பின்வாங்கச் செய்தனர்.

இந்த செயலுத்தி தற்கொலைக்கொப்பானதாகும். ஏனெனில் எதிரியை சாதுர்யத்துடன் சமாளிக்க இந்த நிலப்பரப்பு போதுமானதாக இருக்காது.

போரை பலவீனமான நிலையிலிருந்து உயர்மட்டத்திற்கு விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்திருந்த போதிலும், போரினது சூழலுக்கும் தேவைக்கும் இசைவாக போர் நடவடிக்கைகளை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றும், வளைந்து கொடுக்கும் தன்மையை விடுதலைப் புலிகள் நடைமுறைப்படுத்தவில்லை.

கெரில்லா போர் – நடமாடும் போர் – நிலையான போர் போன்ற பல்வகைப்பட்ட போர் நடவடிக்கைகளை நடத்தி பழுத்த அனுபவம் இருந்த போதிலும் இந்த தவறு ஏன் ஏற்பட்டது?

குடிமக்களின் சாவு அதிகரிக்க அதிகரிக்க உலகச் சமுதாயம் அதாவது ஏகாதிபத்திய அரசுகளும், இந்திய அரசும் இன ஒழிப்புப் போரை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு நிர்பந்தம் அளிப்பார்கள் என விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்த பிற்போக்காளர்கள் அனைவரும் நாம் முன்னால் குறிப்பிட்டதைப் போன்றே தங்கள் நலன்களை அடைவதிலேயே ஆர்வத்துடன் இருந்தனர்.

மக்கள் படும் துயரங்கள் பற்றியோ, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கவுரவமான தீர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதிலோ இவர்களில் எவரும் கவலைப்படவே இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்பொரு முறை 1993ல் கூறியதாவது : “இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நலன்களையே முன்னெடுத்துச் செல்கின்றன.

இன்றைய உலகின் ஒழுங்கமைப்பை, பொருளதார, வர்த்தக நலன்கள் தீர்மானிக்கின்றனவே தவிர, தார்மீக ரீதியிலான நியாயமான சட்டங்களோ, மக்களின் உரிமைகளோ தீர்மானிப்பதில்லை.

சர்வசே உறவுகளும், நாடுகளுக்கிடையிலான ராஜதந்திரங்களும் இதுபோன்ற நலன்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

எனவே நமது இலட்சியத்திற்கான தார்மீக ரீதியிலும், சட்டப்படியான அங்கீகாரத்தை உடனடியாக சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுவிட முடியும் என எதிர்பார்க்க முடியாது…

உண்மையில் போரில் நமது வெற்றி நம்மை மட்டுமே சார்ந்துள்ளது. உலகத்தை சார்நதல்ல.

நமது வெற்றி நமது முயற்சிகளை, நமது வலிமையை, நமது உறுதிப்பாட்டை சார்ந்தே இருக்கிறது...

” ஏகாதிபத்திய பிற்போக்கு  அரசாங்கங்களைப் பற்றிய நியாயமான சரியான புரிதலைக் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் அதை நடைமுறைப்படுத்த தவறிவிட்டார்கள்.

-----------------------------------------------------------------

இதன் தொடர்ச்சி அடுத்தப் பதிவில்....
---------------------------------------------------------------

No comments

Powered by Blogger.