சவாலுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடும், வாலிப முன்னணி மாநாடும் இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தெரிவு நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பான விடயத்தை தலைவர் சபையில் முன்வைத்தார்.

அப்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரது பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பெயரை வழிமொழிய ஆள் இல்லாத காரணத்தால் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோரது பெயர்கள் பதவிக்காக முன்மொழிந்து, வழிமொழிந்து சபையில் அறிவிக்கப்பட்டன.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், தாம் சுயமாக விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து சிரேஸ்ட சட்டத்தரணியும், நீண்ட அரசியல் அனுபவமும் உள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான துரைராசசிங்கம் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக ஏகமனதாக சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

இதன் பின்னர் ஏனைய பதவிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் மரபாக உள்ள தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் வடக்கு, கிழக்கை சேர்ந்த இருவர் அமர்த்தப்படுவது கடந்த காலத்திலிருந்து வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் இம்முறையும் அந்த வழமை பேணப்பட்டுள்ளது. தமிழர்களின் கடந்த கால போராட்ட வரலாற்றில் நீண்ட அரசியல் அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், ஏனைய தெரிவுகளும் மிகவும் அமைதியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்குழு தெரிவில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு, நாளை காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகி, தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.