பயங்கரவாத நிதி முடக்கம் குறித்த தீர்மானம் !

பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜி20 நாடுகள் கூட்டாக இணக்கம் வெளியிட்டுள்ளன.


ஜப்பானில் மாநாட்டின் நிறைவில் ஜி20 நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில், ‘உலகப் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவி அரசியல் தொடர்பான பதற்றங்கள் தீவிரமாகியுள்ளன.

இந்த இடர்களுக்கு தீர்வு காணவும், இதற்கான நடவடிக்கையை எடுக்கவும் தயாராக இருப்பது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, இதற்காக பல்வேறு கொள்கைத் திட்டங்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துவதற்கு, சுதந்திரமான, நேர்மையான, பாகுபாடு இல்லாத, வெளிப்படையான, சீரான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது என்றும், ஜி20 நாடுகளின் சந்தைகளில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியதும், அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, 12-ஆவது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் பிற வர்த்தக அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவது என்று ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளன.

தகவல்கள் மற்றும் தரவுகள் எல்லை தாண்டி பகிரப்படுவது, தனிநபர் தன்மறைப்பு, பாதுகாப்பு, அறிவுசார் சொத்து உரிமைகளுக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதேபோல், உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர்பான பிற நாடுகளின் சட்டத் திட்டங்களுக்கு மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஜி20 நாடுகள் வலியுறுத்துகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நவீன கருவிகளை உருவாக்குவதில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளன.

வளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சர்வதேச செலாவணி நிதியம் செயல்பட வேண்டும். பலமுனை அணுகுமுறையின்கீழ் கடன் பதிவு, கண்காணித்தல் மற்றும் தகவல் அளித்தல் உள்ளிட்ட துறைகளில் வாங்குவோருக்கான திறனை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கிக் குழுமமும் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று ஜி20 நாடுகள் வலியுறுத்துகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளால் எழுந்துள்ள வரி சவால்களுக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி ஸ்திரத்தன்மைக்கு நவீன டிஜிட்டல் செலாவணியால் எந்த வகையிலும் சவால் உருவாகிவிடக் கூடாது. ஊழலை எதிர்கொள்ளும் விவகாரத்தில், 2019-2021-ஆம் ஆண்டுக்கான ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

வெளிநாடுகளால் அளிக்கப்படும் இலஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், வெளிநாட்டு இலஞ்சத்தை குற்றவியல் குற்றமாக்கும் வகையில் ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் தேசிய சட்டம் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றங்களில் தேடப்படும் நபர்களுக்கு புகலிடம் அளிக்காமல், ஊழலை தடுக்கும் சர்வதேச நடவடிக்கைக்கு தலைமை ஏற்கவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இணைந்து செயல்படவும் ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 அமைப்பில், ஆர்ஜெண்டினா, அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, கொரிய குடியரசு, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா, சிலி, எகிப்து, எஸ்தோனியா, நெதர்லாந்து, நைஜிரியா, செனகல், சிங்கப்பூர், ஸ்பெயின், வியட்நாம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.