பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பில் ஊழியர் சங்கத்தினரின் நிலைப்பாடு!!

பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், நாங்கள் அங்கம் வகிக்கின்ற அனைத்துப்பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனமும் பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடைமுறையானது
வெளிப்படையானதாக இருக்கவேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் 876இன் அடிப்படையில் உயர்கல்வி அமைச்சின் பட்டியல் மூலம் ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறுவது நிறுத்தப்படல் வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன்மூலமே ஆட்சேர்ப்பு இடம்பெறல் வேண்டும் என்று கோரியே போராடி வருகின்றோம்.
ஏனெனில் அமைச்சுப்பட்டியல் மூலமான ஆட்சேர்ப்பு நடைமுறையானது சாதாரண ஒரு குடிமகனுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும் என்பதோடு பல்கலைக்கழக ஆளணியில் தகுதிவாய்ந்தவர்கள் இணைவதை குறைத்துவிடும். அதுமட்டுமல்லாது தற்போது ஏற்பட்டுள்ளதுபோன்று அநியாயங்களும் குளறுபடிகளும் அரசியல் ரீதியான தலையீடுகளும் நடைபெறுவதை ஊக்குவிக்கும் என்பதுமே ஆகும்.
இச்சுற்றுநிருபம் நடைமுறைக்கு வந்த 10.06.2006 தொடக்கம் சில ஆண்டுகள் முன்வரை யாழ் பல்கலைக்கழக பட்டியல் முறை ஆட்சேர்ப்பில் ஒரு கட்சிசார்ந்தோர் மட்டுமே உள்வாங்கப்பட்டனர். அப்போதும் ஊழியர் சங்கம் அதற்கெதிராகவும் குரல்கொடுத்துப் போராடியிருந்தது. 2015இல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபோது ஓரளவிற்கு நிலமை முன்னேற்றமடைந்தது. இருந்தபோதும் இறுதியாக உயர்கல்வி அமைச்சராக இருந்த கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளார். இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாம் உண்மையில் வேதனைப்படுகின்றோம்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இலங்கை இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்தும் ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்தும் குரலெழுப்பியிருந்தோம்.
ஆயினும் இவை எவற்றினையும் கருத்தில்கொள்ளாது யாழ் பல்கலைக்கழகத்தில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உயர்கல்வி அமைச்சினால் அண்மையில் அனுப்பப்பட்ட பட்டியலில் பாரம்பரிய தமிழ் பிரதேச ஆட்களின் பெயர்விபரங்களில் ஒரு தொகுதி இடம்பெறாது தவிர்க்கப்பட்டுள்ளமை குறித்தும் இப்பிரதேசத்தைச் சாராத தனது ஆதரவாளர்களை பட்டியலில் உள்வாங்கியுள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் எதுவித விளக்கங்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் உயர்கல்வி அமைச்சராக வந்த ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடமாற்றங்களைப் பெற்றோரை அவர்களது இடமாற்றங்களை நிறுத்தி அவர்களிற்குப் பதிலாக தனது பெயர்ப்பட்டியலின் மூலம் அவ்வெற்றிடங்களை நிரப்ப முனைந்தார். அத்தருணத்தில் பேராதனைப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களும், அனைத்துப் பலகலைக்கழக தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து நாடளாவியரீதியில் தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்திலையில் மேற்படி நடவடிக்கை நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ் பல்கலைக்கழகம் தவிர்ந்த வேறு பல்கலைக்கழகங்களிற்கும் இவ்வாறு உயர்கல்விப் அமைச்சின் பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளபோதும் அங்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாறாக யாழ் பல்கலைக்கழத்தில் மாத்திரம் இத செயற்படுத்தப்படுவதோடு, வழமைக்கு மாறாக மிக வேகமாக (வழமையாக நான்கு ஐந்து மாதங்களாகும் நடைமுறை – தற்போது இரண்டு மூன்று வாரங்களிற்குள்) செயற்படுத்தப்பட முற்படுவதும் எமக்கு பாரிய ஐயப்பாடுகளை தோற்றுவித்துள்ளது. 
மேற்படி பாதிக்கப்படவர்களில்
1. யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பணியிடங்களிற்கான வெற்றிடங்களினால் ஏற்படுகின்ற மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும்பொருட்டு கிளிநொச்சி வளாகத்தில் ஏறத்தாள 50க்கு மேற்பட்டவர்களும் யாழ் பிரதான வளாகத்தில் ஏறத்தாள 30க்கு மேற்பட்டவர்களும் பல்கலைக்கழகத்தினால் தனியார்நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் இங்கு பணியாற்றுவோர்கள். இங்கு இவர்கள் தனியே ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை. காலத்திற்குக் காலம் இங்கு ஒப்பந்த நிறுவனங்கள் மாறினாலும் பணியாளர்களாகிய இவர்கள் மாற்றமுமின்றி இங்கு பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள வரவு பதியும் முறைகள் மூலம் (முன்னர் கையொப்ப பதிவேடு, தற்போது கைவிரலடையாள இயந்திரம்) பல்கலைக்கழகத்தினாலேயே மேற்கொள்ளவும் பராமரிக்கவும்படுகின்றன. மேலும் இவர்களுக்கான விடுப்புக்களும் பல்கலைக்கழக துறைத்தலைவர்க;டாகவே கையாளப்படுகின்றன. இவர்களில் சிலர் யாழ் பல்கலையில் 3½ வருடங்கள் வரை பணிபுரிந்தும் உள்ளனர்.
2. யாழ் பல்கலைக்கழகத்தில் மூலம் பட்டதாரிகளாக வெளியேறியவர்களும், அரசின் வேறு தொழிற்பயிற்சி நிறுவனங்களான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம், தொழிநுட்பக் கல்லூரி போன்றவற்றில் தொழில் சார் கற்கைகளை பயின்றவர்களும் தொழிற்பயிற்சிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் 06 மாதங்கள், 01 வருடங்கள் மற்றும் அதற்கு கூடிய காலப்பகுதிகள் பட்டதாரிப் பயிலுநர்களாக அல்லது பயிலுநர்களாக பணியாற்றியவர்கள்
3. ஏதோ ஒருவகையில் அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் யாழ் பல்கலைக்கழக கல்விசாரா பணியிடங்களின் வெற்றிடங்களினை நிரப்ப பல்வேறுபட்ட தரங்களில் பல்வேறுபட்ட தகமைகளுடன் முயற்சிப்பவர்கள்.
போன்றோர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும்; யாழ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்காக ஒரு தடைவ மட்டுமல்ல இரண்டு அல்லது மூன்று முறைகள் ஒவ்வொரு புதிய உயர்கல்வி அமைச்சரும் வரும்போது கொழும்பு சென்று உயர் கல்வி அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆயினும் தற்போது வந்துள்ள உயர்கல்வி அமைச்சின் பெயர்ப்பட்டியலில் இவர்களது பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப்பட்டியல் பொதுவெளியில் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்படுத்துமாறு நாங்கள் கோரியபோதும் அது தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தகவலறியும் சட்டம்மூலம் அப்பட்டியலை பெற விண்ணப்பித்திருந்தும் அவ்விபரங்கள் தயார் என அறிந்து அதற்குரிய கட்டணங்கள் செலுத்துமாறு கோரப்பட்டதன் அடிப்படையில் நான்கு (04) தினங்களின் முன்னர் அக்கட்டணம் செலுத்தப்பட்டும் இற்றைவரை அவ்விபரங்கள் எமக்கு வழங்கப்படவில்லை. விபரங்கள் கிடைத்ததும் அது எம்மால் வெளிப்படுத்தப்படும். அனைவரும் அதனைப்பார்த்து உண்மை நிலவரங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.
இவ்விடயங்கள் தொடர்பில் சில தவறான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. பல்கலைக்கழக ஊழியர்களின் பிள்ளைகள் சிலர் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ளமையால்தான் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இதை தடுப்பதாக கூறப்படுகின்றது. இங்கு ஒரு விடயத்தினை நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். பல்கலைக்கழக ஊழியர்களின் பிள்ளைகளோ அல்லது வேறு சாதாரண நபர்களோ எவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் 876இன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுக் கடிதத்துடன் சென்று உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்காக பதிவுசெய்ய உரித்துடையவர்கள் அத்துடன் அதுதான் தற்போது சட்டபூர்வமான நடைமுறையுமாகும்.
எனினும் பல்கலைக்கழக ஊழியர்களின் பிள்ளைகளிற்கு தான் வேலைவாய்பு வழங்கவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமென்றால் நாங்கள் மேற்கூறியதுபோன்று “விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன்மூலமே ஆட்சேர்ப்பு இடம்பெறல் வேண்டும்” என்ற கோரிக்கையினை முன்னிறுத்தவேண்டியதில்லை.
இவ்விடயத்தில் வேறு எவரும் விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன்மூலமே ஆட்சேர்ப்பு இடம்பெறல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவும் இல்லை, வலியுறுத்தவும் இல்லை.

No comments

Powered by Blogger.